Home » அனைத்து தரப்பும் இணைந்தாலே நீதி கிட்டும்
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்:

அனைத்து தரப்பும் இணைந்தாலே நீதி கிட்டும்

ஈஸ்டர் குண்டு தாக்குதல் பற்றிய பாராளுமன்ற விவாதங்களில் இருந்து

by Damith Pushpika
April 28, 2024 6:38 am 0 comment

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம் பெற்று ஐந்து ஆண்டுகள் நிறைவுறும் இக்காலத்தில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் வழமையை விட அந்த சம்பவம் இம்முறை பெரும் பேசுபொருளாகியுள்ளது.

அதனை அரசியலாக்குவதற்கு அல்லது தேர்தல் நெருங்கும் இந்த காலகட்டத்தில் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு அதனைப் பயன்படுத்தும் செயற்பாடுகளும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும் கத்தோலிக்கத் திருச்சபையும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் உண்மையில் அந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதும் அதற்கான பிரதான சூத்திரதாரி யார் என்பதும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருவதைக் காண முடிகிறது.

அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேலும் காலம் தாழ்த்தாது துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

இத்தகைய பின்னணியில் பேராயரின் சார்பில் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ அண்மையில் மீண்டும் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

அதன் போது அவர் மேலும் சில புதிய விடயங்களை சமர்ப்பித்து அது தொடர்பில் இந்த விசாரணைகளின் போது முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வாக்குமூலம் மற்றும் அவர் முன்வைத்த அந்த விடயங்கள் தொடர்பிலும் தற்போது பல்வேறு கருத்துக்களும் சாதக பாதகமான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றதைக் காண முடிகிறது.

இத்தகைய பின்னணியிலேயே கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான மூன்று நாள் விவாதம் நடைபெற்றது.

அந்த விவாதத்தில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் தமது கருத்துக்களை முன் வைத்ததுடன் விவாதத்தின் இறுதியில் அதற்கு பதிலளித்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அந்த தாக்குதல் தொடர்பில் இவ்வளவு காலம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் சபையில் விளக்கமளித்தார்.

அந்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதற்கு கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் ஆயர் பேரவையின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்றும் கேட்டுக் கொண்டார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பிலிருந்தும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதை விவாதங்களில் காண முடிந்தது.

இனி பாராளுமன்ற விவாதத்தைப் பார்ப்போம்

அமைச்சர் டிரான் அலஸ்

ஈஸ்டர் ஞயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமானால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகிறது.

குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் பொலிஸ் தரப்பிலும் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை 11 நாட்கள் பாராளுமன்றத்தில் நாம் விவாதங்களை நடத்தியுள்ளோம். அதற்காக 150 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு தீர்வு காண முன்வராவிட்டால் இன்னும் விவாதங்களைத் தொடர வேண்டிய நிலையை தவிர்க்க முடியாது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அவர் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த முடியாது. அவ்வாறு செயற்படுத்தினால் பலரை பகைத்துக் கொள்ள நேரிடும் என்று குறிப்பிட்டதாக பேராயர் தெரிவித்துள்ளார் .

எனினும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் கடந்த நிலையில் பேராயர் இப்போதுதான் இதனை வெளியிடுகின்றார். ஏன் அவர் இப்போது இதனை வெளியிட வேண்டும் என்பதில் ஒரு சந்தேகம் எழுகிறது. அவர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியதை ஏற்றுக்கொண்டிருந்தாரா? அவ்வாறெனில் அது தொடர்பில் ஏன் மௌனம் காத்தார் என்ற கேள்விகளும் எழுகிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான இம்முறை விவாதத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட விடயங்கள் மாத்திரமே மீண்டும் மீண்டும் பேசப்படுகின்றன .

நான் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் பேராயருடனும் கத்தோலிக்க திருச்சபையுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன்.

முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் பற்றி தெளிவு படுத்துவதாக குறிப்பிட்டேன், அவர்களிடம் ஏதேனும் தகவல்கள் இருக்குமானால் அவற்றை வழங்குமாறும் கோரினேன். ஆனால் பேராயரிடமிருந்தோ கத்தோலிக்கத் திருச்சபையின் தரப்பிலிருந்தோ சாதகமான பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பான அறிக்கைகள் கிடைக்கவில்லை என்று கத்தோலிக்க ஆயர் பேரவையினர் குற்றஞ்சாட்டினார்கள்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முழுமையான அறிக்கையை நான் ஒப்படைத்தேன். அறிக்கையின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் அறிக்கையை ஊடகங்களுக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று அவர்களிடம் நான் கேட்டுக்கொண்டேன்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக பரிசீலனை செய்த ஆயர் பேரவையினர் கடந்த வாரம் எனக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்கள்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளோம். குண்டுத் தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமானால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் பொலிஸ் தரப்பிலும் குறைபாடுகள் காணப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளேன்.

ரவூப் ஹக்கீம் எம்பி

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்துவதை விடுத்து அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய பாராளுமன்ற மேற்பார்வைக் குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு தகவல்கள் தொடர்பாக செயற்பட அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்.

அது தொடர்பான விவாதங்களின் போது ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு அதன் அடிப்படை என்ன என்பதை தெரியாமலிருக்கின்றோம்.

இந்த தாக்குதல் தொடர்பில் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருப்பதாகவும் பெருமளவு விசாரணைகள் முடிவடைந்திருப்பதாகவும் சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் தெரிவிக்கின்றார்.

விசாரணைகளில் பல புதிய விடயங்கள் வெளிப்பட்டுள்ளன. அதனால் மேலும் விசாரணைகள் இடம்பெறும்போது இன்னும் பல புதிய விடயங்கள் வெளிவரலாம். அத்துடன் புலனாய்வுத் துறையுடன் இணைந்து செயற்படும் குழு தொடர்பாகவும் பேசப்படுகிறது. அந்தக் குழுவின் செயற்பாடுகள் நாம் அனைவரும் அறிந்ததே.

ஈரான் ஜனாதிபதியின் வருகையின் போது நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எவரும் ஊடுருவ முடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அவர் பாதுகாப்பாக திரும்பிச்செல்லும் வரை அது தொடர்ந்தது. அவ்வாறானவர்கள் வரும் போது நாட்டின் பாதுகாப்பு பலமானதாக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம்.

எனினும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் அது தொடர்பாக புலனாய்வுத் தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது. அப்படியானால் அப்போது ஏற்பட்ட தவறு என்ன? அதனால் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய பாராளுமன்ற குழுவொன்று அமைக்கப்பட வேண்டும். புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் அதில் ஆராய வேண்டும்.

அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முஸ்லிம் மக்களும் கண்டிக்கின்றார்கள். ஒருகாலத்தில் ஜே.வி.பி. பயங்கரவாத அமைப்பாக செயற்பட்டது.

அதன்போது கொல்லப்பட்டவர்களை அந்தக் கட்சியினர் இப்போதும் நினைவு கூருகின்றனர். அதேபோன்று உயிரிழந்த விடுதலைப் புலிகளை மாவீரர்களாக தமிழர்கள் நினைவு கூருகின்றனர். ஆனால் முஸ்லிம் சமூகம் சஹ்ரானையும் அவரின் சகாக்களையும் நினைவு கூருவதில்லை. அவர்களை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த வகையில் ஈஸ்டர் தாக்குதலை அடிப்படை வாத குழுக்களே நடத்தியுள்ளன என்பது புலப்படுகிறது.

