டி20 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி சந்தித்த தோல்வி மோசமானது. அதற்கு நாணய சுழற்சி தொடக்கம் ஆட்டத்தின் கடைசி பந்துவரை இலங்கை இழைத்த ஏகப்பட்ட தவறுகள் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், அதுபற்றி ஆர அமர்ந்து அலசி ஆராய்வதற்கு நேரம் இல்லை.
நியூ யோர்க்கில் நடந்த போட்டி முடிந்த கையோடு இலங்கை வீரர்களால் ஹோட்டல் அறைக்கு ஓட்டம் பிடிக்க வேண்டி இருந்தது. அந்த ஹோட்டல் புரூக்லியில் இருந்து. அது போட்டி நடந்த மைதானத்தில் இருந்து ஒன்றரை மணி நேர தூரம். உடனடியாக புறப்பட்டால் தான் டலாஸ் செல்வதற்கு விமானத்தை பிடிக்க முடியும். டலாஸிலேயே பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது போட்டி இருந்தது.
தென்னாபிரிக்காவிடம் தோற்றதால் பங்களாதேஷுக்கு எதிரான போட்டி ஒருவகையில் வாழ்வா, சாவா ஆட்டமாக மாறி இருந்தது. காலை போட்டியை முடித்த இலங்கை அணியினர் ஒன்றரை மணி நேரம் பயணித்து ஹோட்டலுக்கு சென்று உடைமைகளை எடுத்துக்கொண்டு நேராக விமான நிலையம் போக வேண்டும். விமானம் மாலை 6 மணிக்கு இருந்தது.
எனவே, வீரர்களின் உடைகள் மற்றும் மற்ற விடயங்களை பொதி செய்யும் வேலையை அணி முகாமையே செய்ய வேண்டி இருந்தது. ஏனென்றால் போட்டியை முடித்துவிட்டு இதனை செய்யக்கூட நேரம் இருக்கவில்லை.
தென்னாபிரிக்காவுடன் ஆடுவதற்கு நியூயோர்க் வந்த கதையும் அவசரத்துக்கு பிறந்த கதைதான். பிளோரிடாவில் அயர்லாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் ஆடிய இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் ஆடுவதற்கு மியாமி விமானநிலையத்திற்கு வந்தால் விமானம் புறப்படுவதில் ஏழு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
நியூயோர்க் நகருக்கு வெள்ளிக்கிழமை (மே 31) இரவு எட்டு மணிக்கே சென்றடைய திட்டமிட்டபோதும் அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கே போய்ச்சேர முடிந்தது. இதனால் அன்றைய தினம் காலையில் இருந்த பயிற்சியும் ரத்துச் செய்யப்பட்டது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டி தினத்திலும் இதே கதைதான். பொதுவாக போட்டி அட்டவணை இந்தியா குறிப்பாக தெற்காசிய தொலைக்காட்சி ரசிகர்களையும் கருத்தில் கொண்டே தயாரிக்கப்பட்டிருக்கிறது. தென்னாபிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டி இலங்கை நேரப்படி பார்த்தால் இரவு எட்டு மணிக்கு ஆரம்பித்தாலும் அமெரிக்க நேரத்தில் காலையிலேயே ஆரம்பமாகிறது.
எனவே இலங்கை வீரர்கள் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு மைதானத்திற்கு வருவதற்கே ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்ளும் சூழலில் மைதானம் வந்து பயிற்சி பெறுவதற்குக் கூட நேரம் இருக்காது. நேரடியாக போட்டியில் குதித்துவிட வேண்டும். இத்தனைக்கும் போட்டி தினத்தில் இலங்கை வீரர்கள் மைதானத்திற் அதிகாலை 5 மணிக்கே புறப்பட வேண்டி இருந்தது.
டி20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில் D குழுவில் ஆடும் இலங்கை அணி நான்கு போட்டிகளில் பங்கேற்கும். ஆனால் அந்த நான்கு போட்டிகளும் நான்கு இடங்களில் நடைபெறுகின்றன. எனவே போட்டிக்கான தயார்படுத்தல் ஒருபக்கம் இருக்க போட்டிக்குச் செல்வதற்கான பயணங்களுக்கு பிரத்தியேகமாக தயாராக வேண்டும். இது இலங்கை அணிக்கு மேலதிகச் சுமை.
இது சரிசமமாகவும் இல்லை. முதல் சுற்றில் இலங்கையுடன் நெதர்லாந்து அணி மாத்திரமே இப்படி நான்கு போட்டிகளை வெவ்வேறு இடங்களில் ஆடும் நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கிறது. இதுவே இந்திய அணியின் போட்டி அட்டவணையை பார்த்தால் முதல் சுற்றின் முதல் மூன்று போட்டிகளும் நியூயோர்க்கில் ஒரே மைதானத்திலேயே நடைபெறுகிறது.
