சவுதி அரேபியாவில் உள்ள இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை உலகின் மிக நீளமான நேரான வீதி என்கிற சிறப்பைப் பெற்றிருக்கிறது. இந்த நெடுஞ்சாலை 239 கி.மீ. (149 மைல்) நீளம் கொண்டது.
சவுதி அரேபியாவின் நெடுஞ்சாலை 916 மைல்களுக்கு (1,474 கிமீ) நீண்டுள்ளது. இதிலிருந்து பல சாலைகள் பிரிந்து, பல நகரங்களை இணைக்கின்றன. தென்மேற்கில் உள்ள Al Darb நகரத்தையும் கிழக்கில் Al Batha நகரத்தையும் இணைக்கும் வீதி மிக நீளமாகவும் நேராகவும் இருக்கிறது. இது மிகப் பரபரப்பான சாலையாக உள்ளது. சவுதி அரேபியாவின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்துக்குச் சரக்குகளை அனுப்பும் டிரக்குகள் அதிகம் பயணிக்கப்படுகிறது.
இது ருப் அல் காலி பாலைவனத்தின் வழியாக 240 கி.மீ. நீளத்திற்கு வளைவுகள் இன்றி நேரான பாதையாக இருப்பதால், மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்தக் குறிப்பிட்ட வீதி உட்கட்டமைப்பு முதலில் ஒரு தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானதாக இருந்தது. பிறகு அது பொதுவழிச் சாலை அமைப்பின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.
இந்தச் சாலை உலகின் மிக நீளமான நேரான சாலைக்கான கின்னஸ் சாதனையையும் பெற்றுவிட்டது.
ஒருபக்கம் கின்னஸ் சாதனை படைத்துவிட்டாலும் இன்னொரு பக்கம், இது ‘மிகவும் சலிப்பான சாலை’ என்றும் அழைக்கப்படுகிறது. பாலைவனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்வது அலுப்பானது.
கண்களுக்கு எட்டிய தூரம் வரை ஒரே மாதிரியான காட்சிகளாகவே தென்படும். அதில் வளைவுகள் இல்லாததால், தட்டையான நிலப்பரப்பில் அமைதியாக வாகனங்களை ஓட்டிச் செல்வது சலிப்பைத் தருவதாக சாரதிகள் சொல்கிறார்கள். இந்த மிக நீளமான நேரான சாலையைக் கடக்க சுமார் 2 மணி நேரம் எடுக்குமாம்.