சமகால சர்வதேச அரசியலில் சீன- அமெரிக்க உறவு முதன்மையான கவனத்தை பெற்றுள்ளது. உலக ஒழுங்கினை தீர்மானிப்பதில் சீன- அமெரிக்க உறவே பிரதான சக்தியாக உள்ளது. கொரோனா நெருக்கடிக்குப் பின்னரான உலக ஒழுங்கின் மாறலில் அமெரிக்கா எதிர் சீனா பற்றிய உரையாடல் அதிகளவில் பேசுபொருளாகியுள்ளது. இரு அரசுகளுக்குமிடையிலான உறவில் வன்அதிகார பிரயோகம் இல்லாத போதிலும், மென் அதிகார இயல்புகளை பகுதியளவில் காணக்கூடியதாக உள்ளது. ரஷ்ய- உக்ரைன் மற்றும் மேற்காசிய மோதல்களில் சீனாவின் தலையீடு நேரடியாக காணப்படாத போதிலும், அமெரிக்கா பெருளாதார தடை விதித்துள்ள ரஷ்யா மற்றும் ஈரான்- ஹமாஸ் அணியினருக்கு ஆதரவான அரசியலையே வெளிப்படுத்தி வருகின்றது. இது சீன- அமெரிக்க உறவில் பனிப்போர் அரசியல் இயல்புகளையே அடையாளப்படுத்துகின்றது. எனினும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியால், அமெரிக்காவால் சீனா தவிர்க்க முடியாத அரசாக காணப்படுகின்றது. இந்தப் பின்னணியிலேயே அமெரிக்காவின் அரச பிரதிநிதிகள் தொடர்ச்சியாக சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு சீன அரச உயர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர். இக்கட்டுரை சீன விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகார செயலாளரின் அரசியல் முன்னுரிமைகளை தேடுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஏப்ரல் 24-,26ஆம் திகதிகளில் சீனாவுக்கு தனது இரண்டாவது பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவரது முதலாவது சீனப் பயணத்தைத் தொடர்ந்து, ஒரு வருட காலப்பகுதிக்குள் இரண்டாவது பயணத்தையும் மேற்கொண்டுள்ளார். கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் 2023 ஜூன் பிளிங்கனின் பயணம் உட்பட, 2023இல் கருவூலச் செயலர் ஜேனட் யெல்லன் மற்றும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் முன்னாள் வெள்ளை மாளிகையின் காலநிலை தூதர் ஜான் கெர்ரி மற்றும் வர்த்தக செயலாளர் ஜினா ரைமண்டோவின் தொடர்ச்சியாக ஏப்ரல் இறுதியில் மீளவும் பிளிங்கனின் பயணம் அமையப்பெற்றுள்ளது. பிளிங்கனின் வருகை முக்கியத்துவம் பெறுவதன் பின்னால் சீனாவின் அழைப்பும் உள்ளது. பிளிங்கனின் தற்போதைய வருகை, ‘சீனப் பிரதிநிதியின் அழைப்பின் பேரில்’ வந்ததாக வெளிப்படையாகக் கூறப்படும், ஒரு உயர்மட்ட அமெரிக்க அதிகாரியின் ஒரே வருகையாகும். இது தொடர்பில் சீனாவில் உள்ள நடப்பு விவகாரங்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆய்வாளர்கள் தமது விசனத்தையும் தெரிவித்துள்ளார்கள். ஒன்பது மாதங்களில் பிளிங்கன் சீனாவிற்கு தனது இரண்டாவது விஜயத்தின் நடுவில், ‘சீனாவின் நேரத்தை வீணடிக்க’ வந்துள்ளதாகவும் அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரம் இங்கே இருக்கிறதா என்றும் சீனாவில் உள்ள ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளார்கள்.
இத்தகைய விமர்சனங்களுக்கு அமெரிக்க- சீன இராஜதந்திரிகளின் உரையாடல் உள்ளடக்கங்களே காரணமாகின்றது. இதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகின்றது.
