இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணிக்கு இது போதாத காலம் என்றுதான் கூற வேண்டியுள்ளது.
தேர்தல் ஆரம்பமாவதற்கு முன்னர் பா.ஜ.கவுக்குச் சாதகமாகவே கணிப்புகள் இருந்தன. பா.ஜ.கவே அடுத்த தேர்தலிலும் பெருவெற்றி பெறுமென்றும், நரேந்திர மோடியே மூன்றாவது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்பாரென்றும் அத்தனை கருத்துக் கணிப்புகள் அடித்துக் கூறின.
பா.ஜ.கவும் முழுதான நம்பிக்ைகயில்தான் இருந்தது. நூறு வீதம் வெற்றி தமக்ேக என்றுதான் பா.ஜ.கவினர் நம்பியிருந்தனர். தேர்தல் ஆரம்பமாகும் வரை பா.ஜ.கவின் கைதான் மேலோங்கியிருந்தது.
ஆனால் நிலைமை தற்போது அவ்வாறாக இல்லை. தேர்தலின் முதற்கட்ட வாக்களிப்பு ஆரம்பமான பின்னர் முன்னைய கருத்துக் கணிப்புகளெல்லாம் தலைகீழாக மாறிப் போய் விட்டன. பா.ஜ.க மீதான செல்வாக்கு படிப்படியாக சரிவு நிலைமைக்குத்தான் சென்று கொண்டிருக்கின்றது. இத்தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்து, காங்கிரஸ் அதிகாரத்தைக் கைப்பற்றி விடும் என்ற ஊகங்களும் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
கடந்த 2019 தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும்போது, இப்போது நடந்து முடிந்துள்ள 3 ஆம் கட்ட தேர்தலில் பா.ஜ.க 30 இடங்களை இழக்கக்கூடும் என்று நடுநிலை வகிக்கும் சிரேஷ்ட பத்திரிகையாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான 3 ஆம் கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஏறக்குறைய 285 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளன. நாட்டில் உள்ள பாதி தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.
நடந்து முடிந்துள்ள இந்த மூன்று கட்ட தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக இல்லை என்று கருத்துகள் வெளியாகி வருகின்றன.
பா.ஜ.கவின் கோட்டையாகக் கருதப்படும் குஜராத்தில் இந்த முறை அந்தக் கட்சி சில இடங்களை இழக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். கடந்த முறை காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட அமித்ஷாவுக்கு அமோக ஆதரவு அலை வீசியது. இந்த முறை அந்த அலையைக் காணவில்லை என்கிறார்கள் அவர்கள்.
எப்படிப் பார்த்தாலும் பா.ஜ.கவுக்கு இந்த மூன்றாம் கட்டத் தேர்தல் பல அடிகளைக் கொடுத்துள்ளது என்று சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.
கடந்த 2019 இல் நடைபெற்ற மூன்றாவது கட்டத் தேர்தலின் போது பா.ஜ.கவுக்கு அதிகப்படியான இடங்கள் கிடைக்கக் கூடும் என்று முன்கூட்டியே உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை 3 ஆம் கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பா.ஜ.கவுக்குப் பழைய செல்வாக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதே கள நிைலவரமாக உள்ளது. குறிப்பாக, கர்நாடகாவில் கடந்த முறை பா.ஜ.க வெற்றி பெற்ற இடங்களில் பாதியைப் பெறுமா என்பதே சந்தேகம்தான் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலைமை இவ்வாறிருக்க, கர்நாடகாவில் எழுந்துள்ள பாலியல் புகார் பா.ஜ.கவுக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது. நிச்சயம் அங்கு பல தொகுதிகளை பா.ஜ.க இழக்கவே செய்யும். அதைப்போல மல்யுத்த வீரர்களின் பாலியல் புகாரானது இந்தத் தேர்தலில் ஹரியானாவில் பா.ஜ.கவைக் கட்டாயம் பாதிக்கவே செய்யும் என்பதுதான் தேர்தல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
இதே போன்று மணிப்பூரில் பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பான விடயமாகும். அதுவும் தேர்தலைப் பாதிக்கும் என்று அவதானிகள் கூறுகிறார்கள்.
அடுத்து குஜராத் நிலைமையாகும். அங்கே தேர்தல் அதிகாரிகளின் போக்கு அப்பட்டமான விதிமீறலாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால் கைது குஜராத் அரசியலில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.
அமித்ஷாவுக்கு எதிராக வேட்பாளர்கள் போட்டி போட முடியாத நிலை உள்ளது.
இன்றைய 3 ஆம் கட்டத் தேர்தலை நோக்கும் போது 2019இல் பா.ஜ.க பெற்ற இடங்களில் 20 முதல் 30 தொகுதிகளை இந்த முறை இழந்துவிடுவார்கள் என்பதே கணிப்பாக உள்ளது. அப்படிப் பார்த்தால் கடந்த முறை பா.ஜ.க 303 தொகுதிகளில் வென்றிருந்தது. அதில் 30 தொகுதிகள் குறைந்தாலே பெரும்பான்மையை அந்தக் கட்சி இழக்க நேரிடும் என்பதே உண்மை.
