“என்ன நடந்த ஹாஜி?”
“ஏன்ட புள்ள… ஏன்ட புள்ள…
ஹசரத் ஏன்ட புள்ளக்கி நடந்தத பாருங்க ஹசரத்.”
“பொறுமையா இரிங்க
ஹாஜி… பொறுமையா இரிங்க.. அல்லாஹ்வுக்காக பொறுமையா இரிங்க”
ஹசரத் அன்வர் ஹாஜியாரை ஆறுதல்படுத்தினார்.
“நேத்து பெமிலில எல்லாரும் சேந்து ட்ரிப் ஒண்டு போனம், வரக்கொல ராவாகிடுச்சு. எங்கட நேரம் ஹசரத் ஒரு வளைவுல வேன திருப்பகொல திடீரென்று லொரியொன்டு வந்த அதுல முட்டிடாம சைட் குடுக்கப் போய் வேன் பள்ளத்துல விழுந்துட்டு. அவ்வளவு பெரிய பள்ளம் இல்ல ஆனா, விழுந்த வேகத்துல மகள் வெளியில போயிட்டு விழுந்துட்டா. தலையில பலத்த அடி இப்ப ஐசியூல பேச்சு மூச்சில்ல ஹசரத். மாமிட கை ஒடஞ்சி. ராத்தாட கால் முள்ளு வெடிச்சி. மத்தவங்களுக்கு சின்ன சின்ன காயம் தான்”
தழுதழுத்த குரலில் விபரித்தார் அன்வர் ஹாஜியின் தம்பி ரயிஸ் ஹாஜி.
“அல்லாஹ்வுக்கு சுக்ர் செய்ங்க ஹாஜி. இதோட போனது போதும் மகளுக்கு சரியாவிடும் அல்லாஹ் இருக்கிறான்”
அன்வர் ஹாஜியின் முதுகை தடவிய படியே ஆறுதலான வார்த்தைகளுடன் சில ஆலோசனைகளையும் வழங்கத் தொடங்கினார் ஹசரத்.
“ஹலோ சொல்லுங்க…”
“ஹலோ ரமீலா என்ன செய்றீங்க? புள்ளகள் எங்க?”
“தூங்குறாங்க…”
“பகல் என்ன செஞ்சீங்க?
” “பருப்பும், சோறும்”
“ராவக்கி என்ன?”
“ஒன்னும் இல்ல புள்ளகள் பசியில தூங்கிட்டாங்க.”
இதைக் கேட்டதும் ரிஷாடின் உள்ளம் துடித்தது. கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது.
“யா அல்லாஹ் எங்களுக்கு ஏனிந்த நிலை?”
ஏண்ட புள்ளகள் பசில தூங்ககொல நான் எப்படி நிம்மதியா இருக்கிற?”
அவன் உள்ளத்தால் இறைவனுடன் முறையிட்டுக் கொண்டான்.
“நீங்க தூங்கலையா?” ”
நீங்க கோல் எடுக்க காட்டியும் இருந்தேன். வீட்டில் ஒன்றுமே இல்லை நாளைக்கு என்ன செய்ரோ தெரியா.”
“இந்த மழ நாள்ல வேலைக்குப் போகவும் ஏலாம இருக்கி. ரெண்டு நாளா ரூம்ல தான். கையில சல்லியும் இல்ல அங்கால இங்கால தேடி இரண்டாயிருவா வச்சிருக்கேன். காலையில போட்டு விடுறேன் நேரத்தோடு போயிட்டு புள்ளைகளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாங்க சரியா.”
அவள் பெருமூச்சுடன் “சரி” என்றாள்.
“இன்னும் ரெண்டு நாள்ல நோன்பும் வருது பெருநாளைக்கு என்ன செய்றோ தெரியா…
புள்ளகள் பெருநாள் உடுப்பப் பத்தியே சொல்லிக் கொண்டிருக்காங்க. எனக்கில்லாட்டியும் பரவால்ல சின்னதுகளுக்கு ஏதாவது வாங்க ட்ரை பண்ணுங்க
சரி..சரி…யோசிக்காதீங்க ரமீலா நோன்புக்கு அல்லாஹ் பரக்கத் செய்வான்….
பெருநாளை பத்தி பொறவு பாப்போம் மொதல்ல நாளைக்கு சாப்பாட்டுக்கு வாங்குற வழியப் பாருங்க…”
சற்று கடுமையாகவே சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தான்.
