அரசுக்கு மக்கள் வரி செலுத்துவதென்பது உலகநாடுகளில் புதுமையான நடைமுறை அல்ல. அரசியல் நாகரிகமும் மானுடவாதமும் வளர்ச்சி பெற்றுள்ள அனைத்து ஜனநாயக நாடுகளிலும் வரி செலுத்தும் நடைமுறையானது அக்காலம் முதல் இக்காலம் வரை தொடர்ந்தபடியே உள்ளது.
உலக வரலாற்றில் வரிநடைமுறையானது பண்டைய மன்னராட்சிக் காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருகின்றது. பணப்புழக்கம் அறிமுகமாகாத பண்டைய காலத்திலும் கூடநாட்டு மக்கள் தங்கள் விளைச்சல் நிலங்களில் கிடைக்கின்ற உணவு உற்பத்திகளில் குறிப்பிட்டதொரு தொகையை அரசனுக்கு வரியாகச் செலுத்தியுள்ளனரென்று வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன.
பண்டைக்கால நடைமுறையானது இன்றுவரை உலகநாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது. வரிநடைமுறை இன்றேல் நாடு சீராக இயங்க முடியாமல் போய்விடுமென்பது உண்மை. நாடு சீராக இயங்க வேண்டுமானால் அந்நாட்டின் அரசாங்கம் வினைத்திறனுடன் செயற்படுவதற்கு நிதி அவசியம்.
எனவே மக்களுக்காக அரசாங்கம் செயற்பட வேண்டுமானால் அந்நாட்டு மக்கள் அதற்கான நிதிப்பங்களிப்பை அரசுக்கு வழங்க வேண்டியது அவசியமாகின்றது. அதுவே வரி ஆகும்.
வரிகள் சம்பந்தமாக மக்களில் ஒரு பிரிவினரிடம் தவறான கருத்து நிலவுகின்றது. ‘வரி என்பது மக்களைச் சுரண்டுகின்றதொரு ஏற்பாடு’ என்று அவர்கள் தவறாக எண்ணுகின்றனர். அக்கருத்துக்கு வலுசேர்ப்பதைப் போன்று எதிரணி அரசியல்வாதிகளும் பிரசாரம் செய்கின்றனர். இதன் காரணமாக வரி என்பது மக்களைச் சுரண்டும் நடவடிக்கையென்று பலர் தவறாகக் கருதுகின்றனர்.
எந்தவொரு நாட்டிலும் அரச இயந்திரங்கள் மக்கள் நலனுக்காக இரவுபகலாக இயங்க வேண்டியது அவசியம். மக்களுக்கான அத்தியாவசிய சேவைகள்> நலிவடைந்த மக்களுக்கான வாழ்வதார உதவிகள் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை அரசாங்கத்தினால் மாத்திரமே நிறைவேற்ற முடியும். இதற்கான நிதியை மக்களின் வரிவருமானம் ஊடாகவே அரசாங்கம் திரட்டிக் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த வரிநடைமுறையானது ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. கடந்த அரசாங்க காலத்தில் நாட்டில் பொருளாதார நெருக்கடி உருவானதற்கு வரிவீதம் குறைக்கப்பட்டதும் பிரதான காரணங்களில் ஒன்றாகும்.
இலங்கையில் தற்போது வரி செலுத்தும் முறைமையில் பெரிதும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதன் காரணமாகவே மக்களுக்கான நிவாரணத் திட்டங்களை தற்போது நிதிநெருக்கடியின்றி செயற்படுத்த முடிவதாக நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி வருவதற்கும் வரிமுறைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தமே காரணமாகும்.
நாட்டின் பொருளாதாரம் சீராக இருந்தாலேயே மீண்டுமொரு நெருக்கடி உருவாகாமல் தவிர்க்க முடியுமென்பதை மறந்துவிடலாகாது.