கிரேக்கத்தின் தலைசிறந்த தத்துவஞானிகளில் ஒருவர் பிளேட்டோ. இவர் உலகின் முதல் தத்துவஞானியான சோக்ரடீசின் தலை சிறந்த மாணவர் தத்துவஞானி அரிஸ்டோட்டிலின் ஆசிரியர். இவர் மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.
கி.மு. 427இல் ஏதென்ஸில் ஒரு பணக்கார மற்றும் அரசியல் பாரம்பரியமுள்ள குடும்பத்தில் பிளேட்டோ பிறந்தார். ஆனால், செல்வத்தின் மீது இவருக்கு ஈடுபாடு காணப்படவில்லை. கல்வியின் மீதே அதிகம் நாட்டம் இருந்தது.
மேலும் இசையிலும் ஓவியம் வரைவதிலும் மற்றும் கவிதைகள் எழுதுவதிலும் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. கிரேக்கத்தில் அப்போது கட்டாய இராணுவச் சட்டம் இருந்ததால் அவர் சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றினார். போரிலும் அவர் கலந்துள்ளார். தனது இருபதாவது வயதில் சோக்ரடீஸ் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சீடனாக சேர்ந்தார். எட்டு ஆண்டுகள் அவரிடம் கல்வி பயின்றார். பிளேட்டோவுக்கு அரசியலிலும் ஆர்வம் இருந்தது.
ஆனால், அப்போதைய ஆட்சியாளர்கள் சுயநலவாதிகளாகவும் சர்வாதிகாரிகளாகவும் இருந்ததனால் அவருக்கு அரசியல் மீது வெறுப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் தான் அவரின் குருவான சோக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தண்டனையை தடுத்து நிறுத்த முயன்றவர்களுள் பிளேட்டோவும் ஒருவர். ஆனால், அது பலனளிக்கவில்லை. ேசாக்ரடீஸ் கொல்லப்பட்டார். அவரின் மீது பிளேட்டோவிற்கு இருந்த ஈடுபாட்டைக் கண்ட ஏதென்ஸ் ஆட்சியாளர்கள் அவர் மேல் இராஜதுரோக குற்றம் சாட்டினர்.
அதனால் அவருக்கு ஆபத்து ஏதும் நிகழும் முன் நண்பர்களின் உதவியுடன் ஏதென்ஸை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு முப்பது வயது தான் ஆகியிருந்தது. பின் அடுத்த 12 ஆண்டுகள் எகிப்து, இத்தாலி, ஆபிரிக்க நாடுகளுக்குச் சென்று அங்கிருந்த அரசியல் மற்றும் சமூக அமைப்புகளை சுற்றறிந்தார்.
பின்னர் இந்தியாவிற்கு வந்த பிளேட்டோ இந்து ஆத்ம தியானம் மற்றும் வருணாசிரம தர்மத்தையும் ஆராய்ந்தார். கி.மு. 387 இல் ஏதென்ஸ் திரும்பிய அவர் வருங்கால சந்ததிக்கு இளைஞர்களை தயார்ப்படுத்த எண்ணினார்.
ஒரு மனிதனின் அறிவும் பண்பும் வளர கல்வியும் தத்துவ சிந்தனையும் அவசியம் என உணர்ந்த அவர் ‘பிளேட்டோ எகடமி’ என்ற கல்விக் கூடத்தை நிறுவினார். அது தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளில் அதன் புகழ் உலகெங்கும் பரவியது. அங்கு பயின்றவர்களுள் மிக முக்கியமானவர் தத்துவஞானி அரிஸ்டோட்டில். தனது அனுபங்களையும் சிந்தனைகளையும் திரட்டி ‘குடியரசு’ என்ற உலகப் புகழ்ப்பெற்ற நூலை எழுதினார். அதோடு 25 நூற்றாண்டுக்கு முன்னரே பெண்ணுரிமையை வலியுறுத்தினார் பிளேட்டோ.
கிரேக்க மொழியில் பிளேட்டோ என்பது ‘பரந்த’ எனப் பொருள்படும். பெயருக்கு ஏற்ப அவரது சிந்தனைகளும் தத்துவங்களும் பரந்ததாக இருந்தது. பிளேட்டோ எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது இறுதி காலம் அமைதியாகவே இருந்தது. இறுதியில் அவர் பிறந்த தினத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அவர் மரணத்தை தாளாது மாணவர்கள் கண்ணீர் சிந்தியதோடு ஏதென்ஸ் நகரமே இருள் சூழ்ந்து சோகத்துடன் காணப்பட்டது. அவரின் உடலை ஏதென்ஸ் மக்கள் அணிதிரண்டு சென்று சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்தனர்.
கு. அவினாஷ் - வத்தளை