இன்னும் ஒருவார காலத்தில் உதயமாகவிருக்கும் சித்திரைப் புதுவருடத்தை வரவேற்பதற்கு தமிழ் – சிங்கள மக்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலுள்ள இரு பிரதான இனத்தவர்களான தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் உரித்தான பண்டிகை என்பதால் இது தமிழ் – சிங்கள புதுவருடம் என்றே சொல்லப்படுகிறது. உண்மையில், இந்து சமயத்தைச் சேர்ந்த தமிழ் மக்களும், பௌத்த சமயத்தைச் சேர்ந்த சிங்கள மக்களுமே இந்த சித்திரைப் புதுவருடத்தைக் கொண்டாடி வருகிறார்கள். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்புகளுக்கு சித்திரைப் புதுவருடம் சான்றாக அமைந்துள்ளது. எனினும், இப்புதுவருடத்தைக் கொண்டாடுவதில் இருபகுதியினரும் தனித்தனியான பாரம்பரிய கலாசார நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.
ஜனவரி மாதத்தில் உதயமாகும் ஆங்கிலப் புதுவருடம் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரியதாக இருந்தபோதிலும், உலகிலுள்ள சகல நாடுகளும் அரச மற்றும் பொதுக் கருமங்கள் தொடர்பாக ஆங்கிலப் புதுவருடத்தையே பின்பற்றுவதால், சர்வதேச ரீதியில் அது முக்கியத்துவம் பெறுகிறது. உலகளாவிய ரீதியில் நாட்காட்டிகளும், நாட்குறிப்பு ஏடுகளும் ஆங்கிலப் புதுவருடத்தை மையமாக வைத்து வெளியிடப்படுவதுடன், இதன் அடிப்படையிலேயே சகல பொது விடயங்கள் தொடர்பான நிகழ்வுகளும் வடிவமைக்கப்பட்டும், அட்டவணைப்படுத்தப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.
டிசெம்பர் 31ஆம் திகதி உதயமாகும் ஆங்கிலப் புதுவருடத்தைப்போல, தமிழ் – சிங்கள புதுவருடம் எப்போதும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறப்பதில்லை. கிரகமண்டலத்தில் சூரியபகவானின் சஞ்சாரத்திற்கு அமையவே இப்புதுவருடம் பிறக்கிறது. அதாவது கிரகமண்டலத்திலுள்ள மேடம், இடபம் முதலான பன்னிரண்டு இராசிகளுள் முதலாவதான மேட இராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும்போது முதலாவது மாதமாகிய சித்திரை பிறக்கிறது. இதுவே புதுவருடமாகவும், சூரியபகவானின் மேட இராசிப் பிரவேச நேரமே புதுவருடம் பிறக்கும் நேரமாகவும் கணிக்கப்படுகிறது.
இம்முறை உதயமாகும் ‘குரோதி’ வருடம் அறுபது தமிழ் வருடங்களின் சுற்றுவட்டத் தொடரில் 38ஆவது வருடமாகும்.
சித்திரைப் புதுவருடம் எதிர்வரும் 13ஆம் திகதி சனிக்கிழமை இரவு உதயமாகிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அதேதினம் இரவு 8 மணி 15 நிமிடத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம் 3ஆம் பாதத்தில், மிதுன இராசியில், துலாம் லக்கினத்தில், பூர்வபட்ச சஷ்டி திதியில் பிறக்கிறது. அன்றையதினம் மாலை 4 மணி 15 நிமிடம் முதல் நள்ளிரவு 12 மணி 15 நிமிடம் வரை விஷு புண்ணியகாலமாகும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13ஆம் திகதி இரவு 9 மணி 4 நிமிடத்தில் – மிருகசீரிடம் நட்சத்திரம் 4ஆம் பாதத்தில், மிதுன இராசியில், விருச்சிகம் லக்கினத்தில், பூர்வபட்ச சஷ்டி திதியில் பிறக்கிறது. அன்றையதினம் மாலை 5 மணி 4 நிமிடம் முதல் பின்னிரவு 1 மணி 4 நிமிடம் வரை மேடசங்கிரமண புண்ணியகாலமாகும்.
இந்தப் புண்ணியகாலத்தில் ஒவ்வொருவரும் தலையில் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்வது பாரம்பரிய சமய நடைமுறையாகும்.