முதலாவது, 23ஆம் திகதி, சீன அரசு ஊடகமான CCTV யின் புதிய ஊடக தளமான ‘யு யுவான் டான் தியான்’ பிளிங்கனின் வருகை தொடர்பாக சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் வட அமெரிக்க மற்றும் ஓசியானிய விவகாரத் துறையின் தலைவரால் கோடிட்டுக் காட்டப்பட்ட ஐந்து முக்கிய நோக்கங்களை வெளியிட்டது. அவ்வூடக செய்தியறிக்கையின் படி, சரியான புரிதலை வளர்ப்பது, இரு தரப்புக்கும் இடையேயான உரையாடலை மேம்படுத்துதல், கருத்து வேறுபாடுகளை திறம்பட நிர்வகித்தல், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வது மற்றும் முக்கிய நாடுகளாக பொறுப்புகளை கூட்டாக சுமப்பது என்பன முக்கிய உரையாடல் உள்ளடக்கங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஆண்டு கலிபோர்ணியாவில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் உடனான சந்திப்பின் போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் முன்மொழிந்த ஐந்து தூண்களும் ஒத்த கருத்துக்களையே கொண்டுள்ளன. கூட்டாக சரியான புரிதலை வளர்ப்பது, கருத்து வேறுபாடுகளை திறம்பட நிர்வகித்தல், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை கூட்டாக முன்னெடுத்துச் செல்வது, முக்கிய நாடுகளின் பொறுப்புகளை கூட்டாக சுமப்பது மற்றும் கூட்டாக மக்களை ஊக்குவிப்பது என்பனவே கலிபோர்ணியா சந்திப்பில் முன்மொழியப்பட்டது. இது சீன- அமெரிக்க இராஜதந்திரிகளின் தொடர்ச்சியான உரையாடல்களின் முன்னேற்றமின்மையையே குறித்து நிற்கின்றது. இந்த ஐந்து இலக்குகளை சீன அரசு ஊடகத்தின் ஒரு பகுதி விளம்பரப்படுத்துவதன் நோக்கம், சீனா ‘முக்கிய பிரச்சினைகளில் சமரசம் செய்துகொள்ளாது’ என்பதை தெளிவுபடுத்துவதன் மூலம் பிளிங்கனை அழுத்தத்துக்கு உள்ளாக்குவதாகும்.
இரண்டாவது, சீன- அமெரிக்க இராஜதந்திர உரையாடல்களின் முதல் நோக்கம் ‘இரு நாட்டுக்குமிடையில் சரியான புரிதலை வளர்ப்பதை’ வலியுறுத்தியது. அதாவது சீனா- அமெரிக்க உறவுகளின் தொனியை வடிவமைப்பது. எனினும் இதுவரை அமெரிக்க- சீன உறவில் புரிதல் என்பது கடினமாகவே உள்ளது. மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ரஷ்யா- உக்ரைன் போர் ஆகியவற்றில் வேறுபாடுகளுடன், தொழில்நுட்ப மேலாதிக்கத்திற்காக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இறுக்கமான உறவுகளுக்கு மத்தியிலேயே பிளிங்கனின் சீன விஜயம் அமையப்பெற்றுள்ளது. அத்துடன் பிளிங்கனின் வருகைக்கு முன்னதாக, அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி, ஐரோப்பிய பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் அச்சுறுத்தலாய் அமையும் ரஷ்யாவின் பாதுகாப்புத் தளத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை ஆதரிக்க வேண்டாம் என பீஜிங்கை எச்சரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எச்சரிக்கை மற்றும் அழுத்தங்களுக்குள் பேச்சுவார்த்தை சிறந்த மனநிலையை உருவாக்கப்போவதில்லை. இந்த பின்னணியிலேயே சீன ஆய்வாளர்கள் அமெரிக்க இராஜதந்திரிகளின் வருகையை எதிர்ப்பதாகவும் அமைகின்றது.
மூன்றாவது, சீனாவில் பிளிங்கனின் கலந்துரையாடல்கள் அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தியறிக்கையில் வேறுபட்டதாக அமைகின்றது. பிளிங்கனின் கலந்துரையாடல், இஸ்ரேல்- காசா போர் மற்றும் இஸ்ரேல்- ஈரான் பதற்றங்கள், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர், சீனா- தைவான் பிரச்சினைகள் மற்றும் தென் சீனக் கடல் ஆகியவற்றை உள்ளடக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது. மேலும் இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக, “போதைக்கு எதிரான ஒத்துழைப்பை மீண்டும் தொடங்குதல், இராணுவ – இராணுவத் தொடர்பு, செயற்கை நுண்ணறிவு, மக்களிடையே உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளும் உடன்படாத பகுதிகளில் கூட அமெரிக்காவும் சீனாவும் போட்டியை பொறுப்புடன் நிர்வகிப்பதற்கான முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தல்” என்பனவே பேசு பொருளாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் குறிக்கோளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கா உலகளாவிய விடயங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது. இருதரப்பு உறவுகளில், போதைப்பொருள் மற்றும் மக்களிடையேயான உறவுகளை எதிர்த்துப் போராடுவது சில முன்முயற்சிகள் மற்றும் முன்னேற்றங்களைக் கொண்டுவருவதற்கான அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது. அதேநேரத்தில் இராணுவத் தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில், அமெரிக்காவிற்கு முதன்மை போட்டியாளராக சீனாவின் தற்போதைய போக்கு மாறாமல் இருக்கும். அமெரிக்க வெளியுறவுத் துறை வகுத்துள்ள நிகழ்ச்சி நிரலில் சீனாவின் மிக அழுத்தமான கவலைகள் உள்ளடக்கப்படவில்லை. மாறுபட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் உடன்பாடுகள் சாத்தியமற்றதாகவே புலப்படுகின்றது.
