புகழ்ச்சியை விரும்பாத உலக தலைவர்களில் ஒருவர் விளாடிமிர் இல்யிச் லெனின். இவர், ஆசிய ஐரோப்பிய கண்டங்களில் பரவியிருந்த சோவியத் ரஷ்ய அதிபராக பதவி வகித்தவர்.
ஒருமுறை, அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட நண்பர்கள் விரும்பினர். அதில் பங்கேற்க லெனினை வற்புறுத்தி அழைத்தனர். முதலில் மறுத்தவர் இறுதியில் ஒப்புக் கொண்டார்.
கூட்டம் ஆரம்பமானது. முக்கிய பிரமுகர்கள், லெனினை மிகவும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். விழாவுக்கு வருவதாக ஒப்புக்கொண்டிருந்த லெனின், அந்த நேரத்தில் வரவில்லை.
புகழ்பாடும் சொற்பொழிவுகள் முடிந்த பின், விழா நடந்த இடத்துக்கு அமைதியாக வந்தார். நண்பர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நன்றி தெரிவித்தவர், தாமதத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
பின், ‘இவ்வளவு நேரம் நிகழ்த்திய பேச்சுகளை எல்லாம் கேட்காமலிருக்க என்னை அனுமதித்ததற்காக நன்றி. புகழ்ச்சி என்பது மனிதனை எளிதில் வீழ்த்தும் மிக மோசமான வியாதி…’ என்று சுருக்கமாக பேச்சை முடித்தார் லெனின்.