இந்திய அணி தங்கும் ஹோட்டல் கூட மைதானத்தில் இருந்து 14 நிமிட தூரத்தில்தான் இருக்கிறது.
இந்தப் போட்டி அட்டவணை மற்றும் பயண ஏற்பாடுகளில் தமது அணிக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று அணித் தலைவர் வனிந்து ஹசரங்க மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன வெளிப்படையாகவே குற்றம் கூறுகிறார்கள். இது பற்றி சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலுக்கு எழுத்துமூலம் முறையிட்டதாக இலங்கை அணி முகாமையாளர் மஹிந்த ஹலன்கொட குறிப்பிடுகிறார்கள். என்றாலும் எல்லாமே காலதாமதமானது. இந்தத் தடங்கல்களை தாண்டினாலேயே உலகக் கிண்ணத்தை வெல்ல முடியும் என்பதே அணிக்கு இருக்கும் மேலதிக சவால்.
‘எமக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. நான்கு வெவ்வேறு மைதானங்களில் போட்டிகள் இருப்பதால் (போட்டிக்குப் பின்னர்) நாம் ஒவ்வொரு நாளும் பயணிக்க வேண்டி இருக்கிறது. இது நியாயமில்லை.
புளோரிடாவின் மியாமியில் இருந்து நாம் விமானத்தை பெறுவதற்கு விமானநிலையத்தில் எட்டு மணி நேரம் அளவு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாம் சுற்றித் திரிகிறோம். நாம் இரவு 8 மணிக்கே புறப்பட வேண்டும், ஆனால் எமக்கும் அதிகாலை 5 மணிக்கே விமானம் இருந்தது. இது உண்மையிலேயே எமக்கு பெரும் அநீதியாகும், எப்படி இருந்தபோதும் போட்டியில் அது பொருட்டல்ல’ என்று கிரிக்கின்போ இணையதளத்திற்கு கவலையை கொட்டித் தீர்த்தார் தீக்ஷன.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் நடந்த ஊடக சந்திப்பில், தென்னாபிக்காவுக்கு எதிரான போட்டியில் ஏற்பாட்டில் பிரச்சினைகள் தாக்கம் செலுத்தியதாக இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்க குறிப்பிட்டார்.
‘எம்மால் அதனை கூற முடியாது. கடந்த சில நாட்களாக நாம் கடுமையாக சிரமப்பட்டோம். நான்கு போட்டிகளும் நான்கு மைதானங்களில் உள்ளன. அது கடுமையானது. எமக்கு (மைதானங்கள் பற்றி) எதுவும் தெரியாது. இது தான் நியூயோர்க்கில் எமது முதல் போட்டி. அடுத்த போட்டி டலாஸில் உள்ளது. (அந்த மைதானம் பற்றி) எமக்கு எதுவும் தெரியாது. அடுத்த போட்டி புளோரிடாவில் உள்ளது. அங்கேயே நாம் இரண்டு (பயிற்சி) போட்டிகளை ஆடினோம். அதுவே எமக்கு இருக்கும் ஒரே அனுகூலமாகும்’ என்று ஹசரங்க குறிப்பிட்டார்.
ஒரு போட்டியில் ஓர் அணியின் பலம் மற்றும் பலவீனம் மாத்திரமல்ல மைதானத்திற்கு வெளியில் மற்ற அணிக்கு கிடைக்கு சாதகமான சூழல் கூட ஒரு அணிக்கு நியாயமற்ற வகையில் பாதகமாக அமையும். அதுவும் விசேடமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
‘ஒரே மைதானத்தில் போட்டிகளில் ஆடும் அணிகளை என்னால் குறிப்பிட முடியும். அப்படியானால் அவர்களுக்கு ஆடுகளம் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். அவர்கள் பயிற்சிப் போட்டியையும் அதே மைதானத்தில் ஆடினார்கள். வேறு யாருக்கும் அப்படிக் கிடைக்கவில்லை.
நாம் பயிற்சிப் போட்டியை புளோரிடாவில் ஆடினோம். புளோரிடாவில் எமது மூன்றாவது போட்டி உள்ளது. இந்த ஆண்டு, எதுவும் மாறாது என்பதை நான் அறிந்திருப்பதால், அடுத்த ஆண்டு அனைவரும் மறுபரிசீலனை செய்வார்கள் என்று நான் நினைக்கும் சில விடயங்கள் உள்ளன’ என்றார் தீக்ஷன.
நேற்று நடந்த பங்களாதேஷுக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் கூட இலங்கை அணிக்கு சுதாகரிப்பதற்கு நேரம் இல்லை. ஏனென்றால் அவசரமாக லோடர் ஹில் புறப்பட வேண்டும். அங்கே தான் வரும் ஜூன் 12 ஆம் திகதி நேபாளத்திற்கு எதிரான போட்டி இருக்கிறது.
எஸ்.பிர்தெளஸ்