எதிர்க்கட்சியினர் சர்வதேச நாணய நிதியத்துக்கு ஒரு கருத்தையும், நாட்டு மக்களுக்கு மற்றொரு கருத்தையும் கூறி இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாட்டின் பிந்திய அரசியல் நிைலவரங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான நிதிஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து எம்முடன் அமைச்சர் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
கே: சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணங்கிய உடன்படிக்கைக்கு தமது கட்சிக்கு உடன்பாடில்லை என்று தேசிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: அவர்களின் பொறுப்பற்ற அறிக்கைகள் அவர்களின் நிலைமையைப் பிரதிபலிக்கின்றன. ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் சில உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டாக வேண்டும். தேசிய மக்கள் சக்தி என்பது இந்திய எதிர்ப்புகளைக் கொண்ட ஒரு கட்சி. இப்போது இந்தியாவுடன் இணைந்துள்ளது. அவர்கள் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக மக்களைக் குழப்பும் வகையில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். எனினும், மக்கள் இது விடயத்தில் தெளிவாக உள்ளனர்.
கே: தேசிய மக்கள் சக்தி மாத்திரமன்றி, ஐக்கிய மக்கள் சக்தியும் தமது அரசாங்கத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்றத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றனவே?
பதில்: சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்ற முடியுமா என்று தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட உடன்பாடு ஏற்பட்ட பிறகு அரசாங்கம் மாறினாலும், உடன்பாட்டில் உள்ள விடயங்கள் அப்படியேதான் இருக்கும். ஆனால் யாராவது அப்படி ஒரு மீளாய்வினை மேற்கொண்டால் நன்றாக இருக்கும். இதனைச் செய்ய முடியுமா, இல்லையா என்பதை வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்க முடியும்.
கே: தமது அரசாங்கத்தின் கீழ் கடன் மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்படும் என அக்கட்சியின் பொருளாதார சபையின் உறுப்பினரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இதை முயற்சிக்க முடியுமா?
பதில்: அது எப்படி முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாட்டு மக்களுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்த வேண்டும். மற்றைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து மறுசீரமைப்பதில் சில உடன்பாடுகள் ஏற்படுகின்றன. எதிர்க்கட்சிகளுடன் அரசு பேசி வருகிறது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்த போது அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.
கே: யார் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கப்பட்ட நிபந்தனைகளை ஒரு கட்சியின் விருப்பத்திற்கு அமைய மாற்றியமைக்க முடியுமா?
பதில்: அதாவது, இவர்கள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடம் பேசும்போது ஒரு விடயத்தைச் சொல்கின்றார்கள், மக்களிடம் வந்து வேறொரு விடயத்தைச் சொல்கின்றார்கள். நாட்டில் தமது அரசியல் கட்சியை நிலைநிறுத்துவதற்குத் தேவையான பின்னணியை தயார்படுத்துவதே அவர்களின் நோக்கமாகும். இது ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியின் செயல் அல்ல. நாட்டில் நெருக்கடி ஏற்படும் போது, அனைவரும் பொறுப்புடன் ஒன்றுபட வேண்டிய நேரம் இது. எனவேதான் ‘கட்சி பேதமின்றி நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்’ என ஜனாதிபதி தொடர்ந்தும் அழைப்பு விடுத்து வருகின்றார். ஆனால், அதை நாட்டின் அறிவுள்ள மக்கள் புரிந்து கொண்டதால், எதிர்காலத்தில் மக்களின் ஸ்திரத்தன்மையை அறிந்து கொள்ள முடியும். எங்களுடைய யோசனைகளை விட சிறந்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அவர்களுக்கு வாய்ப்பளித்தார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கதை பேசுகின்றனர்.
கே: இலங்கையின் பொருளாதாரப் பாதை மற்றும் பணவீக்கத்தைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளது. அரசாங்கம் பயணிக்கும் திசையை அவர்கள் பாராட்டுகிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறதா?
பதில்: சர்வதேச நாணய நிதியம் மட்டுமன்றி, உலக வங்கியும் வெளியிட்ட அறிக்கைகளைப் பார்த்தால் அரசாங்கத்தின் முயற்சிகளின் வெற்றி தெரியும். குறுகிய காலத்தில் நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்திருப்பது வியப்பளிக்கிறது என அவற்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்களின் உதவி கிடைத்த அதேநேரம், நாமும் திட்டமிடல்களை சரியாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்தியதால் இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது. உலகின் மற்றைய வீழ்ச்சியடைந்த 20 நாடுகளில் குறுகிய காலத்தில் மீட்சிபெற்ற நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கிணற்றில் உள்ள தேரைகள் போன்ற இவர்கள், அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக வேலைசெய்யும் சிலர் மக்களைக் குழப்பி வருகின்றனர்.
