காஸாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் முதன்முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. காஸா மீது இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பித்து 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில், ரமழான் நோன்புக்கு மதிப்பளிக்கும் வகையில் இத்தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட 15 நாடுகள் அங்கம் வகிக்கும் இக்கவுன்ஸிலின் 10 நாடுகளது அனுசரணையில் கொண்டு வரப்பட்ட இத்தீர்மானத்திற்கு 14 நாடுகள் ஆதரவாக வாக்களித்து இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அமெரிக்கா கலந்து கொள்ளாது தவிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
காஸாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தி கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு வரப்பட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருந்த சந்தர்ப்பங்களில், வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றை செல்லுபடியாக்கிய அமெரிக்கா, இம்முறை முதற்தடவையாக வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது தவிர்ந்து கொண்டது.
உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தும் இப்பிரேரணை தொடர்பில் அமெரிக்காவிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள அதேநேரம், அமெரிக்காவின் இந்நிலைப்பாட்டுக்கு இஸ்ரேல் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்காவுக்கு உயர்மட்டப் பிரதிநிதிகளை அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்த இஸ்ரேல், அவர்களை அனுப்பி வைப்பதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் உடனடியாக இடைநிறுத்தியது.
காஸா விவகாரத்தில் அமெரிக்காவிடம் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இஸ்ரேல் எடுத்துள்ள நிலைப்பாடும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்துவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில் காஸா மீதான யுத்தம் ஆரம்பமானது முதல் யுத்தத்தை நிறுத்த வலியுறுத்தும் வகையிலும் காஸாவுக்குள் மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்ல இடமளிக்கும் வகையிலும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் உலகின் பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பங்களில், அதற்கு எதிராக வாக்களித்த அமெரிக்கா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்படவிருந்த காஸா யுத்தநிறுத்தத் தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி செல்லுபடியற்றதாக்கியுமுள்ளது.
அதே அமெரிக்கா காஸாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தி கடந்த 22 ஆம் திகதி பாதுகாப்பு கவுன்சிலுக்கு தீர்மானமொன்றைக் கொண்டு வந்தது. அத்தீர்மானம் ரபா மீது இஸ்ரேல் யுத்தத்தை முன்னெடுப்பதற்கு உதவும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டு சீனாவும் ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அத்தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக்கின.
இந்நிலையில் அல்ஜீரியா, கயானா, ஈக்வடார், ஜப்பான், மால்டா, மொசாம்பிக், சியரா லியோன், ஸ்லோவேனியா, தென்கொரியா, சுவிட்சர்லாந்து ஆகிய 10 நாடுகளின் அனுசரணையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை கடந்த 25 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ரமழானுக்கு மதிப்பளிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம், இஸ்ரேலும் ஹமாஸும் காஸா பகுதியில் உனடியாக யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
பலஸ்தீனம் உட்பட உலகின் அனைத்து நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியம், அரபு லீக், உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்றுள்ளன.
ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் அடங்கலாக மோல்டா உள்ளிட்ட நாடுகளும் இத்தீர்மானம் முழுயைாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை இஸ்ரேல் மதித்து செயற்படத் தவறினால் இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை சர்வதேச சமூகம் துண்டிக்க வேண்டும் என்றுள்ளார்.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதான இராஜதந்திர அழுத்தங்கள் மேலும் அதிகரித்துள்ளன. ஆனால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் காஸா மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாக இல்லை. கடந்த திங்கள் முதல் புதன்கிழமை வரையும் காஸாவில் 160 பேர் கொல்லப்பட்டும் 195 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்று ஐ.நா. மனிதாபிமான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. அப்படியென்றால் காஸா யுத்தநிறுத்தம் தொடர்பில் பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் செல்லாக்காசாகி விடுமா? என்பதே இங்குள்ள வினா ஆகும்.
இதேவேளை மனிதாபிமான உதவிகளை காஸாவுக்குள் கொண்டுசெல்வதற்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுவதால் அங்கு உணவுப் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. அதனால் போஷாக்கின்மையும் நீரிழப்பும் பெரிதும் அதிகரித்துள்ளதோடு, 25 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் போஷாக்கின்மையால் உயிரிழந்துமுள்ளனர். வடக்கு காஸாவில் 2 வயதுக்கு உட்பட்ட 31 வீதமான சிறுவர்கள் கடுமையான போஷாக்கின்மைக்கு உள்ளாகியுள்ளனர் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.
