சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை எதிர்வரும் ஜூன் மாதத்தில் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுவதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது, அடுத்த கடன் தவணைக்குரிய இரண்டாவது கடன் மீளாய்வை இலங்கை நிறைவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“குறித்த மீளாய்வின் அடிப்படையில் ஊழியர் மட்ட இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்றுக்குழுவின் இணக்கப்பாடு வழங்கப்படாதுள்ளது. இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முழுமைப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனைகள் சில காணப்படுகின்றன.
சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாட்டை ஒப்பந்தமாக மாற்றுவது இதில் முக்கிய நிபந்தனையாகும். சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது மற்றைய நிபந்தனையாக காணப்படுகிறது.
இதற்கமைய சர்வதேச பிணைமுறி உரிமையாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பேச்சுவார்த்தையில் அடையாளம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில் இரண்டாவது பேச்சுவார்த்தையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன், சர்வதேச கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உயர்ந்தபட்ச வெளிப்படைத் தன்மையுடன் இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது” எனத் தெரிவித்தார்.