நான்காவது, பெரும்பாலான சீன ஆய்வாளர்களால் பீஜிங்கிற்கு வருகை தரும் அமெரிக்க உயர் அதிகாரிகள் எப்போதும் தொடர்ச்சியாக, தொடர்ச்சியான சர்வதேச பிரச்சினைகளில் சீனா என்ன செய்ய வேண்டும் என்பதையே சொல்கின்றனர். சீன வெளியுறவு அமைச்சகத்தால் நடத்தப்படும் நாட்டின் முன்னணி வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழுவான பீஜிங்கை தளமாகக் கொண்ட சீன வெளியுறவு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லி ஹைடாங், “தொடர்புகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்க அதிகாரிகள் சீனாவுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் சீனாவிற்கு இறுதி எச்சரிக்கையை விடுப்பதற்கு பிளிங்கன் இங்கே இருப்பதாகத் தெரிகிறது.” என சீன ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். பிளிங்கனின் நிகழ்ச்சி நிரலில் ரஷ்யாவின் தொழில்துறை தளத்திற்கு பீஜிங் தனது ஆதரவை நிறுத்த வேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் உள்ளடக்கமும் காணப்படுகின்றது. எனினும், பிளிங்கனின் வருகைக்கு முந்தைய நாள் சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் ஆக்கிரோசமாக கருத்து வெளியிட்டுள்ளார்.
“சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வழக்கமான வர்த்தகம் மற்றும் பொருளாதார பரிமாற்றங்கள் குறித்து அமெரிக்கா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. மற்றவர்களை கொச்சைப்படுத்துவதோ மற்றும் பழியை மடைமாற்றுவதோ உக்ரைன் பிரச்சினையை தீர்ப்பதற்கான வழி அல்ல” என வாங் வென்பின் தெரிவித்துள்ளார். உரையாடலுக்கு முன்னரே மறுப்புகள் முதன்மை பெற்றுள்ளன.
இவ்வாறாக முரண்பாட்டை விதைக்கும் உரையாடலுக்கு, சீன அமெரிக்க வெளியுறவுச் செயலாளரை அழைத்தமைக்கு பின்னால், சீனா ரஷ்யாவுடன் பேரம் பேசும் மூலோபாயத்தை கட்டமைக்கின்றது. அதிக பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் ரஷ்யாவுடன் தற்போதைய சூழ்நிலையில் வழக்கமான வர்த்தகத்தை பராமரிப்பதன் மூலம், சீனா வழக்கத்திற்கு மாறாக அதிக விலையை செலுத்துகிறது. அதை ரஷ்யா ஈடுசெய்ய வேண்டும் என்று சீனா தெரிவிக்க விரும்புகிறது. இந்த பின்னணியிலேயே ரஷ்யாவுடனான சீனாவின் உறவை கண்டிக்கும் அமெரிக்காவின் உயர் இராஜதந்திரியை சீனா உரையாடலுக்கு அழைத்துள்ளது. ரஷ்யா இந்த சைகையைப் புரிந்து கொள்ள முடிந்தால், அது இயற்கையாகவே பல துறைகளில் அதன் திறப்பை விரிவுபடுத்தும் என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எனவே, சீனாவிற்கான அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரின் அழைப்பு சீன-, ரஷ்ய உறவை வடிவமைப்பதற்கான தந்திரோபாய பொறிமுறை என்ற அளவிலேயே பயனுடையதாகும். மறுதளங்களில் சீன ஆய்வாளர்கள் விமர்சிப்பது போன்று சீன இராஜதந்திரிகளின் நேரத்தை வீணடிக்கும் செயலாகவே அமெரிக்காவின் இராஜதந்திரிகளின் சீன விஜயம் அமைகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது. சீன மற்றும் அமெரிக்க இராஜதந்திரிகள் முரண்பட்ட நிகழ்ச்சி நிரலை வெளிப்படையாக முன்வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வது ஆரம்பத்திலேயே உரையாடலை நிரகாரிக்கும் இராஜதந்திர மொழியாடலாகவே அமைகின்றது.