டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (“Dialog”), ஆசிஆட்டா குழுமம் பெர்ஹாட் (“Axiata”) மற்றும் பார்த்தி எயார்டெல் லிமிடட் (“Bharti Airtel”) (“தரப்பினர்” அனைவரும் ஒன்றாக), ஆகியன பார்த்தி எயார்டெல் லங்கா (பிரைவேட்) லிமிடட்டின் (“Airtel Lanka”) வெளியிடப்பட்ட பங்குகளை முழுமையாக கையகப்படுத்துதல் குறித்த வரையறுக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு இணங்குகின்றன.
இந்த உடன்படிக்கையின் கீழ் எயார்டெல் லங்காவின் வெளியிடப்பட்ட பங்குகளில் 100%ஐ டயலொக் கையகப்படுத்தும் அதேவேளை டயலொக்கின் மொத்த வெளியிடப்பட்ட 10.355% மதிப்பிலான சாதாரண வாக்குரிமை பங்குகளை பங்குமாற்று முறைமூலம் பார்த்தி எயார்டெலுக்கு டயலொக் வழங்கும்.
இந்த பரிவர்த்தனை டயலொக் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது மற்றும் பங்கு விற்பனை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்திசெய்யும்வரை நிலுவையில் உள்ளது, இதில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் (CSE) அனுமதி மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்ட, கூட்டாண்மை மற்றும் ஒழுங்குமுறை இணக்க நடைமுறைகள் ஆகியவை அடங்கும்.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) முன்மொழியப்பட்ட இவ்வொன்றிணைவுக்கு அதன் அனுமதியை வழங்கியுள்ளது, இது இலங்கை முழுவதும் தொலைத்தொடர்பு சேவைகளை ஏற்றுக்கொள்வதற்கான அதன் தொலைநோக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த ஒன்றிணைவு, இணைக்கப்பட்ட நிறுவனத்தை பாரிய அளவிலான பொருளாதாரங்களைத் திரட்டவும், உட்கட்டமைப்பில் நகலெடுப்புகளை குறைப்பதற்கும், தொழில்நுட்பம் மற்றும் மூலதனச் செலவினங்களில் ஒருங்கிணைவை அடைவதற்கும், மேம்படுத்தப்பட்ட அதிவேக Broadband இணைப்பு, குரல் மற்றும் பெறுமதிசேர் சேவைகள், செலவு சேமிப்பு மற்றும் தொழிற்பாட்டு வினைத்திறன் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.ஆசிஆட்டா குழுமம் பெர்ஹாட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விவேக்சூட் “டயலொக் மற்றும் எயார்டெல்லங்காவுக்கு இடையிலான இந்த ஒன்றிணைவு ஆசிஆட்டாவின் சந்தை இணைப்பு மற்றும் மீண்டெழுந் தன்மைக்காக வகுக்கப்பட்ட மூலோபாயத்தின் வழி சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்றிணைவு ஆசிஆட்டாவின் பங்குதரர்களுக்கு மதிப்புகளை உருவாக்கும்.
மேலும் இவ்விரு நிறுவனங்களும் ஒன்றிணைவதை நாம் எதிர்நோக்கியுள்ளோம்.
எயார்டெல் லங்கா மற்றும் அதன் ஊழியர்கள் மீது நாம் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அவர்களுடன் சேர்ந்து இலங்கை மக்கள், வணிகங்கள், மற்றும் பொதுத்துறைக்காக பணியாற்ற ஆவலாக உள்ளோம்” என தெரிவித்தார்.