Home » உலகக் கிண்ணம் ஆரம்பம்

உலகக் கிண்ணம் ஆரம்பம்

by Damith Pushpika
June 2, 2024 6:00 am 0 comment

புது இடம், அதிக அணிகள், அதற்கேற்ப அதிக போட்டிகள், அதிக சவால் என்று டி20 உலகக் கிண்ணப் போட்டி இன்று (02) ஆரம்பமாகிறது. உண்மையில் அமெரிக்க நேரப்படி பார்த்தால் நேற்றே போட்டி ஆரம்பமாகிறது என்றபோது, காலத்தில் இலங்கை முந்திச் செல்வதால் இலங்கை நேரப்படி இன்று காலை 6 மணிக்குத் தான் டி20 உலகக் கிண்ணத்தின் முதல் போட்டி ஆரம்பமாகிறது.

அதிலும் முதல் போட்டியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. டலாஸில் நடைபெறும் இந்தப் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுவது நவீன கிரிக்கெட்டுக்கு பரீட்சயம் இல்லாததாக இருந்தாலும் இந்த இரு அணிகளுமே கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது சர்வதேச போட்டியில் ஆடின. அது நிகழ்ந்தது 1844 ஆம் ஆண்டு நியூயோர்க்கில். ஆனால் தற்காலத்தை பொறுத்தவரை இந்த இரு அணிகளும் கத்துக்குட்டிகள்தான்.

கடைசியாக 2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் டி20 உலகக் கிண்ணம் நடந்தபோது இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து சம்பியன் கிண்ணத்தை வென்றது. அப்போது மொத்தம் 16 அணிகளுடன் 45 போட்டிகள் தான் நடந்தன. இம்முறை மொத்தம் 20 அணிகளுடன் 55 போட்டிகள் நடைபெறப்போகின்றன.

மேற்கிந்திய தீவுகளுடன் அமெரிக்காவும் சேர்ந்தே போட்டிகளை நடத்துகின்றன. ஆரம்ப சுற்றுப்போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுவதால் அது எவ்வாறு இருக்கும் என்பது கிரிக்கெட் உலகுக்கு புதிதாக அமையும்.

உலகக் கிண்ணத்திற்கென்றே தயாரிக்கப்பட்ட தற்காலிக மைதானங்கள் மற்றும் பாராம்பரிய மைதானங்களை புதுப்பித்தே போட்டிகள் நடத்தப்படுகின்றன. எப்படி இருந்தலும் அமெரிக்காவில் ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது தான் பெரிய அணிகளுக்கு இருக்கு பெரிய குழப்பமும் சவாலுமாக அமையும்.

அமெரிக்கா முதல் முறை உலகக் கிண்ணத்தை நடத்துவது மாத்திரம் அன்றி அது முதல் முறையாகவே உலகக் கிண்ணத்தில் ஆடப்போகிறது. அத்தோடு கனடா மற்றும் உகண்டா அணிகளும் முதல் முறையாகவே டி20 உலகக் கிண்ணத்தில் களமிறங்குகின்றன.

முந்தைய டி20 உலகக் கிண்ணத்தில் முதல் எட்டு இடங்களை பெற்ற இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நெதர்லாந்து மற்றும் இலங்கை இம்முறை நேரடி தகுதி பெற்ற நிலையில் தரவரிசையில் அடுத்து இருந்த ஆப்கான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் உலகக் கிண்ணத்திற்கு முன்னேறின.

ஐரோப்பிய பிராந்திய தகுதிகாண் சுற்றின் மூலம் அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளும் கிழக்காசிய–பசிபிக் தகுதிகாண் சுற்றின் மூலம் பப்புவா நியு கினியும், ஆசிய தகுதிகாண் சுற்றின் மூலம் ஓமான் மற்றும் நேபாள அணிகளும் தகுதிபெற்றன. ஆபிரிக்க பிராந்திய தகுதிகாண் சுற்றில் உகண்டாவுடன் நமீபியாவும் உலகக் கிண்ணத்திற்கு முன்னேறியது.

போட்டி விபரம்

ஏ குழு: 

இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா

பி குழு:

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நமீபியா, ஸ்கொட்லாந்து, ஓமான்

சி குழு:

நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், உகண்டா, பப்புவா நியு கினி

டி குழு:

தென்னாபிரிக்கா, இலங்கை, பங்களாதேஷ், நெதர்லாந்து, நேபாளம்

20 அணிகளும் ஆரம்ப சுற்றி ஐந்து அணிகளாக பிரிக்கப்பட்ட நான்கு குழுக்களின் கீழ் மோதவுள்ளன. இதன்போது ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ரவுன் ரொபின் முறையில் தலா ஒரு முறை மோதும். முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அவ்வாறு எஞ்சிய எட்டு அணிகளும் சுப்பர் 8 சுற்றில் தலா நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு இரு குழுக்களில் மோதும்.

