நுவரெலியா மாவட்ட மக்களின் நன்மை கருதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நுவரெலியா மாவட்ட ஆட்பதிவு திணைக்கள காரியாலயம் நாளை 22.04.2024 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நுவரெலியா லேடி மெக்லம் டிரைவ் பகுதியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் திறந்து வைக்கவுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன் கலபொட தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண காரியாலயமாக திறந்து வைக்கப்படவுள்ள இந்தக் காரியாலயத்தில் நாளை முதல் மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட அனைத்து மக்களும் தங்களுடைய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்த காரியாலயம் திறந்து வைக்கப்படுவதன் மூலமாக இந்த பகுதியில் இருக்கின்ற மக்களின் தேவைகளை இலகுவாக பூர்த்தி செய்யக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச திணைக்கள அதிகாரிகளுக்கும் அழைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நந்தன கலபொட மேலும் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இருந்த பெரும் குறைபாடு ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மூலமாக தீர்த்து வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்ட மக்கள், அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக கொழும்புக்கு சென்று வர வேண்டிய நிலைமை இருந்தது. ஆனால் தற்பொழுது இந்த மாகாண காரியாலயம் திறக்கப்படுவதன் மூலமாக அந்த பிரச்சினை தீர்த்து வைக்கப்படுகின்றது, என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் குறிப்பிடுகின்றார்.
ஆட்களை பதிவு செய்கின்ற காரியாலயம் ஒன்று நாளை 22 ஆம் திகதி நுவரெலியாவில் திறப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதை தான் வரவேற்பதாக முன்னாள் நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் சந்தனலால் கருணாரத்ன தெரிவிக்கின்றார். இது தொடர்பாக அவர் தினகரனுக்கு கருத்து தெரிவிக்கையில்
நான் ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாநகர சபையின் நகர முதல்வராக செயற்பட்ட காலப்பகுதியில் நாங்கள் பலமுறை நுவரெலியாவில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக அன்றைய பிரதமரும் இன்றைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தோம். இதன்போது அவர் பல விடயங்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். அதன் ஒரு கட்டமே நாளை நுவரெலியாவில் திறக்கப்படவுள்ள ஆட்பதிவு திணைக்கள பிராந்திய காரியாலயம்.
இந்த ஆட்பதிவு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயமானது இன்றைய காலகட்டத்தை பொறுத்த வரையில் மிகவும் அத்தியாவசியமான ஒரு விடயமாகும். ஏனெனில் தற்பொழுது மக்கள் பொருளாதார ரீதியாக சில சிக்கல்களை எதிர்கொள்கின்றார்கள். அவர்கள் தங்களுடைய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பிற்கு செல்ல வேண்டிய ஒரு நிலைமை ஏற்படுகின்றது. அதனை நுவரெலியாவில் செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமாயின் அது மிகவும் இலகுவாக அமைந்துவிடும்.
ஒரு புறம் கொழும்பிற்கு செல்வதற்கான பண, கால, நேரம் விரயம் போன்றன மீதப்படுத்தப்படுகின்றன. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல விடயங்களை ஒரே இடத்தில் செய்து கொள்ள கூடியதாகவுள்ளது. இதனை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிவார். குறிப்பாக அவர் பிரதமராக இருந்த காலப்பகுதியில் பல அபிவிருத்தி திட்டங்களை நுவரெலியாவில் முன்னெடுத்தார். அதற்கு காரணம் நுவரெலியாவை ஒரு உல்லாச நகரமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கமே அவரிடம் இருக்கின்றது.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூர நோக்கு சிந்தனையுடன் செயற்படுகின்ற ஒரு ஜனாதிபதி. அவருடைய செயற்பாடுகளை எமது மக்கள் புரிந்து கொள்வதற்கு சில காலங்கள் தேவைப்படும். நாளை திறக்கப்படவுள்ள ஆட்பதிவு திணைக்கள காரியாலயமானது, விசேடமாக எங்களுடைய பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களுக்கு தங்களுடைய அடையாள அட்டைகளை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அது மட்டுமல்லாமல் நுவரெலியா மாவட்டத்தில் இருக்கின்ற கிராமப் புறங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இது தவிர இன்னும் பல முக்கியமான காரியாலயங்களை நுவரெலியாவில் திறந்து வைப்பதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள வேண்டும் எனவும் நாம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அதற்கு சாதகமான பதிலை பெற்றுத் தந்தள்ளார்.
வர்த்தகர் சந்திரகுமார்
ஆட்பதிவு திணைக்கள காரியாலயத்தை நுவரெலியாவில் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நாட்டில் பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகள் இருந்தாலும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றமை பாராட்டிற்குரியது.
எங்களுடைய பெருந்தோட்ட தொழிலாளர்கள் அவசரமாக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் கொழும்பிற்கே சென்று வர வேண்டிய ஒரு நிலைமை இருக்கின்றது. குறிப்பாக பெண்கள் தனியாக கொழும்பிற்கு சென்று வருவதில் பாதுகாப்பு உட்பட பல சிக்கல்களை சந்திக்கின்றார்கள்.
எனவே இவ்வாறான சேவைகள் நுவரெலியாவுக்கு கொண்டு வர வேண்டிய போறுப்பு அரசாங்கத்தினுடையது. அரசாங்கம் மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும். அந்த மனநிலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு. இருக்கின்றது.
நுவரெலியா மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனைத்து தேர்தல்களிலும் அமோக வரவேற்பை கொடுத்திருக்கின்றார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்காலத்தை சிந்தித்து செயற்படுகின்ற ஒரு தலைவராகவே பார்க்க வேண்டியுள்ளது.
நுவரெலியா தினகரன் நிருபர்