நாட்டின் நிதிமுகாமைத்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இரண்டு சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். எம்முடன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
கே: அரசாங்கத்தினால் புதிய நிதிச்சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: ஆம், ‘பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலம்’ மற்றும் ‘அரச நிதிமுகாமைத்துவ சட்டமூலம்’ ஆகிய இரண்டு சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் அரச நிதிமுகாமைத்துவ சட்டமூலம் முக்கியமானதாகும். அரசின் நிதிநிர்வாகத்தை சீரமைக்கும் வகையில் இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 1935- இல் நிதி விடயங்களுக்காக நிதி ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஆணைக்குழுவிடமிருந்து கிடைக்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட்டு வருகின்றோம். 1965 இல் விதிமுறைகளாக மாறியது. 1992 இல், அதுவும் ஓரளவு திருத்தப்பட்டது. அதன் பின்னர், 2003 இல் அரச நிதிமுகாமைத்துவச் சட்டத்தைக் கொண்டுவந்தபோதும், அதனை நடைமுறைப்படுத்துவதில் வெற்றி காணப்படவில்லை. இவ்வாறான நிலையிலேயே அரசாங்கம் இரண்டு முக்கிய சட்டமூலங்களைச் சமர்ப்பித்துள்ளது.
கே: இந்த இரண்டு சட்டமூலங்களும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆலோசனைக்கு அமைய கொண்டுவரப்பட்டவையா?
பதில்: சர்வதேச நிதி அமைப்புகள், குறிப்பாக உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்றன நமது நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப நிதிரீதியான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளன. ஒரு நிதிச்சட்டமூலத்தின் கீழ் இவற்றைக் கொண்டுவர வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட விடயம் அல்ல. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட முயற்சியாகும்.
அதேநேரத்தில், நாட்டில் நிதிநெருக்கடி ஏற்பட்டது. அதன் பிறகு, இதுபற்றி ஆய்வு செய்தபோது, நமது நிதி அமைப்பின் மெத்தனமே இந்தச் சம்பவங்களுக்குக் காரணம் என்று கண்டறிந்தோம். இவ்வாறான நிலையிலேயே நாட்டை சரியான பாதைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் இரண்டு சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் நான் சொன்னது போல் இந்த இரு சட்டமூலங்களையும் துரிதப்படுத்துவதற்கு நிதிநெருக்கடியும் ஒரு காரணமாக அமைந்தது.
கே: வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் நீண்டகாலமாக நாம் எதிர்கொண்டுவரும் விடயங்கள். எனவே, இந்தச் சட்டமூலங்களை முன்னரே கொண்டுவந்திருக்க முடியாதா?
பதில்: சுதந்திர இலங்கையின் 70 வருடங்களிலும் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறை இருந்தது. இருந்தபோதும் நான் முன்பே கூறியது போல், 2013 இல் இருந்து, இந்த நிதிச்சட்டமூலங்களைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2023 இல் அது முடிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதிக்கட்டுப்பாட்டைப் பொறுத்தவரை இது எங்களுக்குக் காணப்படும் பாரியதொரு சவாலாகும். இவ்வாறான நிலையில் இச்சட்டமூலங்களைத் தற்போதாவது கொண்டுவரக் கிடைத்திருப்பது மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்த நிதிக்கான உரிமையாளர்கள் மக்கள் என்பதால், அரசநிதி முறையாக முகாமைத்துவம் செய்ப்பட வேண்டும்.
கே: சில சட்டங்களில் குறைபாடுகள் இருப்பது கடந்த காலங்களில் உணரப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் குறித்த சட்டமூலத்தில் குறைபாடுகள் இல்லையென்ற உறுதிப்பாட்டை வழங்க முடியுமா?
பதில்: சர்வதேச நிதிநிறுவனங்களின் வழிகாட்டுதலின் கீழ் அதிக நேரம் செலவழித்து இந்தச் சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே, குறைபாடுகள் ஏற்படுவதற்குக் குறைவாகவே உள்ளது. எனினும், காலப்போக்கில் ஏதாவது குறைபாடுகள் ஏற்பட்டாலும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு காலத்துக்கு ஏற்ற வகையிலான திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இந்தச் சட்டமூலங்கள் ஊடாக நிதிக்கட்டுப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது மிகத்தெளிவாக உள்ளது. உதாரணமாக, இது ஒருவருக்கொருவர் இடையே உள்ள பொறுப்புகளைக் காட்டுகிறது. நிதி அமைச்சின் செயலாளரின் பொறுப்புகள் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய அதிகாரிகளின் பொறுப்புகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே, இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
கே: இந்தச் சட்டமூலம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று கூற முடியுமா?