ஆரம்ப சுற்று:

இதில் சுப்பர் 8 சுற்றுக்கு பிரதான எட்டு அணிகளான இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை முன்னேறும் பட்சத்தில் அந்த சுற்றில் குழு நிலை முன் திட்டமிப்பட்டபடி இருக்கும். அது குழு நிலையின் முடிவுகள் எந்த வகையில் இருந்தபோதும் மாறாது.

எனவே சுப்பர் 8 சுற்று இப்படி இருக்கக் கூடும்

குழு 1:

இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை

குழு 2:

பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா

இதில் திட்டமிடப்படாத அணி சுப்பர் 8 இற்கு முன்னேறும் பட்சத்தில் அந்த அணி எந்த அணி வெளியேறுகிறதோ அதன் இடத்தை பிடிக்கும். ஒருவேளை ஒரே குழுவில் திட்டமிடப்படாத இரு அணிகள் சுப்பர் 8 சுற்றுக்கு வந்தால் அது ஆரம்ப சுற்றில் பெற்ற இடத்தை பொறுத்து சுப்பர் எட்டில் இடம்பெறும்.

சுப்பர் 8 இல் ஒவ்வொரு அணியும் தமது குழுவில் இருக்கும் மற்ற அணியுடன் மோதி இரண்டு குழுக்களிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

மோசமான காலநிலையால் அரையிறுதி போட்டி ஒன்று முழுமையாக நடத்த முடியாமல்போனால் சுப்பர் 8 இல் முன்னிலையில் உள்ள அணி இறுதிக்கு தகுதி பெறும்.

இலங்கைக்கு எப்படி?

வனிந்து ஹசரங்க தலைமையிலான இலங்கை அணி துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் ஒப்பீட்டளவில் வலுவாகவே இருக்கிறது. குறிப்பாக வனிந்து, மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷங்க, மதீஷ பதிரண, நுவன் துஷார என்று பந்துவீச்சு முகாம் நம்பிக்கை தருகிறது. துடுப்பாட்டத்தில் நின்று பிடித்து நிதானமாக ஆடும் வீரர்களுக்கே சற்று முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. அது அங்குள்ள ஆடுகளங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பது தேர்வாளர்களின் நம்பிக்கை.

என்றாலும் கடந்த செவ்வாயன்று நடந்த நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. பயிற்சிப் போட்டி என்பதால் அதனை பெரிதாக பொருட்படுத்த முடியாது என்றாலும், அதனை குறிப்பிடத்தக்க பின்னடைவாக பார்க்கலாம்.

குறிப்பாக இலங்கை அணி ஆரம்ப சுற்றிலும் நெதர்லாந்தை எதிர்கொள்ளப்போவதால் எதிரணிக்கு இது உற்சாகத்தை தரக்கூடியதாக இருக்கும்.

என்றாலும் அனுபவ வீரர் அஞ்சலோ மத்தியூஸ், முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க, குசல் மெண்டிஸ் மற்றும் வனிந்து ஹசரங்க போன்ற வீரர்கள் வேகமாக துடுப்பெடுத்தாடக் கூடியவர்களாக உள்ளனர்.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆடுகளங்கள் சற்று மந்தமாக சுழற்பந்துக்கு உதவக் கூடியதாக இருக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. என்றாலும் பௌண்டரி எல்லை சிறியது என்பது கவனிக்க வேண்டியது. அதற்கு ஏற்பவே இலங்கை அணித் தேர்வும் இருக்கிறது. ஆனால், வலுவான அணிகளின் வேகமான துடுப்பாட்டங்கள் இந்த நம்பிக்கையை எத்தனை உண்மையாக்கும் என்பது போகப்போகத் தான் புரியும்.

இலங்கை அணியின் போட்டிகள்:

ஜூன் 03: இலங்கை – தென்னாபிரிக்கா, நியூயோர்க், இரவு 8.00

ஜூன் 08: இலங்கை – பங்களாதேஷ், டலாஸ், காலை 6.00

ஜூன் 12: இலங்கை – நேபாளம், லோடர்ஹில், அதிகாலை 5.00

ஜூன் 17: இலங்கை – நெதர்லாந்து, கிரோஸ் இஸ்லெட், காலை 6.00

யாருக்கு வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு என்று வரும்போது கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியா தான் முன்னிலையில் இருக்கும். ஐ.பி.எல். முடிந்த கையோடே இந்திய அணி உலகக் கிண்ணத்தில் களமிறங்குவதன் சாதகம் பற்றி பெரிதாக பேசப்பட்டாலும் அது பாதகமாகவும் தாக்கம் செலுத்தலாம்.

ஓட்ட இயந்திரமாக முன்னணி வீரர் விராட் கொஹ்லி செயற்பட்டாலும் அவரது ஓட்ட வேகம் சந்தேகங்களை எழுப்புகிறது. ரோஹித் ஷர்மா தொடர்ந்து ஆபத்தான வீரராக இருக்கிறார். என்றாலும் இந்தியாவில் பந்துவீச்சு வரிவை வலுவாக இருப்பதோடு அது எந்த நேரத்திலும் போட்டியை திசைதிருப்பும் பலம்மிக்கது.

