எந்தவொரு நாடும் தமது பொருளாதார மூலோபாயத்தைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. நாட்டின் அமைவிடம், இயற்கை வளங்கள், கடற்கரை, பல்லுயிர்கள், சுற்றுச்சூழல், காலநிலை, விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றுடன் இணைந்த பொருளாதார மூலோபாயங்கள் எமக்குள்ளன. இவை அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, தற்போதைய உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் இன்று நமது பொருளாதார மூலோபாயங்களில் பிரதான இடமிருப்பது கல்விக்காகும். நாட்டை அபிவிருத்திப்
பாதையில் கொண்டு செல்வதற்கும், நாட்டைக் வளப்படுத்துவதற்கும் முக்கியமாக இருப்பது கல்விதான் என நாங்கள் நினைக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் கல்விச் சீர்திருத்தங்கள் நாட்டுக்குத்
தேவையானவை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டியூஷன் கல்வி முறை நிறுத்தப்படும் எனச் சிலர், கூறுகின்றனர். கல்வியின் மூன்று பிரிவுகள் உள்ளன. அதாவது அரச கல்வி, தனியார் கல்வி மற்றும் வெளிநாட்டுக் கல்வி போன்றவையே அவையாகும். குறிப்பாக எமது நாட்டில் பாடசாலைக் கட்டமைப்பில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. ஆனால் இன்று நகரப் பாடசாலை மாணவர்களும், கிராமப்புற பாடசாலை மாணவர்களும் ஒரே மண்டபத்தில் டியூஷன் வகுப்பறையில் சந்திக்கிறார்கள். எங்கள் கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வை ஓரளவுக்கேனும் களைய உங்கள் பணி மிகவும் முக்கியமானது. இன்று நம் நாட்டில் மாணவர்களின் கல்வியில் நீங்கள் பெரும் பங்கு வகிக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். அந்த மரியாதையையும் மதிப்பையும் நாங்கள் உங்களுக்கு வழங்குவோம். உங்கள் தொழிலை இரத்துச் செய்யும் நோக்கம் எம்மிடம் ஒருபோதும் இல்லை. எனினும், எங்களிடம் ஒரு கொள்கை இருக்கின்றது. மாணவர்களுக்கும், குடிமக்களுக்கும் கல்வியை வழங்குவது அரசின் கடமை. அந்தப் பொறுப்பை நாங்கள் கைவிட மாட்டோம். எனினும் அந்த கல்வியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய பல வழிகள் உள்ளன. அந்த வழிகள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும். கல்வியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய இன்னும் பல வழிகளும் எமது பிள்ளைகளுக்காகத் திறக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கிறோம். வீழ்ந்து போயுள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக கல்வித் துறையில் நீங்கள் பெரும் பங்குதாரர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.