பாராளுமன்றத் தேர்தல் நிலைமை இவ்வாறிருக்ைகயில், ஹரியானா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க அரசு பெரும்பான்மை இழந்துவிட்ட நிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் குறித்து காங்கிரஸ் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்போம் என முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டு ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் ஆட்சி அமைக்க தேவை 46 இடங்கள் ஆகும். ஆனால் 2019- ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க 40, காங்கிரஸ் 30, துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி 10 இடங்களில் வென்றன. சுயேச்சைகள் 7- இல் வெற்றி பெற்றிருந்தன.
2019-இல் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் துஷ்யந்த் சவுதாலாவின் 10 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைத்தது. துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை ஆளும் பா.ஜ.க அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது.
இதனால் பா.ஜ.க கூட்டணி அரசுக்கான ஆதரவை துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி கடந்த மார்ச் மாதம் வாபஸ் பெற்றது.
ஜே.ஜே.பி தனது ஆதரவை வாபஸ் பெற்ற போதும் சுயேச்சைகள் ஆதரவுடன் நூலிழைப் பெரும்பான்மையில் தொங்கிக் கொண்டிருந்தது ஹரியானா பா.ஜ.க அரசு. ஹரியானா பா.ஜ.க அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 3 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் சமீபத்தில் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. தற்போதைய நிலையில் ஹரியானா சட்டசபையில் 88 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2 இடங்கள் காலியாக உள்ளன. பா.ஜ.கவுக்கு சுயேச்சைகள் ஆதரவுடன் 43 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; ஆனால் பெரும்பான்மைக்கு தேவை 45 எம்.எல்.ஏக்கள்.
இதனால் காங்கிரஸ்- ஜே.ஜே.பி மற்றும் சுயேச்சைகள் இணைந்து ஆட்சி அமைக்கக் கூடிய சாத்தியம் உள்ளது.
அரசியல் பரபரப்புகள் இவ்வாறிருக்ைகயில், இந்தியாவின் பெரும் செல்வந்தர்களான அதானி மற்றும் அம்பானி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தெலுங்கானாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, “தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து அம்பானி – அதானியைப் பற்றிப் பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார். அம்பானி,- அதானியிடமிருந்து எவ்வளவு தொகையைப் பெற்றுக்கொண்டு, அமைதியாக இருக்கிறார்? அம்பானி – அதானியைப் பற்றிப் பேசுவதை இரவோடு இரவாக நிறுத்திவிட்டீர்களே! உங்களுக்குள் என்ன ஒப்பந்தம்? உங்களுக்குள் ஏதோ இருக்கிறது” என்று பேசினார் நரேந்திர மோடி.
இந்நிலையில், மோடியின் இத்தகைய பேச்சுக்கு தனது X சமூக வலைதளப் பக்கத்தில் எதிர்வினையாற்றியிருக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் இனி நண்பர்கள் அல்ல. மூன்று கட்டத் தேர்தல்கள் முடிந்த நிலையில், பிரதமர் தனது சொந்த நண்பர்களையே தாக்க ஆரம்பித்துவிட்டார். மோடியின் நாற்காலி ஆட்டம் கண்டிருப்பதையே இது பிரதிபலிக்கிறது. முடிவுகளின் உண்மையான போக்கு இதுதான்” என்று பதிவிட்டிருக்கிறார்.
அம்பானி மற்றும் -அதானி உடன் காங்கிரஸ் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இதன் காரணமாகவே ராகுல் காந்தி அவர்கள் குறித்துப் பேசுவதில்லை எனவும் பிரதமர் மோடி விமர்சித்த நிலையில், இதற்கு வீடியோ மூலம் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
“மோடி ஜி வணக்கம்…நீங்கள் பயந்துவிட்டீர்களா என்ன? பொதுவாக நீங்கள் மக்களுக்குத் தெரியாமல்தான் அம்பானி, அதானி குறித்துப் பேசுவீர்கள். ஆனால், இந்த முறை முதன்முறையாகப் பொதுவெளியில் அம்பானி, அதானி குறித்துப் பேசியுள்ளீர்கள். அவர்கள் லொறியில் பணம் தருவது உங்களுக்கும் தெரிந்து இருக்கிறது பாருங்கள். இது என்ன உங்கள் தனிப்பட்ட அனுபவமா? அப்படிப் பணம் கொடுத்தார்கள் என்றால் உடனே அவர்களிடம் அமுலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐயை அனுப்பி தீவிர விசாரணையை நடத்துங்கள். பா.ஜ.கவின் ஊழல் லொறியின் ஓட்டுநர் யார்? உதவியாளர் யார்? என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும்” என்று பதிலடி கொடுத்துள்ளார் ராகுல் காந்தி.
எஸ்.சாரங்கன்