மற்றது அவுஸ்திரேலிய அணி பற்றியும் பலரும் அவதானம் செலுத்துகிறார்கள். அண்மையில் நடந்த ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற அந்த அணியின் உற்சாகம் இன்னும் தணியவில்லை. அணியின் கட்டமைப்பு எப்படி இருந்தபோதும் அணித் தலைவர் பட் கம்மின்ஸ் தலைமை பற்றி நம்பிக்கை உச்சத்தில் இருக்கிறது.

மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் களமிறங்கும் நடப்புச் சம்பியன் இங்கிலாந்து அணியில் அதிரடி துடுப்பாட்ட வரிசை ஒன்று இருக்கிறது. என்றாலும் ஆட்ட சூழல் அதற்கு பொருந்துமா என்ற மிகப்பெரிய கேள்வியும் இன்னும் விடுவிக்கப்படாது உள்ளது. எனவே இந்தத் தொடரில் இங்கிலாந்துக்கு முழுமையாக சாதகமாக அல்லது பாதகமாக இருக்க வாய்ப்பு அதிகம்.

இம்முறை உலகக் கிண்ணத்திற்கு பாகிஸ்தான் கடைசியாகவே அணியை தேர்வு செய்து அறிவித்தது. அணித் தேர்வில் அதிகம் கவனம் செலுத்தி இருப்பது தெரிகிறது. அதன் பந்துவீச்சு வரிசை எப்போதும்போல் வலுவாக இருந்தாலும் துடுப்பாட்ட வரிசையில் கோளாறு தெரிகிறது. என்றாலும் பாகிஸ்தான் என்பதால் எதுவும் நடக்கலாம்.

அண்மைக்காலங்களில் உலகக் கிண்ணங்களில் நியூசிலாந்து சிறப்பாக ஆடி வருகின்றபோதும் இன்னும் கிண்ணத்தை வெல்லத்தான் முடியாமல் இருக்கிறது. அது இம்முறையாவது கைகூடச் செய்ய கடுமையாக போராடும். தென்னாபிரிக்காவின் கதை சற்று முரணானது. அது உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு வலுவான அணியுடனேயே இருக்கிறது. இம்முறையாவது அதிர்ஷ்டத்திற்கு காத்திருக்கிறது.

போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் பற்றி எதிர்வுகூற முடியாது. அந்த அணியில் பந்தை பௌண்டரிக்கு வெளியே விளாசும் துடுப்பாட்ட வரிசை இருக்கிறது. பந்துவீச்சாளர்கள் ஒத்துழைப்பாக இருந்தால் அந்த அணியை அசைக்க முடியாது.

இதற்கு அப்பால் எந்த அணியேனும் டி20 உலகக் கிண்ணத்தை வென்றால் மிகப்பெரிய வரலாற்று திருப்பமாகத் தான் இருக்கும்.

****

தெரியுமா?

* தொடரில் போட்டி ஒன்று சமநிலையாவதற்கு வாய்ப்பில்லை. போட்டி முடிவில் ஆட்டம் சமநிலையானால் முடிவை தீர்மானிக்க சுப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். அதிலும் போட்டி சமநிலையானால் முடிவு தீர்மானிக்கப்படும் வரை சுப்பர் ஓவர்கள் நடத்தப்பட வேண்டும்.

* வெற்றி பெறும் அணி இரண்டு புள்ளிகளை பெறும் என்பதோடு போட்டியின் முடிவு கிடைக்காவிட்டால் ஒரு புள்ளி கிடைக்கும். தோற்றால் புள்ளியில்லை.

* குழுநிலையில் முடிவை தீர்மானிப்பதற்கு அணி ஒன்று குறைந்தது தலா ஐந்து ஓவர்கள் ஆட வேண்டும். அதுவே அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் தலா 10 ஓவர்கள் ஆட வேண்டும்.

* மோசமான காலநிலையில் தடைப்பட்டால் முதல் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவது அரையிறுதியில் மேலதிக நாள் ஒதுக்கப்படவில்லை. அன்றைய தினத்தில் போட்டியை ஏற்பாடு செய்வதற்கு 250 நிமிட அவகாசம் கிடைக்கும்.

* இந்தியா நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறினால் அவர்கள் இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவுக்கு பொருத்தமான நேரத்தில் (இரவு 8) போட்டியில் ஆடும். இந்திய தொலைக்காட்சி ரசிகளுக்கான விசேட சலுகையாக இது இருக்கும். அப்போது முதல் அரையிறுதிப் போட்டி இந்திய நேரப்படி காலை 6 மணிக்கே ஆரம்பமாகும்.

* முதல்முறையாக, டி20 போட்டியில் ‘ஸ்டொப்-கடிகாரம்’ (stop- clock) பயன்படுத்தப்பட உள்ளது. பந்துவீசும் அணி முந்தைய ஓவர் முடிந்த 60 விநாடிகளுக்குள் அடுத்த ஓவரை வீசத் தயாராக இருக்க வேண்டும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division