இலங்கை மத்திய வங்கியானது 2023ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் பொருளாதார பகுப்பாய்வை, இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார விபரம் என்ற பெயரில் அண்மையில் வெளியிட்டது. இது தொடர்பாக இரண்டு விசேட செய்தியாளர் சந்திப்புகளும் இடம்பெற்றதோடு, அந்த அறிக்கை, அதற்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் மற்றும் எதிர்காலத்தில் நாம் பயணிக்க வேண்டிய பாதை தொடர்பில் “வருடாந்த பொருளாதார அறிக்கை வெளிப்படுத்தும் பொருளாதார யதார்த்தம்” என்ற தொலைக்காட்சி கலந்துரையாடலில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க, இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஜனக எதிரிசிங்க, ஆகியோர் தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாக வைத்து இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.
****
மத்திய வங்கி அறிக்கை தொடர்பில் நிபுணர்கள் விவாதிக்க வேண்டும்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன
மத்திய வங்கியின் பொருளாதார விபரிப்புக்கள் நிதியமைச்சர் ஊடாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 148 ஆவது பிரிவின்படி, நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் மற்றும் பொருளாதாரத்தை கையாளும் பெரும்பான்மை அதிகாரமும் இருப்பது பாராளுமன்றத்திற்கேயாகும்.
அதேபோன்று, இந்த ஆய்வு தயாரிக்கப்பட்டிருப்பது உலகில் இருக்கும் ஏனைய பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வங்கியாளர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலாகும்.
நாம் வந்த தூரத்தை விட இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் மிக நீண்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த நீண்ட பயணத்திற்கான பல சரியான சமிக்ஞைகள் 2023ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் அறிக்கையில் காணப்படுகின்றன. எனவே, மத்திய வங்கியின் அறிக்கையில் உள்ள தரவுகள் தொடர்பில் மாத்திரம் 3 நாள் விவாதம் நடத்தப்பட்டால், அதுவும் நாட்டு மக்கள் தரப்பில் பெரும் முன்னேற்றம் ஏற்பட காரணமாக அமையும்.
தற்போது அரசின் நாளாந்த வருமானம் 842 கோடி ரூபாய் என்பதோடு, அன்றாட தொடர் செலவு 1467 கோடி ரூபாயாகவும் உள்ளது. இதனடிப்படையில், தினசரி தொடர் செலவுகளை சமாளிக்க, 625 கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது.
1988ஆம் ஆண்டு முதல் சுமார் 35 வருடங்களாக இந்நிலை காணப்படுகின்றது. எனவே, எந்த ஜனாதிபதி ஆட்சியில் இருந்தாலும், எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், இந்த தொடர் செலவுகளை ஈடுகட்ட முடியாது.
2003இல் வரி மற்றும் வரி அல்லாத அரசாங்க வருமானம் 3 டிரில்லியன்களாகும். அந்த வருடத்தில் செலவு 4.6 டிரில்லியன்களாகும். இப்படிப்பட்ட நிலையினுள் ஒரு நாட்டினால் என்ன செய்ய முடியும்?
தொடர் செலவினங்களில் அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி உள்ளிட்ட நிவாரணங்கள் மற்றும் அரச கடன் வட்டி ஆகியவை அடங்கும். எனவே, 1.6 ட்ரில்லியன் பற்றாக்குறைக்காக கடன் பெற வேண்டிய நிலை உள்ளது. அதேபோன்று இறக்குமதிப் பொருட்களுக்காகவும் நாம் பணம் செலுத்த வேண்டும். இந்தப் பற்றாக்குறை ஒவ்வொரு மாதமும் கூடி, இறுதியாக இந்த நிலையை நாட்டுக்கு உருவாக்கியுள்ளது.
எனவே இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ள இந்த விபரத்தை ஆய்வு செய்து அதன்படி செயற்படுவது கட்டாயமானதாகும்.
****
வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையின் போது அரச நிதி ஒழுக்கம் மிகவும் முக்கியமானது
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் பிரியங்க துனுசிங்க.
மத்திய வங்கி அறிக்கையின் மூலம் அடிப்படையான பொருளாதார தரவுகள் விபரிக்கப்படுகின்றன. குறித்த வருடத்தினுள் மொத்தப் பொருளாதார செயல்திறன் எவ்வாறு இருந்தது? அத்துடன், அது தொடர்பான அடிப்படைச் சித்தாந்தங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் உள்நாட்டு நிதி நிலைத்தன்மை, பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதாரத் துறை, வெளிநாட்டுத் துறைகளின் நிலைமை போன்றவையும் விளக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இலங்கை மத்திய வங்கியினால் விலையை நிலைப்படுத்துவதற்காக அந்நிய செலாவணி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சந்தை நிதித்துறையை ஸ்திரமாக வைத்திருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கியுள்ளன.
