டிஜிட்டல் கொடுப்பனவு செயற்பாடுகளில் உலகளாவிய ரீதியில் முன்னணியில் திகழும் Visaவானது (NYSE: V), இலங்கையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளில் ஆரோக்கியமான வளர்ச்சியைக் குறிக்கும் வகையில், கடந்த ஆண்டில் Visa டெபிட் அட்டை ஊடான செலவீனங்களில் 35% க்கும் அதிகமான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதற்கிணங்க நேரடியாக மேற்கொள்ளப்படும் செலவுகளில் 30%+ அதிகரிப்பும் மற்றும் இணையத்தள வர்த்தகம் ஊடாக மேற்கொள்ளப்படும் செலவுகளில் 40% அதிகரிப்பும் ஏற்பட்டதன் மூலம் மேற்படி 35% அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையில், பண்டிகைக் காலத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் விற்பனை நிலையங்களில் சில்லறைப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான, எளிமையான மற்றும் வசதியான பரிவர்த்தனையை மனதிற்கொண்டு அதிகளவில் டெபிட் அட்டை மூலம் பணம் செலுத்துகிறார்கள்,
Visaவின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான வதிவிட முகாமையாளர் அவந்தி கொலம்பகே இது தொடர்பாக தெரிவிக்கையில், “அண்மைக்காலமாக இலங்கையில் நுகர்வோர் டெபிட் அட்டை பாவனையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
மேலும் இணையதளம் ஊடான வர்த்தக வளர்ச்சியும் எமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது அத்துடன் இந்த வேகமானது சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் போதும் தொடரும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.