பதில்: ‘நிபந்தனைகள்’ என்ற வார்த்தை எமக்குப் பொருத்தமானதல்ல. சர்வதேச நாணய நிதியத்துக்கும் எமக்கும் இடையில் ஒப்பந்தமே உள்ளது. நிபந்தனைகள் இல்லை. 2000ஆம் ஆண்டிலும் 2013ஆம் ஆண்டிலும் இதைப் பற்றிப் பேசினோம். எங்கே தவறு செய்தோம்? அது ஏன் தவறு என்று சர்வதேச நாணய நிதியம் எமக்குச் சுட்டிக்காட்டியது. எனவே, ஒருங்கிணைந்த நிதிச்சட்டத்தை உருவாக்க வழிகாட்டினார்கள். அதன்படி, அவர்களின் பரிந்துரைகள் மற்றும் ஒப்பந்தங்களின்படி நாங்கள் செயல்பட்டோம். அந்த ஒப்பந்தங்கள் இந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்தின.
கே: அப்படியெனில் விசாரணைக்குழு இல்லையென்றால் சிறப்புத் திட்டக்குழு போன்ற கட்டமைப்பு இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதா?
பதில்: நிதி அமைச்சருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிறப்புத் திட்டங்களுக்குப் பணம் ஒதுக்குவது நீங்கள் சொன்னது போல் ஒரு குழு மூலமாகத்தான் செய்யப்படுகிறது. அந்தக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செலவு செய்ய முடியாது. அந்தக் குழுவில் திட்டம் தொடர்பான பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளனர். இதன் மூலம் கடுமையான நிதி ஒழுக்கத்துடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கே: இச்சட்டமூலங்களுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என நினைக்கிறீர்களா?
பதில்: எதிர்க்கட்சியில் பலவற்றையும் எதிர்க்கும் அரசியல்வாதிகள் பலர் இருக்கின்றனர் என்பதால் அது குறித்து ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. தற்போது குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது. அதற்குச் சொல்லப்பட்ட கதைகள் பலவாகும். ஒருபுறம், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு விரைவான தீர்வாக சலுகை வழங்கப்பட்டது. மேலும் நெல் விவசாயிக்கு விரைவான நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தேர்தலுக்காக அரசு எடுத்த முடிவுகள் அல்ல.
ஆனால் எதிர்க்கட்சிகளின் கதைகளைப் பாருங்கள். ஒரு பக்கம் வரியைக் குறைப்பதாகச் சொல்கிறார்கள், இன்னொரு பக்கம் சம்பளத்தை உயர்த்துவதாகச் சொல்கிறார்கள். இவை இரண்டும் வானமும் பூமியும் போன்றவை.
கே: மத்திய வங்கியின் சுதந்திரமும் இச்சட்டமூலங்களுடன் தொடர்புடையது அல்லவா? குறிப்பாக கடன் முகாமைத்துவச் சட்டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது?
பதில்: மத்திய வங்கியின் சுதந்திரம் குறித்து நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இப்போது இந்த சம்பளப் பிரச்சினை ஒரு கோணத்தில் மட்டுமே பார்க்கப்படுகிறது. மத்திய வங்கியை சுதந்திரமாக மாற்றுவதன் மூலம், அரசாங்கம் விரும்பியபடி மத்திய வங்கி செயல்படாது. உதாரணமாக, அரசாங்கம் மத்திய வங்கிக்கு பணத்தை அச்சிட உத்தரவிட முடியாது. 3 ட்ரில்லியன் கடந்த காலத்தில அச்சிடப்பட்டது. மத்திய வங்கி சுயாதீனமாக இருந்தாலும், மத்திய வங்கி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும். உதாரணமாக, சம்பளப் பிரச்சினை எழுப்பப்பட்ட போது, மத்திய வங்கியின் ஆளுநரும் மற்றவர்களும் பாராளுமன்றத்திற்கும் நிதிக் குழுவிற்கும் அழைக்கப்பட்டனர். மேலும் அந்த சம்பள உயர்வு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கி சுதந்திரமாக மாறினாலும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளதை காணமுடிகிறது.