டான்ஸ் மாஸ்டர் தினேஷ், கதாநாயகனாக நடிக்கும் படம், ‘நின்னு விளையாடு’. நாயகியாக மலையாள நடிகை நந்தனா ஆனந்த் நடித்துள்ளார். மேலும், தீபா சங்கர், பசங்க சிவக்குமார், சாவித்திரி உட்பட பலர் நடித்துள்ளனர். சி.சவுந்தர்ராஜன் எழுதி இயக்கி இருக்கிறார்.
இவர், கே.பாக்யராஜின் உதவியாளர். ராஜ் பீக்காக் மூவிஸ் சார்பில் எம்.கார்த்திக் தயாரிக்கும் இந்தப் படம் பற்றி இயக்குநர் சி.சவுந்தர்ராஜன் கூறியதாவது:
“ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் குடும்பத்தின் கதையாக இதை உருவாக்கியுள்ளோம். இதுவரை, ஜல்லிக்கட்டு தொடர்பாக பல படங்கள் வந்திருந்தாலும் அதில்இருந்து வேறுபட்டு இது இருக்கும். அழுத்தமான கருத்தும் இருக்கிறது. காளை மாடு வளர்க்கும் இளைஞராக தினேஷ் மாஸ்டர் நடித்திருக்கிறார். தனது காளை ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற வெறியோடு இருப்பவர் அவர். அவர் அம்மாவாக தீபா நடித்திருக்கிறார்.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் கற்பனை கலந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். ஜல்லிக்கட்டுக் காளைகள், சிவகங்கை மாவட்டத்தில்தான் அதிகமாக இருக்கின்றன. இதன் கதையும் அங்குதான் நடக்கிறது.
எட்டு நிமிட கிளைமாக்ஸ் காட்சியை, ஒரே ஷாட்டில் எடுத்தோம். படத்தில் அது அழுத்தமான காட்சியாக இருக்கும். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், சிறப்பாக இருப்பதாகப் பாராட்டினர். இவ்வாறு அவர் கூறினார்.