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி வெண்மையான பட்டாடை அல்லது வெள்ளைக்கரை அமைந்த புதிய ஆடையையும், நீலக்கல் அல்லது வைரம் பதித்த ஆபரணத்தையும் அணிவது உத்தமம் என்றும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி கருநீலப் பட்டாடை அல்லது நீலக்கரை அமைந்த புதுவஸ்திரத்தையும், இந்திரநீலம் பதித்த ஆபரணத்தையும் அணிவது உத்தமம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
புதுவருடத் தினத்தன்று சூரிய பகவானுக்குப் பொங்கிப் படைத்து வழிபாடு செய்வதும் சமய பாரம்பரிய வழக்கமாகும். இம்முறை இரவு நேரத்தில் புதுவருடம் பிறப்பதால், மறுநாள் அதாவது 14ஆம் திகதி காலை சூரியோதயத்தின்போது பொங்கிப் படைப்பது பொருத்தமானது எனவும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் 14ஆம் திகதி அதிகாலை சூரியோதயத்திற்கு முன்னர் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யலாம் எனவும் சமய அறிஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
உதயமாகவிருக்கும் சித்திரைப் புதுவருடம் சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தோஷமாகும் என பஞ்சாங்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் (1ஆம் 2ஆம் 3ஆம் பாதம்), சித்திரை, விசாகம் (4ஆம் பாதம்), அனுஷம், கேட்டை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தோஷமாகவிருப்பதால், இவர்கள் தவறாது மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்வது அவசியம் என்பதுடன், தான தருமங்களையும், இறைவழிபாட்டையும் விசேடமாக செய்துகொள்ள வேண்டும்.
மலரும் புதுவருடத்தில் பொதுமக்களின் பொருளாதார நிலைமைகள் விஷயத்தில் தனுசு, மீனம் ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு லாபம்; மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு சமநிலை; மேடம், இடபம், கடகம், துலாம், விருச்சிகம் ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு நஷ்டம்; சிங்க இராசியில் பிறந்தவர்களுக்கு பெருநஷ்டம் என்றும் பஞ்சாங்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பொதுவான பலனாகும். சித்திரைப் புதுவருடம் பிறந்தால் கைவிசேடம் பரிமாறிக் கொள்வது ஒரு பாரம்பரிய வழக்கமாகும். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத் தலைவரிடமிருந்தும், வயதில் மூத்தவர்களிடமிருந்தும், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், விற்பனை நிலையங்கள் என்பனவற்றில் பணிபுரிவோர் தங்கள் வேலை கொள்வோரிடமிருந்தும் கைவிசேடம் பெற்றுக் கொள்வார்கள்.
இந்தவகையில், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 14ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி 57 நிமிடம் முதல் 9 மணி 56 நிமிடம் வரையும், காலை 9 மணி 59 நிமிடம் முதல் நண்பகல் 12 மணி வரையும், அதேதினம் இரவு 6 மணி 17 நிமிடம் முதல் 8 மணி 17 நிமிடம் வரையும், மறுநாள் 15ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை 9 மணி 8 நிமிடம் முதல் 9 மணி 51 நிமிடம் வரையும், காலை 9 மணி 55 நிமிடம் முதல் 10 மணி 30 நிமிடம் வரையும் கைவிசேடம் பெறுவதற்குரிய சுபநேரங்களாகும்.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 14ஆம் திகதி முற்பகல் 10 மணி முதல் 11 மணி 15 நிமிடம் வரையும், அதேதினம் மாலை 6 மணி 30 நிமிடம் முதல் 7 மணி 45 நிமிடம் வரையும், மறுநாள் 15ஆம் திகதி காலை 6 மணி முதல் 7 மணி 25 நிமிடம் வரையும், முற்பகல் 9 மணி 35 நிமிடம் முதல் 10 மணி 35 நிமிடம் வரையும் கைவிசேடம் பெறுவதற்குரிய சுபநேரங்களாகும். புதுவருடம் பிறந்தபின் நல்லநாள் பார்த்து தங்கள் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு விருந்துபசாரங்களில் கலந்து கொள்வதும், பெரியோர்களைச் சந்தித்து நல்லாசிகளைப் பெற்றுக் கொள்வதும் சிறப்பான பாரம்பரிய நிகழ்வுகளாகும்.
இந்தவகையில் 14ஆம் திகதி காலை 10 மணி முதல் 11 மணி 15 நிமிடம் வரையும், மறுநாள் 15ஆம் திகதி காலை 9 மணி 10 நிமிடம் முதல் 10 மணி 35 நிமிடம் வரையும் பொருத்தமான சுபநேரங்களாகும்.
உழைப்பையே தங்கள் வாழ்வின் ஜீவநாடியாகக் கொண்டிருப்பவர்கள் புதுவருடத்தில் தங்கள் தொழிற்கருமங்கள் மற்றும் புதுக்கணக்கு என்பனவற்றை ஆரம்பிப்பதற்கு 15ஆம் திகதி (திங்கட்கிழமை) காலை 9 மணி 10 நிமிடம் முதல் 9 மணி 50 நிமிடம் வரையும் காலை 10 மணி முதல் 11 மணி 30 நிமிடம் வரையும் சுபநேரங்களாக சொல்லப்பட்டுள்ளது. மலரவிருக்கும் இந்த குரோதி வருடத்தில், யாவற்றையும் சீர்தூக்கிக் கண்ட நற்பலன் ஏழு பங்கும், தீயபலன் இரண்டு பங்கும் என பஞ்சாங்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அ. கனகசூரியர்