“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்” என்கிறார் திருவள்ளுவர் (969ஆம் குறள்)
கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும்.
அதேபோல், மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம்.
ஆனால், இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே? குழப்பமாக இருக்கிறது அல்லவா? அந்தக் குறளைக் கவனமாகப் பாருங்கள். அதில் சொல்லப்பட்டு இருப்பது கவரி மான் அல்ல, கவரி மா! ஆம். கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது.
அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று கூறுகின்றனர். இமயமலைப் பகுதியில் வாழும் இந்த விலங்கை தான் வள்ளுவர் சொன்னது. முடி சடை போல தொங்கக் கூடிய விலங்குதான் கவரிமா. இந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம். ‘கவரி’ என்பதில் இருந்துதான் சவரி முடி என்ற இன்றைய சொல் உருவானது. மா என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல். அப்படியென்றால், இந்தக் குறளுக்குப் பொருள் என்ன? பனிப் பகுதியில் வாழும் கவரிமாவுக்கு, அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும்.
அதேபோல், சில மனிதர்கள், அவர்கள் பெருமைக்கு இழுக்கு நேர்ந்து விட்டால், அவர்கள் வாழ்வது அரியதாகி விடும். எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை.
ஆனால் ‘கவரிமா’ வைக் கவரிமான் எனப் புரிந்து கொள்வது தான் தவறு.