பாரதீய ஜனதா கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான இந்திய முன்னாள் துணைப்பிரதமர் எல்.கே. அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க பெருந்தலைவர்கள் பலரை ஓரம்கட்டி ‘முதியோர்’ குழுவில் சேர்க்கக் காரணமான 75 வயது என்னும் வரம்பு தற்போது பிரதமர் நரேந்திர மோடி பதவிக்கு மேலே கத்தி போல தொங்கிக் கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அரசியல் அமைப்புகளில் ஒன்றாக 1980களில் பிறப்பெடுத்ததுதான் பாரதீய ஜனதா கட்சியாகும். வாஜ்பாயும் அத்வானியும்தான் பா.ஜ.கவின் நிறுவனத் தலைவர்கள். பா.ஜ.கவின் அடையாள முகங்களாக இருந்தவர்கள்தான் இவ்விருவரும். முதன் முதலில் பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக்கியதும் இந்த இரட்டைக்குழல் துப்பாக்கிகள்தான்.
வாஜ்பாய் பிரதமராகவும், அத்வானி துணைப் பிரதமராகவும் பதவி வகித்தனர்.
ஆனால் 2014- ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.கவில் எல்லாமே தலைகீழாகி விட்டது. பா.ஜ.கவின் முதுபெரும் தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் கடைசியாகப் போட்டியிட்டனர். அப்போது அத்வானிக்கு 86 வயது, முரளி மனோகர் ஜோஷிக்கு 70 வயது, சுமித்ரா மகாஜனுக்கு 71 வயது.
2014- ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது. அத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார். அவர் பிரதமராக பதவி ஏற்றார். அவரது வலதுகரமாக உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவியேற்றார்.
பா.ஜ.கவில் மோடி – அமித்ஷா இணையர் ஆட்டம் தொடங்கியதும் முதுபெரும் தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.
பா.ஜ.கவில் முதியோர் குழு ஒன்று உருவாக்கப்பட்டு அக்குழுவுக்குள் துரத்தி விடப்பட்டனர். இதன் பின்னர் பா.ஜ.கவின் சட்டதிட்டத்தில் எழுதப்படாத ஒரு விதியாக 75 வயதை கடந்தவர்களுக்கு கட்சி, ஆட்சியில் பதவி கிடையாது என்பது நடைமுறைக்கு வரத்தொடங்கியது.
அதனையடுத்து மத்திய அமைச்சர் பதவிகளுக்கும் இந்த 75 வயது வரம்பு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. நாடறிந்த பா.ஜ.கவின் முகங்களில் ஒருவரான நஜ்மா ஹெப்துல்லா 76 வயதை தொடுவதற்கு முந்திய நாள் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து 2016 இ-ல் இராஜினாமா செய்தார். 2017- இல் மூத்த பா.ஜ.க தலைவர் கல்ராஜ் மிஸ்ராவுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது. இன்றுவரை இந்த 75 வயது வரம்பு இந்திய மத்திய அமைச்சர்கள் பலருக்கும் புளியைக் கரைக்கிற ஒன்றுதான்.
இவ்வாறு 75 வயதை எட்டிவிட்டதால் ஒதுக்கப்பட்ட பா.ஜ.க தலைவர்கள் சிலர் பின்னாளில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.
2019- ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன் என பல மூத்த தலைவர்களுக்கும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு தரப்படாமல் அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டனர். மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கும் இதனை அமுல்படுத்தியது பா.ஜ.கட்சி. இதனாலேயே 75 வயதுக்கு மேற்பட்ட பா.ஜ.க சிரேஷ்ட தலைவர்கள் ‘தேர்தல் அரசியல்’ என்பதில் இருந்து ‘சந்நியாசம்’ பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கான பல உதாரண ‘திலகங்கள்’ இருக்கின்றன.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் வயதைக் காரணம் காட்டியே எடியூரப்பா, முதல்வர் பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டார். வயதைக் காரணம் காட்டி எங்கே தங்களை ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்பதற்காக ‘தீவிர’ தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக ‘கௌரவமாக’ அறிவித்து தங்களது அரசியல் வாழ்க்கைக்கு தாங்களே முற்றுப்புள்ளி வைத்த பா.ஜ.க மூத்த தலைவர்கள் பட்டியலும் நீளமானது.
இப்போது பா.ஜ.கவின் 75 வயது வரம்பு அஸ்திரத்தை கையில் எடுத்திருப்பது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். பா.ஜ.கவுக்கு எதிரான அஸ்திரமாகவே கெஜ்ரிவால் இதனை ஏவிவிட்டுள்ளார்.
