நீர்வளமும் நிலவளம் மிக்கதாகவும், இயற்கை எழில் கொஞ்சும் நாடாகவும் இருப்பதனால் இலங்கை பல விதமான பயிர்ச் செய்கைகளுக்கு உகந்த நாடாக திகழ்கிறது. எனவேதான் நமது நாட்டை ஆட்சிபுரிந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படச் செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து 1823ஆம் ஆண்டு பல்லாயிரக் கணக்கான மக்களை வருவித்து அவர்களுக்கென மலைப்பிரதேசங்களில் லயன்களை உருவாக்கி அவர்களை லயன் அறைகளில் தங்கவைத்து அவர்களின் கடுமையான உழைப்பின் மூலம் ஆரம்பத்தில் கோப்பி, அதன் பின்பு தேயிலை, இறப்பர், தென்னந் தோட்டங்களை உருவாக்கி அவர்களின் உழைப்பின் மூலம் இந்த நாட்டின் ஏற்றுமதிப் பொருட்களாக தேயிலை, இறப்பர், தெங்கு போன்றனவற்றை அறிமுகப்படுத்தி இந்த நாட்டை பொருளாதாரத்தில் மேம்படச் செய்தார்கள். ஆனால், இந்த நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமது குருதியை வியர்வையாக்கி, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த அந்த மக்கள் கடுமையாக உழைத்த போதிலும் அந்த மக்களும் சரி அவர்களின் வழித்தோன்றல்களும் சரி பல வழிகளிலும் பல தரப்பினராலும் மாற்றான் தாய் மனப்பான்மையுடனும் உழைப்புக்கேற்ற வருமானத்தை பெற முடியாதவர்களாகவும் பல வழிகளிலும் வஞ்சிக்கப்பட்டதே வரலாறு. நாடளாவிய ரீதியிலுள்ள பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் இந்திய வம்சாவளி தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தோட்டங்களில் அவ்வப்போது ஏற்படும் பதவி வெற்றிடங்களுக்காக, அந்த பதவிகளுக்கு உரிய கல்வித் தகைமைகளைக் கொண்டிருந்த போதிலும், அவர்கள் முற்றுமுழுதாக தோட்ட நிர்வாகங்களினால் தெரிவு செய்யப்படாது புறக்கணிக்கப்பட்டமையே வரலாறு. கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களை தொழிற்சங்க ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் சில தோட்டத் தொழிற்சங்கங்களும், அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சில மலையக அரசியல் கட்சிகளும், தோட்டத் தொழிலாளர்களின் உரிய கல்வித் தகைமைகளைக் கொண்ட பிள்ளைகளைக் கொண்டு, தோட்டங்களில் அவ்வப்போது ஏற்படும் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தன.
கடந்த வருடத்துடன் (2023) இந்த நாட்டின் இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் மூதாதையர்கள் இந்த நாட்டிற்கு வருவிக்கப்பட்டு இருநூறு ஆண்டுகள் பூர்த்தியாகின. இன்னொரு விதமாக குறிப்பிடுவதாயின் இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த நாட்டில் ஒரு நூற்றாண்டு கால வரலாறு உள்ளது. கடந்த வருடம் இந்த நாட்டிலுள்ள பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலாளர்களில் தலாவாக்கலை, தெனியாய ஆகிய பிரதேசங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள், கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்ததோடு மொழி அறிவு, தலைமைத்துவப் பண்பு ஆகியவற்றில் தகைமைகளைக் கொண்ட 24 பெண் பிள்ளைகள் தலவாக்கலை பெருந்தோட்ட நிர்வாகத்தினால் பெருந்தோட்டக் கள உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டார்கள். தலவாக்கலை பெருந்தோட்டக் கம்பனி அவர்களுக்கு விவசாய தொழில்நுட்ப அறிவு, மனிதவள முகாமைத்துவம் கணக்கியல் அறிவு, தேயிலை ஏற்றுமதி, தலைமைத்துவ அறிவு, களப்பயிற்சி ஆகிய துறைகளில் பயிற்சிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. உண்மையை உள்ளது உள்ளபடி குறிப்பிடின் பெருந்தோட்டத்துறையில் இந்த நாட்டில் அறுபது சதவீதத்திற்கு மேல் பெண் தொழிலாளர்கள் உள்ளார்கள். ஆனால் இதுகாலவரை அவர்களை மேற்பார்வை செய்பவர்களாகவும் அவர்களுக்கு தலைமைத்துவம் கொடுப்பவர்களாகவும் ஆண்களே இருந்தார்கள். ஆனால் தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனி 24 பெண் பெருந்தோட்ட கள உத்தியோகத்தர்களை நியமித்ததன் மூலம் தோட்டப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. பெண் தோட்டத் தொழிலாளர்கள் அவர்களுக்குரிய பிரச்சினைகளை மனம்திறந்து வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு அவற்றிற்குரிய தீர்வுகளை இலகுவில் பெறக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக பெண் தொழிலாளர்கள் மூலமாக அறிய முடிகிறது. எனவே, பெருந்தோட்ட கள உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆண் கள உத்தியோகத்தர்களைப் போன்று மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவதன் மூலம் தமது கடமைகளை உரிய நேரங்களில் ஆரம்பிக்க தம்மை வழக்கப்படுத்திக் கொள்வதோடு கடமையுணர்வோடு தமக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை பொறுப்புணர்வுடன் ஆற்றினால் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் உரிய கல்வித் தகைமைகளைக் கொண்ட பிள்ளைகளும் பெருந்தோட்ட களஉத்தியோகத்தர்களாக பெருந்தோட்டக் கம்பனிகளினால் நியமனங்களைப் பெற நிச்சயம் வாய்ப்புக் கிட்டும். அதன்மூலம் அவர்களின் வாழ்வில் பெருமைபடக் கூடிய விதத்தில் மாற்றம் ஏற்படும்.
