இயக்குநர் திரவ் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘வெப்பம் குளிர் மழை’. இஸ்மத் பானு, எம்.எஸ்.பாஸ்கர், ரமா, மாஸ்டர் கார்த்திகேயன், விஜயலட்சுமி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை பாஸ்கல் வேதமுத்து இயக்கி இருக்கிறார். ஷங்கர் ரங்கராஜன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
படம் பற்றி திரவ் கூறியதாவது: இதன் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்துவும் நானும் ‘குற்றம் கடிதல்’ படத்தில் பணியாற்றினோம். அவர் சொன்ன ஸ்கிரிப்ட் பிடித்திருந்தது. நான் கிஷோர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறேன். இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதனால் இந்தப் படத்தை நானே தயாரித்தேன். சில ஹீரோக்கள் இதில் நடிக்க முன் வந்தனர். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் தள்ளிப் போனது. அதனால் நானே நாயகனாக நடித்தேன். படப்பிடிப்புக்கு முன்பாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவிடுதிகோட்டை கிராமத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பே சென்றோம். அங்குள்ள மக்களுடன் பழகி நடித்தோம். அந்தக் கிராமத்தினரும் நடித்துள்ளனர். இது குழந்தையின்மையை பற்றிப் பேசும்படம். குழந்தை இல்லை என்பதை இப்போதும் சமூகம் எப்படி பார்க்கிறது என்று கதை சொல்லும். இவ்வாறு திரவ் கூறினார்‘