இந்து மகா சமுத்திரத்தை அழகு செய்ய எழில் முத்தாய் காட்சி தரும் நீர்வளமும், நில வளமும் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் இலங்கை திருநாட்டின் தென் மாகாணத்தில் உள்ள நகரங்களில் தெனியாய நகரும் ஒன்று.
இந்த நகர் தேயிலை தோட்டங்களினால் சூழப்பட்டுள்ளது. இந்த நகரில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்திற்கு கீழே நாலா புறங்களிலும் நெல் வயல்களினால் சூழப்பட்டுள்ள ஒரு சிறு குன்றில் ஸ்ரீ சிவசுப்பிரமணிய பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் எழுந்தருளி ஏறத்தாழ ஏழரை தசாப்தங்களாக அருள்பாலித்து வருகிறார்.
வட மாகாணத்தில் இருந்து வர்த்தகம் செய்யும் நோக்கத்துடன் தெனியாய நகரில் குடியேறிய அமரர் வேலுப்பிள்ளை இன்னும் பலருடன் சேர்ந்து ஒரு கோயிலை அமைப்பதற்காக மூன்று ஏக்கர் காணியை விலை கொடுத்து வாங்கி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலை கட்டுவித்து 1959ஆம் ஆண்டின் இறுதியில் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினார்.
அமரர் வேலுப்பிள்ளைக்கு பின்பு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பு அமரர் பெ.உ.சுப்பையாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்பு அவரின் மகனான உ.சு.கோவிந்தசாமி சபையின் பொருளாளர் பதவியை பொறுப்பேற்று நா.மு. சண்முகத்தை தலைவராகவும் ஆர். பொன்னுசாமியை செயலாளராகவும் கொண்டு சபை நடவடிக்கைகள் கிரமமாக இடம்பெற்றன.
அமரர் எஸ்.எம்.தங்கையா, திருவாளர்கள் சபாபதி, தம்பித்துரை மற்றும் தெனியாய நகரிலுள்ள வர்த்தகர்கள், தெனியாய நகரைச் சுற்றியுள்ள தோட்டங்களிலுள்ள முக்கியஸ்தர்கள் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் முழு ஒத்துழைப்பை அவ்வப்போது பெற்று கோவில் வருடாந்த திருவிழாக்கள் உட்பட அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்பட்டன.
உ.சு.கோவிந்தசாமி காலமானதன் பின்பு சி.பக்தசீலன் கோவிலின் அறங்காவலர் பதவியுடன் பொருளாளர் பதவியையும் பொறுப்பேற்று நா.மு.சண்முகம் தலைவராகவும் ஆர்.பொன்னுசாமி செயலாளராகவும் கொண்டு கோவிலின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் பின் ச. அருள்நாதன் தலைவராகவும் செ. மனோ சிவநாதன் செயலாளராகவும் சி.பக்தசீலன் பொருளாளராகவும் செயல்பட்டு கோவில் செயல்பாடுகளை முன்னெடுத்தார்கள். அதன் பின்பு 27.11.1997 வியாழக்கிழமை ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலின் பாலஸ்தாபனம் நடைபெற்று 2003ஆம் ஆண்டு இறுதியில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின்பு கோயில் பரிபாலன சபையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. தற்போது கோவில் திருப்பணி குழுவினரின் தீர்மானங்களுக்கு ஏற்ப தெனியாய ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலின் பாலஸ்தாபனம் நிகழும் சர்வமங்களகரமான சோபகிருது வருடம் பங்குனி திங்கள் 25ஆம் நாளான இன்று (07.04.2024) ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தசி திதியும் சித்தாமிர்த யோகமும் உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடிய முற்பகல் 11 மணி 51 நிமிடத்தில் பாலஸ்தாபனம் இடம்பெற திருவருள் கூடியுள்ளது.
பாலஸ்தாபனம் சம்பந்தமான அனைத்து சமய கிரியைகளும் யாழ். நகர் இணுவில் தர்ம சாஸ்தா குருகுலத்தின் சிவ ஸ்ரீ ஆதி சௌந்தராஜக் குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சி. பக்தசீலன், முன்னாள் அறங்காவலர்