வேற்றுக்கிரக வாசிகள் உள்ளனரா என்பது தொடர்பில் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கான தகுந்த ஆதாரங்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா முதலிய நாடுகளில் UFO எனப்படும் ஏலியன்களின் பறக்கும் தட்டு வாகனங்கள் பல காலக்கட்டங்களில் உலகைக் கடந்து சென்றதாக பல நிகழ்வுகளில் கூறப்பட்டுள்ளன. ஆனால், இவற்றிற்கு சரிவர ஆதாரங்கள் இல்லை. பண்டைய காலங்களிலும் ஏலியன்கள் தொடர்பாக பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
கி.மு. 70 இல் ஜோசப்ஸ் என்பவர் கூறிய தகவலில் வானில் ஒரு வினோதமான காட்சிகள் தோன்றியதாகவும் அதில் மேகங்களைக் கிழித்துக் கொண்டு வான் ரதத்தில் வீரர்கள் வீரிட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது பொய் எனத் தோன்றினாலும் அந்த நிகழ்வைப் பலர் பார்த்ததாக சாட்சியம் கூறி உள்ளனர். ஜோசப்ஸ் கண்ட அந்த நிகழ்வைப் பலரும் கண்டதாக கூறியுள்ளனர். வானில் நடந்த போர் போன்ற அந்தக் காட்சிகளை பல யூதேய நகரங்களிலும் பலர் கண்டதாகக் கூறப்படுகின்றது. போர் நிகழ்வது போன்ற சத்தமும் ஆங்காங்கு வினோதமாக நிலத்தில் பூகம்பங்களும் தோன்றியதாக கூட மக்கள் குறிப்பிடுகின்றனர்.
மாவீரன் அலெக்சாண்டரும் இது போன்ற நிகழ்வை கண்டதாகக் கூறப்படுகின்றது. கி.மு. 329இல் அவர் தன் படைகளுடன் ஒரு ஆற்றங்கரையில் இருந்த போது திடீரென மேகங்களில் இருந்து சில்வர் கேடயங்கள் கீழே பறந்து வந்துள்ளன. அவற்றின் விளிம்பில் இருந்து நெருப்பு வெளிப்பட்டதாகவும் அதனைக் கண்டு அலெக்சாண்டரின் படை வீரர்கள், குதிரைகள் என்பன அச்சம் கொண்டதாகவும் மறுநாள் வரை அவர்கள் அவற்றைக் கடக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
கி.பி. 815இல் பிரான்ஸின் லியோன் என்னும் பகுதியைச் சேர்ந்த அகோர்பாட் என்னும் கிறிஸ்தவ மதகுரு, தான் வானில் ஒரு வினோதமான காட்சியைக் கண்டதாக எழுதி வைத்துள்ளார். அவர் அதனை மகோனியா எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது அவர் வான்வழி மாலுமிகளைக் கண்டதாகவும் அவர்கள் பறக்கும் கப்பலில் மேகங்களை கடந்து சென்றனர் எனவும் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் ஏதோ அசாதாரண காட்சி ஒன்றைக் கண்டுள்ளார் என அறிய முடிகின்றது. இது குறித்து அங்கு இருந்த மக்களிடமும் எச்சரிக்கை செய்துள்ளார் அவர். இவ்வாறான நிகழ்வுகள் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளன.
மாவீரன் நெப்போலியனுக்கும் ஏலியன்களுக்கும் இடையே தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகின்றது. நெப்போலியனின் மண்டையோட்டில் இருந்து ஒரு மைக்ரோ சிப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கி.பி. 1794 ஆம் ஆண்டில் அவர் பல நாட்கள் காணாமல் போயிருந்தார். மீட்கப்பட்ட பின் தான் வித்தியாசமான மனிதனால் சிறைப்படுத்தப்பட்டிருந்ததாக அவர் கூறி இருந்தார். மேற்கொண்டு ஆய்வு செய்த போது அந்த மைக்ேரா சிப் அவரது சிறு வயதில் உடலில் வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இது ஏலியன் தொடர்பான விடயங்களை வலுவூட்டுகின்றது.
பழங்கால கட்டுமான பிரமிட்டுக்கள் கூட ஏலியன்களின் உதவியுடன் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. ஆனால் அது எந்த அளவு உண்மை என்பது அறியப்படவில்லை.
கு. அவினாஷ் - வத்தளை