ஹரீன் பெர்னாண்டோ

கத்தோலிக்க சட்டத்தரணிகள் சமூகத்தை அழைத்து அதிகாரங்களுடனான ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் விவாதிப்பதைவிடுத்து அதற்கு விரைவில் தீர்வொன்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பிலான சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

இந்த விடயத்தை அரசாங்கமோ அமைச்சர்களாகிய நாமோ தெரிவிக்க வேண்டியதில்லை. அதற்கான பிரேரணையை எதிர்க்கட்சி தரப்பிலிருந்து சஜித் பிரேமதாச அல்லது அநுரகுமார திஸாநாயக்கவோ முன்வைத்திருக்கலாம். கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்த தலைசிறந்த சட்டத்தரணிகள் நாட்டில் உள்ளனர். இவர்கள் மூலம் அமைக்கப்படும் ஆணைக்குழுவுக்கு, உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒப்படைக்க வேண்டும்.

தாக்குதல் தொடர்பில் 93பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த தாக்குதல் தொடர்பான அனைத்து தரவுகளையும் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கவேண்டும். அந்த விசாரணையில் அரசியல் தலையீடுகளை யாராவது மேற்கொண்டால் அதனை எமக்கு தெரிவிக்கலாம் .

தேர்தல் வெற்றி தோல்வியல்ல குண்டுத் தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

தேர்தல் வெற்றி தோல்வியை அடிப்படையாக கொள்ளாது, ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் பல விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஐந்து வருடங்களில் அந்த சம்பவம் தொடர்பில் பெருமளவு உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் ஒன்பது குண்டுதாரிகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.

1983ஆம் ஆண்டு முதல் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்படும் வரை ஒவ்வொரு தேர்தலிலும் பேசுபொருளாக பயங்கரவாதமே முன்வைக்கப்பட்டது.

அதனை அடிப்படையாகக் கொண்டு தேர்தல்கள் வெல்லப்பட்டன. இந்த வரலாற்றைப் பலரும் மறந்து விட்டனர்.

2015ஆம் ஆண்டு அதனோடு சம்பந்தப்பட்டதல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும். அதேவேளை, 2019ஆம் ஆண்டு நடந்த மேற்படி குண்டுத் தாக்குதலோடு அடுத்த தேர்தல் பெறுபேறுகள் தீர்மானிக்கப்பட்டன.

அந்த அடிப்படையில் எதிர்வரும் தேர்தலிலும் அதனையே முன்வைக்க முயற்சிப்பது இந்த விவாதங்கள் மூலம் அறிய முடிகிறது.

நாம் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் கவலையடைகின்றோம். அதேபோன்று மதத்தலைவர்களும் அது தொடர்பில் கவலையடைகின்றனர்.

மஹிந்தானந்த அளுத்கமகே எம்பி

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பேராயரும், மக்கள் மத்தியில் மாறுப்பட்ட நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்.

கத்தோலிக்கர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக அவர்கள் குரல் கொடுக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் இந்த நாட்டில் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் இதுவல்ல. தலதா மாளிகை, ஸ்ரீ மா போதி, காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் என மதத் தலங்கள் மீது அடிப்படைவாதிகளாலும், பயங்கரவாதிகளாலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தலதா மாளிகை தாக்குதல், அரந்தலாவ பிக்குகள் படுகொலை சம்பவங்களை சிங்கள பௌத்தர்கள் இழுத்துக் கொண்டு செல்லவில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்தாரிகளையும், தாக்குதலை தடுக்க தவறியவர்களையும் கத்தோலிக்க திருச்சபை குற்றஞ்சாட்டுவதில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை மாத்திரமே குற்றஞ்சாட்டுகிறார்கள்.

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க

எவ்வாறாயினும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அப்பாவி மக்கள். அதுவும் கத்தோலிக்க மக்களின் முக்கிய தினமான ஈஸ்டர் தினத்தன்று திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் கோரிக்கை.

ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. இனியும் இதனை இழுத்தடிப்பு செய்ய முடியாது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட்டு இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க அரசாங்கமும் சம்பந்தப்பட்டவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நேர்மை, வெளிப்படைத் தன்மை, அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளே அதற்கு உதவ முடியும் என்பதே எமது தாழ்மையான கருத்து.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division