கலகொடஅத்தே ஞானசார தேரர் இந்த நாட்களில் அதிகம் பேசப்படும் நபர்களில் ஒருவராக உள்ளார். அதற்குக் காரணம், அவருக்கு இரண்டாவது முறையாகவும் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமையாகும். தற்போது அவர் அந்தத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
“ஒரு தேரர் என்ற முறையில், தேசிய மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்பதோடு, இதுபோன்ற கருத்துக்களையும் வெளியிடக்கூடாது. அவ்வாறான கருத்துக்களால் நாட்டில் தேசிய, மதப் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது” என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக 04 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்த உயர்நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய படபெந்திகே தெரிவித்தார். இந்த தீர்ப்பு கடந்த மார்ச் 28ஆம் திகதி வழங்கப்பட்டது. இந்தச் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக ஞானசார தேரர் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு இவ்வாறு கடூ ழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது இது இரண்டாவது தடவையாகும். முதலாவதாக அவருக்கு 2018ஆம் ஆண்டு அவருக்கு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஒரு வருடம் சிறைச்சாலையில் கடூழியச் சிறைத்தண்டனையைக் அனுபவித்த பின்னர் 2019 மே மாதம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் மூலம் விடுவிக்கப்பட்டிருந்தார்.
மீண்டும் ஐந்து வருடங்களின் பின்னர் ஞானசார தேரர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் செல்ல நேர்ந்தது 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அல்லது அதற்கு அண்மித்த தினம் ஒன்றில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது குரகல விகாரை தொடர்பில் வெளியிட்ட கருத்தின் மூலம் இனங்களுக்கு இடையிலான மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்தேயாகும். இந்த வழக்கு விசாரணைகள் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணை செய்யப்பட்டதன் பின்னர் பிரதிவாதியான தேரருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகியுள்ளதாகக் குறிப்பிட்டு உயர் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றப்பத்திரிகைகளிலும் பிரதிவாதியான தேரர் குற்றவாளியாகியுள்ளதாக தனது தீர்ப்பில் அறிவித்துள்ளார்.
பிரதிவாதியான தேரர் குற்றவாளியாகத் தீப்பளிக்கப்பட்டதன் பின்னர் முறைப்பாட்டுத் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான அரச தரப்புச் சட்டத்தரணி லக்மாலி திஸாநாயக்க, “இனவாத மோதல்களின் காரணமாக முப்பது வருடங்களுக்கும் மேலாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு மற்றொரு மத மோதல் ஒருபோதும் தேவையில்லை” என்று கூறினார்.
“ஒரு மதத் தலைவர் மற்றும் ஒரு அமைப்பின் தலைவரான பிரதிவாதியின் சொற் பிரயோகங்களின் காரணமாக, இலங்கையில் மத மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அவ்வாறான நிலையினைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும். இதன் காரணமாகவே, எதிராளியான தேரருக்கு கடுமையான தண்டனை வழங்குமாறு கெளரவ நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன்” என அரச தரப்பு சட்டத்தரணியும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதன்போது பிரதிவாதி தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவித்ததாகவும், பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு ‘ஜனாதிபதி மன்னிப்பு’ வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.
“எனது கட்சிக்கார தேரர் தெரிவித்த கருத்தின் மூலம் எந்த கடுமையான தவறுகளையும் செய்திருப்பதாகத் தெரியவில்லை. இது தொடர்பில் இதற்கு முன்னர் அவர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார். எவ்வாறாயினும், அவருக்கு இலகுவான சிறைத்தண்டனையை விதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனவும் சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது, பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிக்கு பதிலளித்த அரச தரப்பு வழக்கறிஞர், ‘கத்தியால் குத்துவதை விடவும், வார்த்தைகளால் பேசும் விடயங்கள் மிகவும் தீவிரமானவை எனத் தெரிவித்தார்.
எவராவது ஒருவர் கத்தியால் குத்திவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டால் மாத்திரம் குற்றத்தின் தீவிரம் குறையுமா? அதேபோன்று, எதிராளி கூறிய வார்த்தைகளினால் எழுந்த விடயங்களுக்கு மன்னிப்பு கேட்பதால் மாத்திரம் குற்றத்தின் தீவிரம் குறையுமா?”
