நெருப்பெடுத்த வெயில்
உடைப்பெடுத்த வியர்வை
துடைக்கத்துடைக்க வழியும்
துகிலனைத்தும் நனையும்
காய்த்திடும் கத்திரிவெயில்
முறித்திடும் முந்திரிவெக்கை
கரிக்கும் கானல் நீரோடும்
கனலோடு நம் வாழ்வாடும்
தருக்களை அழித்து
தெருக்களும் கடைகளும்
தீய்க்கும் வெப்பத்தில்
தடுமாறும் பேருலகம்
நெகிழியைக் கொடுத்து
நதிகளை அழித்தாய்
நிர்க்கதியாகி நாளும்
நஞ்சினை உள்ளிழுத்தாய்
தடுப்பில்லா தாகம்
தரையா தழலாவென சந்தேகம்
தாங்கொணா எரிப்பில்
தேகங்கள் அனலாகும்
தர்ப்பூசணியும் மோரும்
தேசிக்காய், பழவகைச்சாறும்
தேடித்தேடி நீர்விடாயைத்
தோற்கடிக்கவோடும் மனிதவாறு
உடலிலே அரிப்பு
உருவாகும் கொதிப்பு
அதியுயர் வெப்பத்தில்
உடல்நீர்மம் இழப்பு
அம்மையின் அட்டகாசம்
வெம்மையின் வீரத்தாண்டவம்
கோடையின் கடுங்கொப்புளம்
கொளுத்தும் வெயில் கொடூரம்
நெரிசலில் நசுங்கி
நரகத்தின் சூடுணர்ந்து
புழுக்கத்தில் புலம்பி
பரிதவிக்கும் காலம்
தீப்பிடித்த காற்றோ?
திகைக்கவைக்கும் கதிர்க்கீற்றோ?
கனன்று உயிர்பிதுக்கும்
காலனின் மூச்சோ?
பெருகும் மானிடர்க்கு
உயரும் கொன்கிறீட்காடு
உருகும் பனிப்பாறை
அருகும் வனவழகு
சுனையாறு குளம் யாவும்
சடுதியில் வற்ற
வினையின் பயன்
வீரியமாய்க் கிடைத்ததோ?
தண்மையை நாடியே
தரணியில் உயிர்களும்
தாராளமாய் அருந்திடவின்றி
துவண்டிடும் பயிர்களும்
கடைகண்ணி செல்லல்
கலியுக யுத்தமாய்
மடைதிறந்த வேர்வையில்
மயக்கமுறும் மனிதம்
வெதும்பும் உள்ளம்
வேகாத வெயிலில்
வேண்டிப் பிரார்த்திக்கும்
வரமாகும் மழையை
நிழலைத் தேடி
நீண்ட காத்திருப்பு
அவலம் துடைக்க
இறையே செவிசாய்ப்பாய்