அடக்க முடியாமல் வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாலும் அணையுடைந்த வெள்ளமாய் கண்களிலே பெருக்கெடுத்த கண்ணீரை துடைத்தவாறு குளியலறைக்குள் சென்றவன் ஓவென்று அழுது தீர்த்தான்… ரிஷாட், ரமீலாவிற்கு மூன்று குழந்தைகள். அழகிய குடும்பம். நடுத்தரவர்க்க வாழ்க்கை. ரிஷாடுக்கு சரியான தொழிலொன்றில்லை. கிடைத்த வேலையெல்லாம் செய்வான். கிடைக்கும் வருமானத்தையெல்லாம் அவனுக்கோ வீண் செலவுகளோ செய்யாமல் அப்படியே குடும்ப செலவுகளை பார்ப்பான். குடும்பத்தில் பிரச்சினைகள் ஒன்றுமில்லை. பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போது ஓரளவு சமாளித்துக் கொண்டு சென்றாலும் அவர்கள் வளர வளர உணவு, பாடசாலை செலவுகள் என்று வாழ்க்கைச் செலவு அதிகரித்ததே ஒழிய வருமானம் அதிகரிக்கவில்லை. இப்பொழுதெல்லாம் மூன்று வேளை உணவு பல நாட்களுக்கு இரண்டு வேளையாகவே ஆகிப்போனது. கொஞ்சம் பழகியும் விட்டது. இருந்த நகைகளையெல்லாம் விற்று கொஞ்சம் கடனும் வாங்கி வீட்டை எப்படியோ கட்டிக் கொண்டு விட்டார்கள். அந்தளவில் நிம்மதி என்றாலும் அவனது வருமானத்தில் தான் அந்த கடன்களையும் அடைக்க வேண்டி இருப்பதால் திண்ட பாதி தின்னாத பாதியாக வாழ்க்கை அல்லல் படுகிறது. பிள்ளைகள் தான் பாவம் இந்த வயதில் அவர்களுக்குள் இருக்கும் ஆசைகளை அடக்கியே பழகி விட்டார்கள். ஆனால் அவர்களின் கண்களில் தெரியும் ஏக்கங்கள் தினம் அவளைச் சுடுவது அவளுக்கு மட்டும் தான் தெரியும். அவளும் தாயல்லவா….
நடுத்தர வர்க்க வாழ்வு நாய் திண்ட வாழ்வு. கஷ்டத்தை வெளியில் சொல்லவும் முடியாத, வெட்கத்தை விட்டு கையேந்தவும் முடியாத தன்மான பிரச்சினையுடனான போராட்டங்கள் எத்தனை அவஸ்தை…
அழுது முடித்தவள், உளூ செய்து தொழுதுவிட்டு, “யா அல்லாஹ் வறுமையை விட்டும் பாதுகாத்திடு ரஹ்மானே” என்று மனம் உருகி பிரார்த்தித்து விட்டு அடுத்த நாள் வாங்குவதற்கான சாமான்களை பட்டியலிட்டு விட்டு உறங்கப் போனாள்.
“ஹசரத் நீங்க சொன்ன மாதிரி எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டேன். ஒரு சின்ன உதவி இதுவல கொஞ்சம் பங்கிட்டு கொடுத்துருங்க…”
“இல்ல ஹாஜி நீங்க உங்க கையாள கொடுக்கிறது தான் நல்லமெண்டு நான் நினைக்கிறேன். நானும் கூட வாரேன் வாங்க போவோம்”
மறுக்க முடியாமல் அன்வர் புறப்பட்டார்.
விடியலுக்காக காத்திருந்த ரமீலா விடிந்தும் விடியாததுமாக மூத்த மகள் நுஸ்ரத்திடம் சின்னவளை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு இரண்டாம் மகன் ரசீனுடன் புறப்பட்டாள்.
“உம்மா நடக்கேலா பசிக்குது பஸ்ல போவோம்.”
“பஸ்ல போக காசில்ல மகன். வரக்கொல பஸ்ல வருவம்”
மகனை தேற்றியவாறு மெல்ல நடக்கலானாள்.
“உம்மா இந்த தடவ பெருநாளைக்கு உடுப்பு எடுக்கக்கொல என்னையும் கூட்டிட்டு போங்க”
“அத அந்த நேரம் பார்ப்போம் இப்ப வாய மூடிட்டு வாங்க”
இயலாமையை மறைத்தவளாக ரசீனை அதட்டினாள்.
நகரத்திற்கு அவ்வளவு தூரம் இல்லாவிட்டாலும் இன்று ஏனோ அவளுக்கு பாதை நீண்டதாகவே தோன்றியது. நடக்க நடக்க மூச்சு வாங்கத் துவங்கியது. கண்கள் இருட்டியபடி வர மகனின் தோள்களை பிடித்தவள் மெல்ல சரியலானாள். “உம்மா… உம்மா…”
ரசீனின் அலறல் தூரத்தில் ஒலிப்பதாய் உணர்ந்தவாரே மயங்கிப் போனாள்.
“இந்த ஏரியால நிறைய கஷ்டப்பட்டவங்க இருக்காங்க. அதுதான் நான் இந்த எடத்த தெரிவு செஞ்சன். இந்த ஸதக்காவெல்லாம் கொடுத்த பிறகு பாருங்க ஹாஜி அதிலுள்ள பரக்கத்தை.”
