எதுவும் நிரந்தரம் இல்லை என்பது போல இந்திய அரசியலிலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கோடை வெப்பம் அதிகரித்துள்ளதைப்போல இந்தியாவுக்கான மக்களவை தேர்தல் பரப்புரையும் சூடு பிடித்துள்ளது. அதிகாரம் தங்கள் கைக்குத்தான் வர வேண்டும் என்ற ஆசை எல்லாக் கட்சிகளுக்குமே இருக்கிறது. ஆனால், மக்கள் யாரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது ஜூன் 4ஆம் திகதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாளில்தான் தெரியும்.
ஆளும் கட்சியான பா.ஜ.க எதிர்க்கட்சிகள் அனைவரையும் ஊழல்கட்சிகள் என்று விமர்சனம் செய்கிறது. ஊழல் குற்றவாளிகள் என்று கைது நடவடிக்கையும் எடுத்து வருகிறது. குறிப்பாக இரண்டு மாநில முதலமைச்சர்களை கைது செய்து சிறையில் அடைத்து இந்திய அரசியலில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் இருவரும் அமுலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
தேர்தல் நேரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இரண்டு மாநில முதலமைச்சர்களின் கைதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள இந்தியா கூட்டணியினர். டெல்லி ராம்லீலா மைதானத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தி பா.ஜ.க. வை கண்டித்ததோடு தேர்தல் பயத்தில் சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடிக்கும் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
இந்தக் கண்டனக் கூட்டத்தில் தலைமையேற்று நடத்திய ராகுல் காந்தி பேசும் போது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையில் இரண்டு மாநில முதலமைச்சர்களை கைது செய்து சிறையில் தள்ளிவிட்டு 4 கோடிஸ்வர தொழிலதிபர்களுடன் இணைந்து மேட்ச் -பிக்சிங் சதி மூலம் மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று முயற்சி செய்வது வருகிறது. மக்களவை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 400 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என அவர்கள் முழங்குகிறார்கள்.
ஆனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், மேட்ச் – பிச்சிங் எதிர்க்கட்சி தலைவர்கள் மீதான அழுத்தம், ஊடகங்களை விலைக்கு வாங்குதல் என இவையெல்லாம் இல்லாமல் இருந்தால் பா.ஜ.க கூட்டணியால் 180 இடங்களைக் கூட தாண்ட முடியாது. என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியா கூட்டணி நடத்திய கண்டனப் பேரணியில் 5 கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான களத்தை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் மீது அமுலாக்கத்துறை, சிபிஐ, மற்றும் வருமான வரித்துறையின் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தடுத்த நிறுத்த வேண்டும். ஜார்கண்ட முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும், டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் ஆகியோர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்,
தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் நிதியை வலுக்கட்டாயமாக முடக்கும் நட வடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க செய்த முறைகேட்டை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என 5 கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல மேற்கு வங்க முதலமைச்சரும். திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் பா.ஜ.க 400 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்றது. முதலில் 200 தொகுதிகளைத் தாண்டிக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சவால் விடுத்திருக்கிறார். உலக நாடுகளின் பார்வையும் இந்திய அரசியல் மீது பதிவாகியிருக்கிறது. அமெரிக்காவும், ஜெர்மனியும் இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் எனக் கருத்து தெரிவித்திருக்கின்றன. டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலின் கைது தேர்தல் நேரத்தில் சரியானது அல்ல என்று ஐக்கிய நாட்டு சபை கருத்து தெரிவித்திருக்கிறது.
இது போன்ற கைதுகள், மிரட்டல்கள் அனைத்தும் இந்தியா கூட்டணியை வலிமையாக ஆக்கியதே தவிர, பலவீனப்படுத்தவில்லை. அரைக்க. அரைக்க சந்தனம் மணப்பதைப் போல. தாக்குதல் அதிகமாக அதிகமாக கூட்டணியும், கூட்டணித் தலைவர்களும் வலிமை அடைகிறார்கள். இதைத்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பார்க்கிறோம் பா.ஜ.க சில மாதங்களுக்கு முன்பு வரையில் வெற்றி பெற்று விடுவோம் என்று கூறியது ஆனால், நாளுக்கு நாள் தோல்வியை நோக்கி வேகமாக பயணித்து வருகிறது என்று, இந்தியா கூட்டணியில் முதன்மை அங்கத்தினராக இருக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடைதோறும் முழங்கி வருகிறார்.
இந்தியா முழுவதற்குமான கள ஆய்வும் பா.ஜ.க பின்னடைந்து வருவதாகவே கருத்து தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் பா.ஜ.க கடந்த பத்தாண்டுகளில் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன என்பது பற்றி பரப்புரை செய்யாமல் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுவதும், வருமானவரித் துறை மற்றும் அமுலாக்கத் துறையை வைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும், தங்களுக்கு ஆதரவு தராதவர்களையும் மிரட்டிப் பணிய வைத்து விடலாம் என்று ஜனநாயத்துக்கு விரோதமாக நடந்து கொள்வதையும் மக்கள் அவதானித்து வருகிறார்கள்.
மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பவேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி உட்பட பா.ஜ.க தலைவர்கள் பலரும் எதையாவது புதிது புதிதாக கிளப்பிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், இந்தத் தேர்தல் நேரத்தில் இது தேவையா? என்று மக்களே முணுமுணுக்கும் அளவுக்கு அவர்களின் ஒவ்வொரு செயற்பாடும் இருக்கிறது. குறிப்பாக கச்சதீவை இலங்கைக்கு கொடுத்ததன் மூலம் காங்கிரஸ் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாக நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். கடந்த பத்து வருடமாக பிரதமர் நித்திரையில் இருந்தாரா? தற்போது தேர்தல் வரும் போதுதான் கச்சதீவு ஞாபகத்திற்கு வருகிறதா? என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வினா எழுப்புகின்றனர். பிரதமர் கச்சத்தீவு பற்றி கருத்து தெரிவிப்பது தேர்தலுக்கான நாடகம் என்று படிக்காத பாமரனுக்கு தெரிகிறது.
மக்களிடம் செல்வாக்கை இழந்து வரும் பா.ஜ.க தோல்விப் பயத்தில் எதைச் செய்வது. எதைச் செய்யக்கூடாது என்பதே தெரியாமல் தடுமாறுகிறது என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்வது போல டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.கவுக்கு எதிராக பரப்புரை செய்தால் அவர் கருத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைத்து அவரது பரப்புரையை தடுக்கும் முயற்சியாகவே அவரைக் கைது செய்தனர்.
ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை ஏற்படுத்தியிருக்க வேண்டிய வரவேற்பை விட அவரைக் கைது செய்ததன் மூலமாக கிடைத்த அரசியல் விழிப்புணர்வு என்பது மிக அதிகம். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு பா.ஜ.க.வின் பல தவறான முன்னெடுப்புகளே வழி வகுத்துக் கொடுக்கிறது என்றே சொல்லலாம்.