Home » அரசாங்கத்திற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன

அரசாங்கத்திற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா

by Damith Pushpika
April 21, 2024 6:00 am 0 comment

சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகளின் ஆரம்பத்திலிருந்தே இலங்கை மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனவே?

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட விடயங்களை அரசாங்கம் பெருமளவு நிறைவேற்றியுள்ளது. எனினும் IMF க்கு இது வெற்றியடைந்திருந்தாலும், பிரச்சினை இருப்பது மக்களுக்கேயாகும். ஏனென்றால் ஆட்சியிலிருந்து வெளியேறியவர்கள் நாட்டை அழித்து விட்டே வெளியேறினார்கள். அப்போதிலிருந்து ஏற்பட்ட இந்த நிலையினை மக்களால் தாங்கிக் கொள்ளச் சிரமமாக உள்ளது.

அரசாங்கத்துக்கும் இறையாண்மைப் பத்திரதாரர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ள சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும் என்றும், அதனை மூன்றாம் தவணைக்கு முன்னர் வெற்றிகரமாக நிறைவு செய்வதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளாரே?

இது மிகவும் சிக்கலான விடயமாகும். பின்னர் செலுத்திக் கொள்ளலாம் என காலம் தாழ்த்தக்கூடிய விடயம் அல்ல. இதனுள் இருப்பது மிகவும் சிக்கலான தொழில்நுட்ப செயற்பாடுகளாகும். அவர்கள் யோசனை ஒன்றை வழங்கினார்கள். நாம் அதனை எதிர்த்தோம். நாம் யோசனை ஒன்றை முன்வைத்தோம். அவர்கள் அதனை எதிர்த்தார்கள். இப்போது மூன்றாவது யோசனை தொடர்பில் ஓரளவு இணக்கப்பாட்டிற்கு வர முடியுமான நிலை காணப்படுகின்றது. எனினும் இந்த அரசாங்கத்திற்கு இன்னும் ஆறு மாதங்கள் மாத்திரம் இருப்பதே பிரச்சினையாக உள்ளது. அப்போது இன்னொரு அரசாங்கத்தினால் வந்ததன் பின்னர் இது 2038ஆம் ஆண்டு வரை இயங்கும். இன்னும் ஆறு மாதங்களைக் கொண்ட அரசாங்கத்திற்கு சிறந்த நல்லாட்சி இருக்குமானால் இந்த நிலையினை அரசியலுக்கு அப்பால் சென்று பார்க்க வேண்டும். இந்த நிலை தொடர்பில் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

எனினும் கடந்த காலங்களில் இந்தப் பேச்சுவார்த்தையை எதிர்க்கட்சி நிராகரித்ததல்லவா?

நான் எத்தனை தடவைகள் பேச்சுவார்த்தை நடத்துமாறு கேட்டேன் தெரியுமா? எனினும் வாய்ப்புத் தரவில்லை. அவர்கள் வழங்கியது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் இலங்கை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பாகும். அது இதற்குரியதல்ல. ஏனென்றால் நாங்கள் ஆரம்பத்திலிருந்தே IMF உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நான்தான் முதலில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு கோரினேன். அன்று ராஜபக்‌ஷக்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றிருந்தால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருக்காது. இவ்வாறு நாம் சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கவும் மாட்டோம். ராஜபக்‌ஷக்கள் வீட்டுக்கு சென்றிருக்கவும் மாட்டார்கள்.

வருங்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்திற்கு இந்த பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்?

இந்தக் கடன் மறுசீரமைப்பு என்பது இன்று அல்லது நாளை நிறைவு செய்யக்கூடிய ஒன்றல்ல. இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததன் பின்னர் அடுத்த அரசாங்கம் அந்த உடன்படிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும். எனவே, இவற்றை இந்த அரசால் செலுத்த முடியுமா, முடியாதா என்பதை ஆலோசிப்பது நல்லது.

அதனால்தானா IMF நிபந்தனைகள் மக்களுக்கு மோசமானவை என்றும், மீண்டும் தனது அரசாங்கத்தின் கீழ் அவற்றை மாற்றத் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறாரே?

அது IMF நிபந்தனைகள் பற்றியது. இது கடன் மறுசீரமைப்பு விதிமுறைகள் பற்றியது. கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் நாம் புதிய கடன்களுக்கு உடன்படுகின்றோம். அதன் பின்னர் இலகு செலுத்தல் முறைகளுக்கு இணங்குகின்றோம். இணங்கிய பின்னர் நாம் கடனைச் செலுத்த வேண்டும். என்றாலும் இந்த அரசாங்கம் இன்னும் ஆறு மாதத்துக்கு மேல் இருக்காது. புதிய அரசாங்கமே பதவியில் இருக்கும். அவர்களின் இணக்கப்பாட்டுடன் இந்தச் செயற்பாடுகளை மேற்கொள்வதே சிறந்தது. இந்த கடன் மறுசீரமைப்பை அரசியலாக்குவது நல்லதல்ல என்பதே எனது கருத்தாகும்.

அரசாங்கம் கடைப்பிடித்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் சாதகமான வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக பலர் கூறுகின்றனர். நாட்டின் தற்போதைய முன்னேற்றத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

வரிசைகள் இல்லை. என்றாலும் உணவுக்கான செலவு 2019ஆம் ஆண்டை விட இன்று 124 வீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் கூறப்படுவது, வரிசைகள் இல்லாத காலத்தின் வாழ்க்கைச் செலவுக்கும் கோட்டாபயவுக்குப் பிறகு வரிசைகள் ஒழிக்கப்பட்டதன் பின்னைய காலத்திற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கின்றது என்பதேயாகும். அன்று 30 லட்சம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் இருந்தார்கள். இன்று 70 லட்சம் பேர் உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒருவர் நீங்களா?

இது சுதந்திரப் போராட்டம்தானே. எனவே எவராலும் எதனையும் கூற முடியும். நான் இவ்வாறான கதைகளை ஒரு காதால் வாங்கி மறு காதால் வெளியேற்றிவிடுவேன்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுகிறார். இந்த நிலை உங்கள் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை எப்படி பாதிக்கும்?

ஜனாதிபதி நியமனப் பத்திரத்தில் கைச்சாத்திடும் வரைக்கும் அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்பது எமக்குத் தெரியாது. எனக்கு ஜனாதிபதியைப் பற்றி நன்கு தெரியும். நாம் எமது தேர்தல் பிரசாரத்தினைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றோம்.

சுபாஷினி ஜயரத்ன தமிழில்: - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division