அன்வர் காரை செலுத்த அருகில் இருந்து கதைத்துக் கொண்டு வந்தார் ஹசரத்.
“அங்க பாருங்க ஹாஜி
கார நிப்பாட்டுங்க… நிப்பாட்டுங்க…”
சடனா பிரேக் அடித்த அன்வர் அப்போதுதான் கவனித்தார் அந்த பாதையோரம் பெண்ணொருவர் விழுந்து கிடப்பதை. காரை விட்டிறங்கிய இருவரும் ரமிலாவை நோக்கி விரைந்தார்கள்
. “ஏன் என்னாவின?”
பதறியபடியே அழுது கொண்டிருந்த ரசீனிடம் வினவினார்கள்.
“உம்மா மயங்கி விழுந்துட்டாங்க”
“ஏன் உம்மாக்கு ஏதாவது சுகம் இல்லையா?”
“இல்ல அங்கிள் நல்லா தான் வந்தாங்க திடீரென்டு விழுந்துட்டாங்க.”
“ஹாஜி தண்ணி போத்தல் எடுங்க என்றவாரே,
“நீங்கள் சாப்பிட்டீங்களா?” என்று ரசீனிடம் வினவினார் ஹசரத்.
“நேத்து பகல் சாப்பிட்ட இப்ப சாமன் வாங்க தான் டவுன் போறம்.”
“பஸ்ல போக இருந்துச்சே”
என்ற போது தலையை கவிழ்த்துக் கொண்டு மௌனமானான் ரசீன். “சாப்பிடாமல் இருந்தாலும் அல்லாஹ்வைத் தவிர யாருகிட்டயும் கஷ்டம் சொல்லவானம்” என்ற தாயின் அறிவுரை அவன் காதுகளில் ஒலித்தது. எவ்வளவு வறுமையிலும் தன் குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்களையும், நற்பண்புகளையும், தன்மானத்தையும் ஊட்டியே வளர்த்தாள். கடன் பட்டேனும் கல்விக்கான தேவைகளைப் பூர்த்தி செய்தாள். பயமும், அடிமைத்தனமும் இறைவனுக்கு மாத்திரமே என்று சொல்லிச் சொல்லி வளர்த்தாள்.
நிலைமையைப் புரிந்துக் கொண்ட ஹசரத் ரமீலாவின் முகத்தில் தண்ணீரை தெளித்தார். சுயநினைவுக்கு வந்த ரமீலாவிடம் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொதிகள் அடங்கலான பையை கொடுத்து “இவங்கட மகளுக்கும் சுகம் இல்ல துவா செஞ்சுக்கோங்க” என்றார்.
” அல்லாஹ் உங்கள் மகளுக்கு நல்ல சுகத்தை கொடுப்பான் இது வேண்டாமே”
அவர்கள் கொடுத்தாலும் பெறுவதற்கு அவள் தன்மானம் தடுத்தது.
” இல்ல சகோதரி இது இறைவன் உங்களுக்கு தந்தது வேண்டாம் என்று சொல்லாதீங்க. ஒவ்வொருவரின் தேவைகளையும் இறைவனே அறிந்தவன்”
“அல்ஹம்துலில்லாஹ்”
இறைவனுக்கு நன்றி கூறியவளாக பெற்றுக் கொண்டாள். அவர்களை கூட்டிச் சென்று ரமீலாவின் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு அன்வர் ஹாஜி நான்கு உணவுப் பொதிகளை எடுத்து ரசீனின் கைகளில் கொடுத்து
” முதல்ல எல்லாரும் சாப்பிடுங்க” என்றார்.
அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அல்லாஹ்வை புகழ்ந்தவளாக குழந்தைகளுடன் சாப்பிட துவங்கினாள். பெரிய தொரு மன நிம்மதியுடன் வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அன்வரின் தொலைபேசி சிணுங்கியது. “ஹலோ…” “ஹலோ நானா சீக்கிரம் வாங்க மகள் கண்ண தொறந்துட்டா.”
“அல்ஹம்துலில்லாஹ்”
அன்வரின் வாய் அல்லாஹ்வை புகழ்ந்தது. செல்வத்தை எப்படி செலவழிக்க வேண்டுமென்றும் அவர் உள்ளம் நன்றாகவே புரிந்து கொண்டது.
அவரின் மனதில் பெருநாளைக்கான ஸதக்கா திட்டமொன்று முளைவிட்டது. அதில் ரஷீடின் குடும்பமே முதலிடம் பிடித்தது…
இன்ஷா அல்லாஹ்
இனி ரமீலாவின் குழந்தைகளும் பெருநாளைக்கு புத்தாடைகளில் ஜொலிப்பார்கள் .
ஷிபானா அப்துல் பதா பதுளை