கே: எதிர்வரும் 12 மாதங்களில் இலங்கைப் பொருளாதாரத்தில் சாதகமான வளர்ச்சி காணப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் எனக் கூறமுடியுமா?
பதில்: அரசாங்கம் என்ற வகையில் பொதுஜன பெரமுனவின் அணி ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுகின்றது. கோட்டாபயவின் காலத்திலும் இதே குழுவே இருந்தது. சிரேஷ்ட உறுப்பினர்களைக் கூட்டி அதிகாரங்களை வழங்கியதன் விளைவினை நாம் அனுபவித்தோம். ஆனால் தற்போதைய ஜனாதிபதி அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் காரணமாகவே நாடு இந்த நிலையை அடைந்துள்ளது.
கே: சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கவுள்ள அடுத்த தவணை கடன் மூலம் மக்கள் சற்று நிம்மதியடைய முடியுமா?
பதில்: 2022 மே மாதத்தில் நாட்டில் இருந்த நிலைமையையும் இன்று நாட்டின் நிலைமையையும் பார்க்கும்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தெளிவாகத் தெரிகிறது. இது எல்லா இடங்களிலும் பரிணமிக்கின்றது. டொலர் இருப்பு அதிகரித்திருப்பதுடன், அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகின்றன. அரசாங்கத் துறையில் சம்பள உயர்வு சாத்தியமாகியுள்ளது. எதிர்காலத்தில் வரிகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கே: 18 வயது நிரம்பிய அனைவரும் வரிக்கான கோப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டபோதும், இவ்விடயம் தற்பொழுது அதிகம் பேசப்படுவதில்லை. அது ஏன்?
பதில்: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வரிக்கோப்பைத் தொடங்குவது என்பது அனைவரும் வரி செலுத்தப் போகின்றனர் என்பதைக் குறிக்காது.
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இதுதான் முறை. இருப்பினும், வருமானம் இல்லை என்றால் வரி செலுத்தத் தேவையில்லை. வரி வசூலிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நிவாரணம் வழங்கக் கூடியதாகவுள்ளது. இது மேலும் முறையாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
கே: அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் யார்? தற்போதைய ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்குமா?
பதில்: பொதுஜன பெரமுன கட்சி இது பற்றி இன்னமும் தீர்மானம் ஒன்றுக்கு வரவில்லை. இது குறித்து விவாதித்து எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும்.
கே: பொதுஜன பெரமுனவினர் தற்போதைய ஜனாதிபதியை ஆதரிக்கின்றனரா?
பதில்: அன்று எமது கட்சியின் தலைவரும் பிரதமரும் வெளியேறிய போது, சவால்களை ஏற்று பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப உதவினோம். நாட்டில் அமைதியையும் சட்டத்தையும் நிலைநாட்ட ஜனாதிபதிக்கு உதவினோம். உதவி செய்துள்ள நாம், தலைவனின் காலை ஏன் இழுக்க வேண்டும்?
கே: முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படுமா அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா?
பதில்: பாராளுமன்றத் தேர்தலை விட ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டு மக்களைப் பற்றி சிந்தித்தால் ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்ல வேண்டும். அரசியல் ரீதியாக நினைத்தால் பாராளுமன்ற தேர்தலுக்குச் செல்ல வேண்டும். ஏதாவது ஒரு காரணத்திற்காகப் பாராளுமன்றத் தேர்தலுக்குச் சென்றால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. பின்னர் ஒரு நிலையற்ற அரசாங்கம் உருவாகும். ஒரு நிலையான அரசாங்கத்தை இழந்தால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்காமல் போகலாம். பின்னர் 2022 போல வீழ்ச்சியை நாடு சந்திக்கலாம். நாங்கள் எந்த அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டை நடத்துவதற்கு உதவியதன் பலனை நாம் அனுபவித்து வருகிறோம்.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால் அரசாங்கத்தை நிறுவி நாட்டை ஸ்திரப்படுத்த முடியும். வேறு அரசியல் கட்சி வெற்றி பெற்றால் அவர்களுக்கும் அதே வாய்ப்பு கிடைக்க வேண்டும். எனவே, ஜனாதிபதித் தேர்தல் இந்த நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என நான் நம்புகிறேன். நாட்டின் நலனுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதை விட ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வதே சிறந்தது என நான் கருதுகிறேன்.