அதாவது பிரதமர் மோடிக்கு 73 வயதாகிறது. தற்போதைய தேர்தலில் மோடி 3- ஆவது முறையாக பிரதமரானாலும் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 75 வயதை எட்டும் போது இயல்பாகவே பிரதமர் பதவியை இழக்க வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது. அவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் பதவியை இழந்தால் அடுத்த பிரதமர் அமித்ஷா என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
அதாவது பிரதமர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி லோக்சபா தேர்தலை எதிர்கொண்டுள்ள பா.ஜ.கவுக்கு ஆப்பு வைக்கும் வகையில்தான் அரவிந்த் கெஜ்ரிவால் இப்பிரசாரத்தை கையில் எடுத்திருக்கிறார். இதனால் ஒட்டுமொத்த பா.ஜ.க கூடாரமும் இப்போது அலறிக் கொண்டிருக்கிறது. “மோடிதான் 5 ஆண்டு காலமும் பிரதமர்” என்று அழாக்குறையாகக் கூறுகின்றனர் பா.ஜ.க தலைவர்கள்.
ஆனாலும் பா.ஜ.கவில் பழிவாங்கப்பட்ட முன்னைய தலைவர்களின் பட்டியலை வெளிச்சம் போட்டுக் காட்டி காங்கிரஸும் ஆம் ஆத்மியும் மற்றைய ஏனைய இந்தியா கூட்டணிக் கட்சிகளும் பா.ஜ.கவை தாக்கிக் கொண்டிருக்கின்றன.
“75 வயதை எட்டிய பின்னர் பிரதமர் மோடி ஓய்வு பெறுவாரா?” என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், 3 ஆவது முறையாகவும் மோடியே பிரதமராக நீடிப்பார் என மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.அமித்ஷாவின் பதிலை எதிரணியினர் கண்டனம் செய்துள்ளனர்.
“இவர்கள் INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் எனக் கேட்கிறார்கள். பா.ஜ.கவினரிடம் நான் ஒன்றைக் கேட்கிறேன், உங்களுக்கான பிரதமர் வேட்பாளர் யார்? பா.ஜ.க கட்சியின் விதிப்படி 75 வயதைப் பூர்த்தி செய்த ஒருவர், அக்கட்சியில் இருந்து ஓய்வு பெற வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியே 2014 ஆம் ஆண்டு 75 வயதுடையவர்கள் கட்சியில் இருந்து ஓய்வு பெறுவார்கள் என்ற விதியை உருவாக்கினார்.
எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், வசுந்தரா ரஜே, சிவராஜ் சிங் சௌஹான் போன்ற அரசியல் தலைவர்களின் அரசியலுக்கு பிரதமர் மோடியே முற்றுப்புள்ளி வைத்தார். அடுத்ததாக யோகி ஆதித்யநாத் அரசியலுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைப்பார்” என்று கூறினார் அரவிந்த் கெஜ்ரிவால்.
“அடுத்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதியுடன் பிரதமர் மோடிக்கு 75 வயது பூர்த்தியாகிறது. இத்தகைய சூழலில், யாரை முன்னிறுத்தி பா.ஜ.க வாக்குக் கேட்கிறது? பிரதமர் மோடி விரைவில் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போகும் நிலையில், அவரது உத்தரவாதத்தை யார் பூர்த்தி செய்வார்கள்? நான் மோடியிடம் கேட்கிறேன், நீங்கள் அமித்ஷாவிற்காக வாக்குக் கேட்கிறீர்களா? மக்களே… பிரதமர் மோடி தனக்காக வாக்குக் கேட்கவில்லை. அமித்ஷாவை பிரதமர் ஆக்குவதற்காகவே வாக்கு கேட்கிறார்” என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
கெஜ்ரிவாலின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “75 வயதைப் பூர்த்தி செய்தவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று எந்த விதிமுறையும் பா.ஜ.கவில் இல்லை. பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெற்றால் மோடியே அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமர் பதவியில் நீடிப்பார். பா.ஜ.கவில் எந்தக் குழப்பமும் இல்லை. பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமராக நீடிப்பார்” என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராகி தனது பதவியை முடிப்பார். பிரதமர் மோடி அரசியலில் நம்பகத்தன்மையின் சின்னமாக இருக்கிறார். ஆனால் கெஜ்ரிவால், நம்பகத்தன்மையின் நெருக்கடி சின்னமாக இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தலைவர் நட்டா இதுகுறித்து கூறுகையில், “மோடியை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சி கூட்டணிக்கு எந்த கொள்கையோ திட்டமோ இல்லை. பா.ஜ.கவின் அரசியலமைப்பில் வயது தொடர்பான எவ்வித விதியும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
எஸ்.சாரங்கன்