இவ்வாறான கொள்கைகள் நாட்டிற்குத் தேவையானவை. இந்தத் தரவு விபரங்கள் கொள்கை வகுப்பாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்களுக்கும் தேவைப்படும். இதில் நாட்டின் பொருளாதாரம் எந்த திசையில் நகர வேண்டும்? அதற்காகச் செய்ய வேண்டிய அத்தியாவசிய மறுசீரமைப்புக்கள் எவை? அவற்றைச் செய்யாவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? போன்ற விடயங்கள் அனைத்தும் மத்திய வங்கியின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இத்தகைய முறைகள் இலங்கையில் மாத்திரம் மேற்கொள்ளப்படுவதில்லை. குறிப்பாக உலகப் போக்குகளுக்கு ஏற்ப நாம் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பது பற்றிய அறிவினை இதன் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும். மத்திய வங்கியின் சுயாதீனமான கருத்து வெளிப்பாட்டின் மூலம் பொது மக்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டல்கள் கிடைக்கும்.
எனவே, அரச நிதி முகாமைத்துவச் சட்டத்தை வரும் காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை. மத்திய வங்கியின் மற்றும் அரச நிதி முகாமைத்துவ சட்டத்தின் ஊடாக இந்த நாட்டில் முதலீடு செய்வதற்கு மிகவும் சாதகமான சூழ்நிலை உருவாக்கப்படும். அவ்வாறு செய்யாவிட்டால், வெளிநாட்டு முதலீட்டாளர் மாத்திரமின்றி, உள்நாட்டு முதலீட்டாளர்களும் கூட முதலீடு செய்ய தயங்குவார். சுயாதீனமான நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது எமக்கு பரிச்சயம் இல்லாததால், சிலர் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். அதனடிப்படையில், அரசாங்கத்தின் கொள்கைகளும் மத்திய வங்கியின் கொள்கைகளும் இணைந்து செயற்படுவதன் மூலம் நாம் உள்ளாகியிருக்கும் இந்த நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.
அவ்வாறில்லாமல் தற்போதுள்ள அரசாங்கங்கள் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை நீக்கிக் கொள்வதற்கு மத்திய வங்கிக்குச் சென்றால் எமக்குச் சாதகமான பொருளாதாரச் சூழல் உருவாகப் போவதில்லை. அத்துடன், அரச நிதி முகாமைத்துவச் சட்டத்திற்கு அமைய அரசாங்கமும் நிதியினை வெற்றிகரமற்ற முதலீடுகளில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்காது. நாம் அபிவிருத்தியை நோக்கி முன்னேற வேண்டுமானால் அத்தகைய நிதி ஒழுக்கம் இருப்பது அவசியம். அவ்வாறானதொரு ஒழுக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதாரக் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
****
மத்தியவங்கியின் நோக்கம் இலாபமீட்டுவது அல்ல
இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஜானக எதிரிசிங்க
இலங்கை மத்திய வங்கியானது 1949ஆம் ஆண்டு நிதிச் சட்டத்திற்கு அமைவாக 1950ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. எனினும் 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க சட்டத்தின் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு உரிய சட்டதிட்டங்கள் திருத்தத்திற்குள்ளானது. தற்போது இலங்கை மத்திய வங்கி, புதிய சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதால், மத்திய வங்கி அறிக்கைக்கு பதிலாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார பகுப்பாய்வு வெளியிடப்படுகிறது. இதனடிப்படையில், முன்னரைப்போன்று, மத்திய வங்கி ஒரு நிதியாண்டு முடிவடைந்து 4 மாதங்களுக்குள் தொடர்புடைய நிதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இங்கு இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் பொருளாதார முன்னறிவிப்புகள், மத்திய வங்கியினால் எடுக்கப்படும் கொள்கைகள் மற்றும் இலங்கையின் நிதி நிலைமைகள் பொருளாதார ஆய்வு செய்யப்பட்டு, மத்திய வங்கி ஆளுநரால் நிதி அமைச்சர் ஊடாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இது கட்டாயமான நடவடிக்கையாகும். மத்திய வங்கியின் பிரதானமான செயற்பாடு என்ன? பெரும்பாலானோர் இதனைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதால் இது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும். உள்நாட்டு விலை ஸ்திரத்தன்மையை பராமரிப்பதே மத்திய வங்கியின் முக்கிய நோக்கமாகும். இரண்டாவது நிதிக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதாகும். இந்த இரண்டு நோக்கங்களுடன் தொடர்புடைய கொள்கைச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது மத்திய வங்கி இலாபம் அல்லது நஷ்டம் அடையலாம். மத்திய வங்கியின் நோக்கம் இலாபம் ஈட்டுவது அல்ல என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
எம். எஸ். முஸப்பிர்