காஸா மீதான இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அமெரிக்கா ஆரம்பம் முதல் இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறது. ஆனபோதிலும் பாதுகாப்பு உத்தரவாதமில்லாத நிலை காணப்படுவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரக்குகள் மனிதாபிமான உதவிகளுடன் ரபா பகுதியில் எகிப்தில் காத்து நிற்கின்றன. காஸாவுக்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இடமளிக்குமாறு உலகின் பல நாடுகளும் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.
இருந்தும் கூட யுத்தநிறுத்தம் ஏற்படவில்லை. மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கு ஏற்ற பாதுகாப்பு சூழல் உருவாகவுமில்லை. மனிதாபிமான உதவிகளை கொண்டு சென்ற ஐ.நா ட்ரக்குகள் மீது மாத்திரமல்லாமல் மனிதாபிமான உதவிகளுக்காக காத்து நின்ற மக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேநேரம் காஸாவின் நெருக்கடிகள் குறித்து கவனம் செலுத்தியுள்ள அமெரிக்கா, கடல் வழியாக மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்லவென மத்திய தரைக்கடல் பகுதியில் நீர்தடுப்பணையை அமைக்கவும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏற்பாட்டில் சைப்பிரஸில் இருந்து கப்பல் மூலம் 200 தொன் உணவுப் பொருட்கள் கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சூழலில் கடந்த (23.3.2024) சனியன்று எகிப்தின் அல் அரிஷ் விமானம் நிலையம் ஊடாக ரபா எல்லை வரை சென்று நிலைமைகளை அவதானித்து திரும்பியுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம், ‘தரைவழியாக உணவுப்பொருட்களை அனுப்பி வைப்பதே காஸாவின் மனிதாபிமான நெருக்கடிக்கு சரியான தீர்வாக அமையும்’ என்றுள்ளார்.
இவை இவ்வாறிருக்க, காஸா மீதான யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள 15 இலட்சம் பேர் ரபாவில் தங்கியுள்ளனர். அது சனநெரிசல் மிக்க பகுதியாக உள்ளது. காஸாவின் இறுதி எல்லையே அது. அப்பகுதி மீதும் தரைவழி இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க இஸ்ரேல் முயற்சிக்கிறது. அதற்கு உலகளாவிய ரீதியில் கடும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏனெனில் ரபா மீது தரைவழி நடவடிக்கையை மேற்கொண்டால் மனித அழிவுகளும் சேதங்களும் மிக அதிகமாக இருக்கும். அதனைத் தவிர்ப்பதே இந்த எதிர்ப்புக்களுக்கான காரணமாகும்.
இருப்பினும் இந்நடவடிக்கையின் ஊடாகவே ஹமாஸை முழுமையாக அழித்து வெற்றியை அடைய முடியும் என்கிறது இஸ்ரேல். அதனால் ரமழான் நோன்புக்கு முன்னர் காஸாவில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா, கட்டார், எகிப்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடும் முயற்சிகளை முன்னெடுத்தன. இருப்பினும் நோன்பு ஆரம்பமாகி 15 நாட்கள் கடந்தும் கூட யுத்தநிறுத்தம் ஏற்படவில்லை.
இந்நிலையில் ரபா மீதான யுத்தத்திற்கான முயற்சிகளை இஸ்ரேல் மீண்டும் ஆரம்பித்துள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதோடு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமருடன் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு ரபா மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து தவறிழைக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.
உபஜனாதிபதி கமலா ஹரிஸ், ரபா மீதான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்தால் அது பெரிய தவறாக அமையும் என்றும், இஸ்ரேல் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
இச்சூழலில் கடந்த வாரம் 6 ஆவது தடவையாக மத்திய கிழக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்டு இஸ்ரேல் சென்றிருந்த சமயம் இஸ்ரேலிய பிரதமர், ரபா மீது தாக்குதல்களை தொடங்கப் போவதாகவும் அமெரிக்கா ஆதரவளிக்காவிட்டால் தனியாகவாவது ஆரம்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தும் பிரேரணைக்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பாவிப்பதை அமெரிக்கா தவிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
மர்லின் மரிக்கார்