பியகம மற்றும் மஹரகம பிரதேசங்களில் சுமார் 35 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், 5 சந்தேக நபர்களும் நேற்று முன்தினம் (26) இரவு கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக பியகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பண்டாரவத்த பிரதேசத்தில் காரொன்றை பொலிஸார் வழிமறித்து சோதனையிட்டனர். இதன்போது அதில் 15 கிலோ 81 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 14 கிலோ 527 மில்லிகிராம் ஹேஷ் ரக போதைப்பொருள், 941 மில்லிகிராம் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டதுடன், காரிலிருந்த 31 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை பொலிஸாரால் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் 7 கிராம் 620 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 2 பேரும், 220 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றொருவரும் கைது செய்யப்பட்டனர். 31 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட இச்சந்தேக நபர்கள் மூவரும் கடுவலை, அரலகங்வில, சியம்பலாபே பிரதேசங்களை சேர்ந்தவர்களென, பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மஹரகமவின் நாவின்ன பிரதேசத்தில் 8 கிலோகிராம் ஹெரோயினுடன் 45 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், இவரிடமிருந்து சுமார் 16 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை கைப்பற்றியதாகவும், பொலிஸார் கூறினர்.