மத்திய கிழக்கில் ஏற்பட்டுவரும் பதற்ற நிலையின் பின்புலத்தில் ஈராக், சிரியாவிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மீது மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் மூன்று மாதங்கள் எவ்வித தாக்குதல்களும் நடத்தப்படாத சூழலில் கடந்த ஞாயிறன்று ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.
இத்தாக்குதலைக் கண்டித்துள்ள அமெரிக்காவின் பென்டகன் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பட்ரிக் ரைடர், “ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள எமது பாதுகாப்பு படையினரைப் பாதுகாக்க ஈராக் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது படையினரை இலக்கு வைத்து இவ்விதமான தாக்குதல் தொடருமாயின், கடந்த காலங்களில் நாங்கள் செயற்பட்டது போன்று எங்கள் படைகளை பாதுகாக்க தயங்க மாட்டோம்” என்று எச்சரித்துள்ளார்.
ஈராக்கிலிருந்து, சிரியாவிலுள்ள அமெரிக்க தளமொன்றின் மீது இத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமையும், அதனைத் தொடர்ந்த அமெரிக்காவின் எச்சரிக்கையும் மத்திய கிழக்கு பதற்றத்திற்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.
ஏற்கனவே சிரியாவில் தமது தூதரகம் தாக்கப்பட்டமைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட நேரடித்தாக்குதலைத் தொடர்ந்து அதற்குப் பதிலடியாக 2024.04.19 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து உச்சபட்ச பதற்றம் ஏற்பட்டிருந்த சூழலில், மறுநாள் ஈராக்கின் ஹஸ்ட் அல் சாபி ஆயுதக் குழுவின் தலைமையகம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி 28 ஆம் திகதிக்கு பின்னர் அமெரிக்க தளமொன்றின் மீது மீண்டும் முதற்தடவையாக ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
‘காஸா மீது யுத்தத்தை முன்னெடுத்துவரும் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்துவரும் அமெரிக்காவும் அதன் படைகளும் எமது மண்ணில் இருக்கக்கூடாது. அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும்’ என்று கோரிவரும் ஈராக் மற்றும் சிரியாவிலுள்ள ஈரான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய போராளிக் குழுக்கள், அங்குள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் 2023.10.23 முதல் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
காஸா மீது முன்னெடுக்கப்படும் யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லாக்களும், யெமனின் ஹுதிகளுக்கும், ஈராக்கிலுள்ள இஸ்லாமிய போராளிக் குழுக்களும் இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுக்கின்றன. அதில் ஈராக் போராளிக் குழுக்கள் ஈராக், சிரியாவிலுள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீதும் தாக்குதல்களை முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஈராக்கில் 2500 அமெரிக்கப் படையினரும், சிரியாவில் 900 அமெரிக்கப் படையினரும் உள்ளனர். இவர்களது தளங்களே ஈராக் போராளிக்குழுக்களின் இலக்காக உள்ளன. கடந்த 2023 ஒக்டோபர் 17 ஆம் திகதி ஈராக்கின் அல் ஐன் விமான தளத்திலுள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீது முதன் முறையாக ட்ரோன் தாக்குதலை இக்கழுவினர் நடத்தினர். அத்தாக்குதலில் சில வீரர்கள் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து ஈராக், சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது இக்குழுக்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்ற அதேநேரம், அமெரிக்கப் படைகளும் பதில் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன.
இத்தாக்குதல்களினால் அமெரிக்கப் படையினர் பலர் காயமடைந்தனர். அவர்களில் சிலரின் மூளையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகம் அறிவித்தது.
இவ்வாறான சூழலில் இஸ்ரேல்-_ஹமாஸ் யுத்தநிறுத்தம் அமுலில் இருந்தது. அச்சமயம் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களும் தாக்குதல்களை நிறுத்தின. இச்சூழலில் இந்த யுத்தநிறுத்தத்தை முறித்துக் கொள்வதற்கான முஸ்தீபுகள் உச்சகட்டத்தில் காணப்பட்டன.
ஹமாஸ்_-இஸ்ரேல் யுத்தநிறுத்தம் 2023 நவம்பர் 31 ஆம் திகதி முறிவடைந்ததோடு ஈராக் போராளிக்குழுக்களும் தாக்குதல்களை மீண்டும் தொடங்கின. இந்நிலையில் ஈராக்கிற்கு மேலதிகமாக 1500 படைகளை அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் அமெரிக்கா மேற்கொண்ட பதில் தாக்குதலொன்றில் ஈராக் போராளிக் குழுவொன்றின் தலைவர் கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஈராக்கில் பதற்றநிலை ஏற்பட்டதோடு அமெரிக்கப் படைகள் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றது. இச்சூழலில் அமெரிக்கா தலைமையிலான வெளிநாட்டு படைகளை ஈராக்கில் குறைப்பது குறித்து பேச்சுவார்த்தையும் நடாத்தப்பட்டது.