கடந்த 2024.04.07 ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியின் மலைக்கதிர் பக்கத்தில் பிரசுரமான வசந்தா அருள்ரட்ணத்தின் கட்டுரையில் ஹற்றன் பிளான்டேஷன்ஸ் தோட்ட நிர்வாகமும் பெருந்தோட்ட பெண்களுக்கு, தோட்ட உத்தியோகத்தர் தொழில்துறையில் மேற்பார்வையாளர்கள் தரத்தில் முக்கிய இடத்தை வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். எனவே, தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டில் இரு நூற்றாண்டுகளை கடந்து இருநூற்று ஓராவது வருடத்தில் காலடி வைத்துள்ள நடப்பு வருடத்தில் (2024) மக்கள் பெருந்தோட்ட யாக்கத்தின் 48ஆம் ஆண்டு விழா அதன் தலைவர் கமான்டர் புவனேக்க அபேசூரிய தலைமையில் நடைபெற்றபோது பெருந்தோட்ட அபிவிருத்தி நிதிய தலைவர் பாரத் அருள்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஹந்தானை மவுண்ட்ஜீன், லூல்கந்துர ஏவுத்துங்கொட ஆகிய தோட்ட நிர்வாக பிரிவுகளுக்கு பெருந்தோட்டங்களில் கல்வி பயின்று புலமை பெற்ற இளைஞர், யுவதிகளுக்கு நியமன கடிதங்களை வழங்கியதாக ஒரு தேசிய பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த (11.03.2024) மார்ச் 12ஆம் திகதி நியமனங்கள் வழங்கப்படாதிருந்த 136 இளைஞர், யுவதிகள் ஆசிரிய உதவியாளர்களாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் மூலம் நியமனம் பெற்றார்கள்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுச்சாமி இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றமையை அடுத்தே அந்த நியமனங்கள் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, அந்த நியமனங்கள் வழங்கப்படவிருந்த தருணத்தில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றமையினால் அந் நியமனங்கள் வழங்கப்படவில்லை. எனவே, இரண்டாம் மொழி ஆசிரியர்களுக்கான பயிற்சியை தனது தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சு மூலம் வழங்க, நடவடிக்கை எடுத்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த 2500 பேருக்கும் இரண்டாம் மொழி ஆசிரிய நியமனங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தில் கல்வி இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் அருணாசலம் அரவிந்தகுமார், பல மாதங்களுக்கு முன்பு, நல்லாட்சி அரசாங்க காலத்தில் வழங்கப்படவிருந்த 2500 இரண்டாம் மொழி ஆசிரிய நியமனங்களை வழங்க தன்னால் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும். கேட்டால் தான் கிடைக்கும். தட்டினால்தான் கதவு திறக்கும். மலையக மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பல. ஏனைய மலையக கட்சிகளுடன் கருத்தொற்றுமையுடன் செயற்படுவதன் மூலமே அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இந்த நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக தம்மையே அர்ப்பணித்த உழைக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். அவர்கள் பெருந்தோட்டத் துறையிலும் ஏனைய துறைகளிலும் உயரிய பொறுப்புக்களை வகித்து, தமது நிலையை உயர்த்திக் கொள்வதோடு, பெருந்தோட்டத்துறைக்கும் ஏனைய துறைகளுக்கும் தமது பங்களிப்புகளை வழங்க வேண்டும்.
இசையில் திறமை இருந்தும் இலைமறை காயாக இருந்த அசானியின் திறமை, உரியவர்களின் அவதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டதனால் தான் அவள் தென்னிந்திய Zee தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை பெற்றார். விளையாட்டுக்களில் கிரிக்கெட் விளையாட்டில் ஆற்றல் கொண்ட பதுளையைச் சேர்ந்த அனிதா இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற பல பரோபகாரிகள் செய்த உதவிகளால், அவரின் திறமை இனம் காணப்பட்டுள்ளமையே காரணம்.
எனவே தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் வாழ்வு சுபீட்சமடைய சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம். வெறும் கை முழம் போடாது.
-இவதன்