இலங்கையின் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்காத காரணத்தினால் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டயனா கமகேயின் உறுப்பினர் பதவிக்குத் தடைவிதித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கடந்த வாரம் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விடயமாக இருந்தது.
டயனா கமகே பிரித்தானிய நாட்டின் பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பதை நீதிமன்றம் தகுதிநீக்கமாக அறிவித்தது.
சமூக செயற்பாட்டாளர் எனத் தன்னைத்தானே அறிமுகப்படுத்தும் ஓஷல ஹேரத் என்பவர் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை பல நாட்களாக விசாரிக்கப்பட்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு வழங்கப்படும் போது டயனா கமகே சுற்றுலாத்துறைக்கான இராஜாங்க அமைச்சராகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்.
அவருடயை இந்தத் தகுதி நீக்கம் அரசாங்கத்துக்கு ஒர் இழப்பு என்றே கூறவேண்டும். ஏனெனில், பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்காக அவர் குரல்கொடுத்துவந்த உறுப்பினர். அதேநேரம், இது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
டயனா கமகே அவர்கள் ‘அபே ஜாதிக பெரமுன’ என்ற கட்சியின் மூலமே பிரபலமடைந்தார். மறைந்த மங்கள சமரவீர மற்றும் மறைந்த ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பிரிந்து சென்ற பின்னர் இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது.
இதன் பின்னர் கமகே மற்றும் அவரது கணவர் சேனக டி சில்வா ஆகியோர் இந்தக் கட்சியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தனர். 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருந்த சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாடு தன்னிடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நிறைவேறாமையாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்கும் நிலைக்குச் சென்றார்.
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்குத் தேவையான காலக்கெடுவுக்குள் புதிய அரசியல் கட்சியொன்றை பதிவு செய்ய முடியாத காரணத்தினால், சஜித் பிரேமதாச ஏற்கனவே தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட கட்சியுடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அப்போதுதான் அவர் ‘அபே ஜாதிக பெரமுன’ கட்சியைத் தேர்வு செய்தார்.
இதன் மூலம், சஜித் பிரேமதாச கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, அதற்கு ‘ஐக்கிய மக்கள் சக்தி’ என்று பெயர் சூட்டினார். அவர் கட்சியின் தலைவராகவும் ரஞ்சித் மத்தும பண்டார பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
இதனை அனுமதித்தமைக்கு பிரதியுபகாரமாக டயானா கமகே அக்கட்சியின் தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டார். அப்போது ஓஷல ஹேரத் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக இருந்தமை சிலருக்கு நினைவில் இருக்கும். அந்த நேரத்தில், அபே ஜாதிக பெரமுனவின் உறுப்பினர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சரியாக அறிவிக்கப்படவில்லை எனக் கூறி ஒஷல நீதிமன்றம் சென்றிருந்தார்.
எனினும், அவருடைய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டி ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதுடன், இதன் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக டயனா கமகேவையும் நியமித்தது.
அதுவரை ஐக்கிய மக்கள் சக்திக்கு விசுவாசமாக இருந்த டயனா கமகே, 2020ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அதிகாரங்களைப் பலப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினார். கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அவர் நடந்துகொண்டதுடன், அன்று முதல் அவருக்கும் கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இவ்வாறான பின்னணியிலேயே ஓஷல ஹேரத் நீதிமன்றத்திற்குச் சென்று டயனா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் அவர் உறுப்பினராக இருப்பதற்குத் தகுதி அற்றவர் என வழக்குத் தொடர்ந்தார்.
டயனா கமகே தனது பிரித்தானிய குடியுரிமையை துறந்தமைக்கோ அல்லது இரட்டைக் குடியுரிமை பெற்றமைக்கோ எந்த ஆதாரமும் இல்லை என ஹேரத் வாதிட்டார். இந்தச் சட்டச் சிக்கல்கள் நீதிமன்றத்தில் வாதிக்கப்பட்டு வந்த நிலையிலேயே, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, அவருக்குப் பதிலாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க வழிவகை செய்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ், டயனா கமகே சுற்றுலா இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இராஜாங்க அமைச்சராகப் பதவி வகிக்கும் காலத்திலேயே கஞ்சாவை சட்டபூர்வமாக்குதல் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கும் நேரத்தை நீடித்தல் போன்ற விடயங்களை ஆதரித்து டயனா கமகே சர்ச்சைக்குரியவராக அறியப்பட்டார். அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகிய மற்றொருவராக இருந்தாலும், அவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு இருந்தமை பொதுவெளியில் பல சந்தர்ப்பங்களில் புலப்பட்டிருந்தது.
இவ்வாறான பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ள டயனா கமகேவுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எவ்வாறாயினும், தான் அரசியலில் இருந்து ஒதுங்கப் போவதில்லையென அவர் கூறியுள்ளார்.
மேலதிக தெரிவுகள் தொடர்பாக சட்டத்தரணிகளுடன் ஆராய்ந்து வருவதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். டயனா கமகேவின் கணவர் சேனக டி சில்வாவும் தனியான செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு, மனைவி கூறியதை மீண்டும் வலியுறுத்தினார்.
ஐக்கிய மக்கள் சக்தியைக் கட்டுப்படுத்துவதற்கான உரிமைகளை மீட்டெடுப்பதற்கு சட்டபூர்வ தீர்வைத் தேடப் போவதாக அவர் கூறியுள்ளார். அபே ஜாதிக பெரமுனவை ஐக்கிய மக்கள் சக்தியாக மாற்றும் நடைமுறையில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்திக்குள் கணிசமான குழப்பம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. கமகே ஒரு பிரிட்டிஷ் பிரஜையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ஐக்கிய மக்கள் சக்தியில் டயனா கமகேவின் பங்கு அக்கட்சியை சட்டவிரோத நிறுவனமாக மாற்றுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளரும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெளிவுபடுத்தியுள்ளார். வெளிநாட்டு பிரஜைகள் இலங்கையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்வதை தடை செய்யும் சட்ட ஏற்பாடுகள் எதுவும் இல்லாததால், இது ஆபத்து இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இவ்வாறான நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக டயனா கமகே தாக்கல் செய்திருந்த மனு இம்மாதம் 28ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களாகவே இன்னும் இருப்பதால் ஐக்கிய மக்கள் சக்தியில் அவர்களால் பதவி வகிக்க முடியாது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகள் குறித்து தற்பொழுது மக்களின் கவனம் திரும்பியுள்ளது.
பி.ஹர்ஷன்