இச்சமயம் ஸ்பெய்ன் வெளிவிவகார அமைச்சர், ‘ஈராக் கேட்டுக் கொண்டால் நாம் வெளியேறத் தயாராக இருக்கிறோம்’ என்றார்.
இவ்வாறான சூழலில் ஜோர்தானுக்கு அருகிலுள்ள அமெரிக்காவின் டவர் 22 படைத்தளத்தின் மீது 2024.01.28 ஆம் திகதி ஈராக் குழுக்கள் தாக்குதலை மேற்கொண்டன. அதன் விளைவாக மூன்று அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதோடு 47 பேர் காயமடைந்தனர். இதற்கான பொறுப்பை ஹாதிப் ஹிஸ்புல்லாஹ் என்ற ஈராக் போராளிக்குழு ஏற்றது.
இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ‘ஈராக், சிரிய ஆயுதக் குழுக்களுக்கு தக்கபாடம் புகட்டப்படும்’ என்றதோடு அதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுத்தது. அதனால் மத்திய கிழக்கில் குறிப்பாக ஈராக், சிரியா, ஜோர்தானில் உச்சகட்டப் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அதே ஆயுதக்குழு, ‘இனிமேல் அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல்களை நடத்த மாட்டோம்’ என்று அறிவித்தது.
ஆனாலும் பென்டகனின் பாதுகாப்பு திணைக்கள பிரதிப் பேச்சாளர் சப்ரினா சிங்க், 2024.1.31 இல் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், 2023.10.23 முதல் 2024.1.29 வரையான காலப்பகுதியில் ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள எங்களது நிலைகள் மீது 165 ஆளிலில்லா விமானத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. அவற்றில் 66 தாக்குதல்கள் ஈராக்கிலும் 98 சிரியாவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அல் அஸத் விமான தளம் மீது 30 தடவை தாக்குதல்கள் தாக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார். இத்தாக்குதல்களால் 120 க்கும் மேற்பட்ட அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர் என்று சி.என்.என். தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்கா 2024.02.03 ஆம் திகதி ஈராக், சிரிய ஆயுதக் குழுக்களின் நிலைகள் மீது 85 இற்கும் மேற்பட்ட ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்தது. அதனால் 40 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 16 பேர் ஈராக்கிலும் சிரியாவில் 23 பேரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான சூழலில் ஈராக்கின் ஹரக்கத் அல் நுஜாபா ஆயுதக் குழுவின் தலைவர் முஸ்தாக் கஸிம் அல் ஜவாரி விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக 2024.02.04 இல் பென்டகன் குறிப்பிட்டது. அதேநேரம் ஹிஸ்புல்லாஹ்வின் சிரேஷ்ட தளபதி அபூபக்கர் அல் சாடி உள்ளிட்ட இரு தளபதிகள் 2024.02.07 இல் கொல்லப்பட்டதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்த நாட்களில் ஈராக், சிரியாவிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு வந்தன.
இவ்வாறான பின்னணியில் ஈராக் படையில் அங்கம் வகிக்கும் ஹஸ்ட் அல் சாபி ஆயுதக் குழுவின் ஹல்சு என்ற இடத்திலுள்ள இராணுவ தலைமையகம் மீது 2024.04.20 ஆம் திகதி அதிகாலையில் திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடாத்தப்பட்டது. அதனால் குழுவின் ஒரு அங்கத்தவர் கொல்லப்பட்டதோடு எட்டு பேர் காயமடைந்தனர். கட்டடங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
ஈராக் பிரதமர் சூடானி, ஒரு வார காலம் அமெரிக்காவுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொண்டு இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவிட்டு தாயகம் திரும்பியுள்ள சூழலில்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதலுக்கு எவரும் பொறுப்பெடுக்காத போதிலும், ‘தமக்கு இத்தாக்குதலுடன் எவ்வித சம்பந்தமும் இல்லை’ என்று அமெரிக்கா உடனடியாக அறிவித்தது.
என்றாலும் வடக்கு ஈராக்கிலுள்ள ஜம்மார் என்ற இடத்தில் இருந்து வடகிழக்கு சிரியாவிலுள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஐந்து ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இத்தாக்குதலை கதைப் ஹிஸ்புல்லாஹ் குழு பொறுப்பெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இத்தாக்குதல் தொடர்பில் ஈராக் அரசாங்கம் விசாரணைகளை உடனடியாக முன்னெடுத்தது. ஈராக், சிரியாவிலுள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் ஒரு குடையின் கீழ் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.