“குற்றம் சாட்டப்பட்ட தேரர் இதற்கு முன்னைய வழக்கு விசாரணை தினத்தின் போது குற்றவாளிக் கூண்டில் நின்றவாறு தனது கூற்றினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏதேனும் மன வேதனைகள் ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் தான் வருத்தம் தெரிவிப்பதாகக் கூறியிருந்தார். எது எவ்வாறிருந்தாலும், குற்றஞ்சாட்டப்பட்ட பிக்கு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பயன்படுத்திய வார்த்தைகள் வேண்டுமென்றே குரோத மனப்பான்மையுடன் ஏனைய மதம் தொடர்பாக வெளியிடப்பட்ட வெறுப்பூட்டும் வார்த்தைகளே தவிர,தவறுதலாக அல்லது பிழையாக கூறப்பட்டவை அல்ல என்பது தெளிவாகின்றது. தேரர்கள் தேசிய மத நல்லிணக்கத்துக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. இவ்வாறான கூற்றுக்களினால் நாட்டினுள் இன, மத பிளவுகள் கூட தோன்றலாம்” என இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் குற்றவாளியான தேரரை வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
பின்னர் கடந்த 03ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பிணை மனு ஒன்றினை தாக்கல் செய்த ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை தொடர்பில் போதியளவு விடயங்கள் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே, அந்த கோரிக்கையினை நிராகரித்தார்.
கொழும்பு உயர் நீதிமன்றில் இந்த பிணை தொடர்பான மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பெருமளவான பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த தேரர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரட்ன, தனது கட்சிக்காரருக்கு எதிராக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட வழக்குத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தீர்ப்பினை வழங்கும் வரையில் அவரைப் பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார். “எனது கட்சிக்காரருக்கு விதிக்கப்பட்டுள்ள நான்கு வருட சிறைத் தண்டனை சிறைச்சாலை விதிகளுக்கு அமைய இரண்டு வருடங்கள் நான்கு மாதங்களில் நிறைவடையும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவருக்குப் பிணை வழங்குவதற்கான வாய்ப்பு நீதிமன்றத்திற்கு உள்ளது. மேன்முறையீட்டினை விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்கு பொதுவாக மூன்று அல்லது நான்கு வருடங்கள் எடுப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்தளவு காலம் குற்றவாளியைச் சிறையில் வைத்திருப்பது நியாயமானதல்ல. அரசியலமைப்பு மற்றும் பிணைச் சட்டங்களுக்கு அமைய தனி மனித சுதந்திரம் உன்னதமாக கருதப்பட வேண்டும். எனவே, நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள விருப்புரிமையைப் பயன்படுத்தி, எனது கட்சிக்காரருக்கு பிணை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதேபோன்று, தற்போது நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் உடல்நிலை தொடர்பில் கவனிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்” என ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றில் விடயங்களை முன்வைத்தார்.
இதன்போது நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்த அரச தரப்பு சட்டத்தரணி லக்மாலி திஸாநாயக்க, ‘தேரருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற முடியாதளவுக்கு கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே அவருக்கு பிணை கோருவதற்கு அவரது நோய் நிலையை ஒரு காரணமாக ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை” எனக் குறிப்பிட்டார்.
இதன்போது நீதிமன்றத்தில் உரையாற்றிய உயர் நீதிமன்ற நீதிபதி, “குற்றவாளிகளுக்கு பிணை வழங்குவதற்கு பிணைச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்திற்கு வாய்ப்பு இருப்பதாக் குறிப்பிடப்பட்டாலும், பிணைச் சட்டத்தின் விதிகள் சந்தேக நபர்களுக்கோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கோ பொருந்துமே தவிர, குற்றவாளிகளுக்கு அல்ல. நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள ஒருவருக்கு பிணைச் சட்டத்தின் விதிகள் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் கூறப்பட்டுள்ளது.
பிணை வழங்குவதற்கு சிறப்பான விடயங்கள் தேவை. இந்த மனுவின், பிணைக் கோரிக்கையில் சிறப்பு விடயங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை” எனக் குறிப்பிட்ட நீதிபதி பிணை மனுவை நிராகரித்தார்.
இனி ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் சென்றே பிணைக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். அதற்கமைவாக, மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்றைச் சமர்ப்பிப்பதற்கு அவரது சட்டத்தரணிகள் தற்போது தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞானசார தேரருக்கு முதல் தடவையாக கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது கடந்த 2018ஆம் ஆண்டாகும். கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி ஹோமாகமை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு விசாரணையின் போது வழக்கு விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை அந்த நீதிமன்றத்தினுள் கோசமிட்டு குழப்பம் விளைவித்து நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குறிப்பிடப்பட்டு அப்போதைய ஹோமாகம நீதவான் ரங்க திசாநாயக்காவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டின் பிரகாரமாகும். இதன் போது கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஆறு வருட கடுழியச் சிறைத் தண்டனை வழங்கி கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.
இவ்வாறு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர், கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் மூலம் விடுதலை செய்யப்பட்டார்.
எவ்வாறாயினும், உச்ச நீதிமன்ற வரலாற்றில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட முதல் பிக்குவாக கலகொட அத்தே ஞானசார தேரர் வரலாற்றில் இடம்பிடித்தார். ஜனாதிபதி மன்னிப்பின் மூலம் விடுதலை பெற்று வெளியே வந்த போதிலும், ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு தடவை கடூழிய சிறைத்தண்டனை விதித்து அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நிமந்தி ரணசிங்க தமிழில் - எம். எஸ். முஸப்பிர்