பாரம்பரிய விளையாட்டுக்கள் சிறுவர்களின் உடல் உள உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், இன்றைய நவீன உலகில் கணினி, கையடக்க தொலைபேசி திரைகளால் இவ்விளையாட்டுக்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன.
அதேவேளை சமூக வலைதளங்கள், திரைபடங்கள், தொலைக்காட்சிகள், குறிப்பாக தொலைபேசிகள் நமது வருங்கால சந்ததியினரை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. முன்னர் பாடசாலைகளில் விளையாட்டிற்கு என்று சில மணி நேரம் ஒதுக்கி, பழமையான விளையாட்டுகளை கற்று கொடுப்பார்கள். நவீன காலத்தில் பாரம்பரிய விளையாட்டுக்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன.
முன்பு கிராமத்தில் தெருக்களில் சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். தற்போது கைத்தொலைப்பேசிகளுக்கு அதிக நேரத்தை விரையமாக்கும் மாணவர்கள் விளையாட்டை மறந்து போகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு விளையாட்டை பற்றி சிந்திப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அவர்களின் திறமைகள் அனைத்தும் தொலைப்பேசிக்குள் முடங்கி விடுகின்றன.
இன்றைய தலைமுறையினரில் பாரம்பரிய விளையாட்டுக்கள் என்றாலே என்ன என்று கூட தெரியாத சிலர் இருக்கின்றனர். விளையாட்டுக்கள் வீட்டில் விளையாடுவது, வீட்டிற்கு வெளியே விளையாடுவது என 2 பிரிவாக உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான ஆடுபுலிஆட்டம், ஜல்லிக்கட்டு, உறியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம், பச்சை குதிரை, வண்டிப்பந்தயம், கபடி, திருடன் பொலீஸ், பல்லாங்குழி, தாயம், சில்லுக்கோடு, பாண்டி, கண்ணா மூச்சி, பூப்பறிக்க வருகிறோம், நொண்டி, ஊதித் தள்ளு, கயிறிழுத்தல், கிட்டிப்புல், அச்சாங்கல் போன்ற விளையாட்டுகளும் சிறுவர், சிறுமியர்கள், இளைஞர்களால் விளையாடப்பட்டன.
இதுபோன்ற சுவாரஸ்யமான விளையாட்டுகளை இன்று கிராமங்களில் பார்க்க முடிவதில்லை. சிறுவர்களின் உலகத்தை தற்போது கார்டூன் தொலைபேசிகளும் வீடியோ விளையாட்டுக்களும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கின்றன.
அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டுக்களை பற்றி வருங்கால தலைமுறைகள் தெரிந்து திட்டங்கள் வகுக்க வேண்டியது எமது தார்மீக கடமையாகும்.