உங்கள் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர் பதவியில் செயற்படுவதைத் தடைசெய்து இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் எவ்வாறிருக்கும்?
நீதிமன்றம் நியாயமான தீர்மானத்தை வழங்கியிருக்கின்றது. அவர் தலைவர் பதவியில் செயற்படுவதைத் தடைசெய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஸ்ரீ.ல.சு.கட்சியினரை சௌகரியங்களுக்கு உள்ளாக்காமல் கட்சியை வலுப்படுத்தும் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமைத்துவம் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதா?
எமக்கு தலைமைத்துவம் தொடர்பில் பிரச்சினை இல்லை. எனினும் கட்சியை வலுப்படுத்தும் பயணத்தை ஆரம்பிப்போம். இந்த நீதிமன்ற தீர்மானத்தின் பிரகாரம் கட்சியின் எதிர்கால பயணம் தொடர்பில் நாம் தீர்மானிப்போம். தலைவர் பதவியில் பிரச்சினை இல்லை.
அண்மையில் ஸ்ரீ.ல.சு. கட்சியினுள் வெடித்த குழப்பம் என்ன?
ஸ்ரீ.ல.சு.கட்சியில் மைத்திரிபால சிறிசேனவும் நானும் 2015ஆம் ஆண்டு குடும்ப ஆதிக்கத்திலிருந்து கட்சியைப் பாதுகாப்பதற்காகவே வெளியேறினோம். எனினும் இன்று நாம் விருப்பமில்லாவிட்டாலும் ஸ்ரீ.ல.சு கட்சியை மைத்திரிபால சிறிசேனாவிடமிருந்து காப்பாற்றவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
கட்சி பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதுதானே?
நாம் நீதிமன்றத்தில் அதனை சரிசெய்து கொண்டோம். அவர் எம்மைக் கட்சியிலிருந்து நீக்கியது தவறு என்பதை நீதிமன்றம் தீர்மானித்து விட்டது. அந்த நீதிமன்றத் தீர்மானத்தின் பிரகாரம் நான் இன்னமும் கட்சியின் தேசிய அமைப்பாளராகும். அமைச்சர் லசந்ததான் கட்சியின் பொருளாளர். அமைச்சர் மஹிந்த அமரவீர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்.
ஜனாதிபதி ரணிலின் தேர்தல் பிரசாரத்திற்கு நீங்கள் ஆதரவு வழங்கியதே இதற்குப் பின்னால் உள்ள வலுவான குற்றச்சாட்டாகும். சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன?
அவர் எந்த ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய குற்றச்சாட்டுக்களையும் சுமத்தவில்லை. கட்சிப் பதவிகளிலிருந்து ஒருவரை நீக்கும்போது அதனை பகிரங்ககூட்டம் ஒன்றின் பின்னரே நீக்கவேண்டும். அதுதொடர்பில் உறுதியான காரணங்களை முன்வைத்து கட்சியின் யாப்புக்கு அமையவே அந்தச்செயற்பாடு இடம்பெற வேண்டும். தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக எம்மீது குற்றம் சுமத்தப்படுமானால் அவரும் ஜனாதிபதியைச் சந்தித்து உதவிகேட்டதை என்ன வென்றுகூறுவது? எமது தலைவராக மைத்திரிபால சிறிசேன தற்போதைய ஜனாதிபதியைச் சந்தித்து உதவிகோரியிருப்பதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது. அவரால் உதவிபெற முடியுமானால் நாம் நாடு வீழ்ந்துள்ள நேரத்தில் நாட்டு மக்களுக்காக சில தீர்மானங்களை மேற்கொள்வதில் பிரச்சினை ஏற்படப் போவதில்லையே.
இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வங்குரோத்தடைந்த கட்சியாகும். 140 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பொறுப்பேற்றுக் கொண்ட கட்சியில் இன்று மீதமிருப்பவர்கள் இருவர் மாத்திரமேயாகும்?
இன்றுவரைக்கும் வங்குரோத்து நிலையில்தான் இருந்தது. எனினும் இப்போது வங்குரோத்தான கட்சியல்ல.
இவ்வாறான நிலையில் வேறு கட்சிகளிடமிருந்து அழைப்புக்கள் வரவில்லையா?
நாம் வேறு எந்தக்கட்சிக்கும் செல்லமாட்டோமே. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுவிட்டு எமது குழுவினர் வேறுகட்சிகளுடன் இணையும் எதிர்பார்ப்பு இல்லை. எனினும் நாம் ஆரம்பத்திலிருந்தே கட்சியில் இருந்து கொண்டு போராடியது கட்சியைப் பாதுகாப்பதற்கே அல்லாமல், எமது பயணத்தை சிறப்பாக்கிக் கொள்வதற்கல்ல. எமது தேவை ஸ்ரீ.ல.சு.கட்சியைச் சரியான பாதைக்கு கொண்டு வருவதும், கட்சி ஆதரவாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதுமேயாகும். எனினும் எப்போதும் இடம்பெற்றது கட்சியில் பிரச்சினை ஏற்பட்டதன் பின்னர் தங்கள் பயணத்தை மாற்றிக்கொண்டு சென்றதேயாகும்.
ஜனாதிபதி ரணிலின் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடு தொடர்பில் திருப்திகொள்ள முடியுமா?
இப்போது நாம் அனைவரும் வரிசை யுகத்திலிருந்தும், மின் துண்டிப்பிலிருந்தும் மீண்டிருக்கின்றோம். அதுதொடர்பில் நாட்டு குடிமகன் என்ற வகையில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்ட காலம், அது எந்தளவு காலம் என்பதை அன்று நாம் அறியாதிருந்தோம். எனினும் தற்போதைய அரசாங்கத்தினுள் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரும் உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தப் பொறுப்பை ஏற்று நாட்டை ஒருநிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள். அது நூறுவீதம் நல்லநிலையா இல்லையா என்பது வேறுவிடயம். எனினும் இருந்த பிரச்சினைகளிலிருந்து இன்று நாம் விடுபட்டிருக்கின்றோம்.
வெளிநாட்டுக் கடனைச் செலுத்தாதனாலேயே அரசாங்கம் இந்த நிவாரணங்களை வழங்குவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றவே?
எதிர்க்கட்சியைப் போன்று யார் நாட்டைப் பொறுப்பேற்றாலும் இதைத்தான் செய்யவேண்டும். அநுரகுமார திசாநாயக்க நாட்டைப் பொறுப்பேற்றாலும் இதைத்தான் செய்யவேண்டும். முதலில் செய்யவேண்டியது மக்கள் மூச்சுவிட இடமளிக்க வேண்டும். அதற்கு ரணில் விக்கிரமசிங்கவைப் போன்று எவரையும் குற்றம் சுமத்துவதில் பலனில்லை. இன்று ஆளும், எதிர்க்கட்சி பேதங்களின்றி இந்த வசதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது மிகச் சிரமமாகும். பொருட்களின் விலைகள் அதிகம் என்பதை நாம் அறிவோம். எனினும் எமது முதலாவது போராட்டமாக இருந்தது வரிசைகளை இல்லாமலாக்குவதாகும். இன்று அவர் அரசியல் கட்சிகளுடன் ஒரு வேலைத்திட்டத்துடன் பேசி அதனை முன்வைத்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில் நாமும் சிந்திக்கலாம்.
சுபாஷினி ஜயரத்ன தமிழில்- எம். எஸ். முஸப்பிர்