மலையகத்தின் தோட்டத் தொழிலாளர்களின் பரிணாம வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் அது கல்வியில் தான் தங்கியுள்ளது.
இது மலையக தோட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வரும் அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் அடிக்கடி வீராவேசத்துடன் உச்சரிக்கும் வசனமாகும். இவர்களுக்கு அப்பால் இந்த வசனத்தை தோட்டத் தொழிலாளர்களின் சமூக மாற்றத்திற்காக கல்வியை ஊக்குவிக்க முன்வரும் அரச மற்றும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களும் அடிக்கடி இவ்வசனத்தைக் கூறும்.
அதேநேரத்தில் இந்த நாட்டில் பாடசாலைக் கல்வியை ஊக்குவிக்க திட்டங்களை வகுக்கும் அரசாங்கம் மற்றும் கல்வி அமைச்சு என்பன ஆரம்ப கல்வியை கற்கும் மாணவர்கள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என தொடர்ச்சியாக கடந்த காலங்களில் வலியுறுத்தியதோடு நாடளாவிய ரீதியில் ஆரம்பக் கல்விப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக நிதி உதவிகளும் வழங்கப்பட்டு வந்தமையை மறந்து விடக் கூடாது.
இருப்பினும் இவ்வாறு ஆரம்பக் கல்வி பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மற்றும் பாடசாலை அபிவிருத்தி நடவடிக்கைகளில் அக்கறை காட்டிய அரசாங்கம், கல்வி அமைச்சு, மாகாண மற்றும் மாவட்ட கல்வித் திணைக்களங்கள் என்பன தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தியில் அவ்வப்போது அக்கறை காட்டினாலும் மத்திய மாகாணத்தில் தோட்டப்பகுதிகளில் காணப்படும் ஆரம்ப பிரிவு பாடசாலைகளின் அபிவிருத்தியில் முழுமையாக அக்கறை காட்டப்படுகிறதா என்ற மறைமுக கேள்வி தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றது.
அந்த வகையில் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில், நுவரெலியா வலய கல்வி திணைக்களத்துக்கு உட்பட்ட கந்தப்பளை பிரதேசத்தில் இயங்கும் நு/கொங்கோடியா தோட்ட பாடசாலை வித்தியாலயமாக தரம் பெற்று கந்தப்பளை நகரில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொங்கோடியா மத்திய பிரிவில் இயங்கி வந்தது.
இதில் கொங்கோடியா தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் நூற்றுக்கு அதிகமானவர்கள் கடந்த காலங்களில் கல்வி பயின்று வந்தனர். இப்போது இந்த வித்தியாலயத்தில் கொங்கோடியா மத்திய பிரிவு மற்றும் கொங்கோடியா கீழ்ப் பிரிவு தோட்ட மக்களின் பிள்ளைகள் 60 பேர் மாத்திரமே கல்வி கற்று வருகின்றனர்.
இந்த வித்தியாலயத்தின் முறை யான கல்வி கற்றல் நடவடிக்கை 1922ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்டதாக பாடசாலை தகவல் பதிவேட்டில் காணப்படுகின்ற போதிலும் இவ் வித்தியாலயத்தின் கட்டடம் நூற்று ஐம்பது வருட காலம் பழமை வாய்ந்தது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில் கொங்கோடியா தோட்டத்தின் நிர்வாக பகுதியில் இயங்கி வருகின்ற இந்த தோட்ட வித்தியாலயத்தில் ஆரம்ப பாடசாலையாக கல்வி நடவடிக்ைககள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் காலப்போக்கில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகளை கொண்ட ஆரம்ப பிரிவு வித்தியாலயமாகவும் இது செயற்பட்டிருக்கிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத நடுப்பகுதி முதல் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்ததோடு கந்தப்பளையிலும் இடைவிடாது பெய்த கடும் மழையினால் பல இடங்களில் மண்சரிவுகள், வெள்ள அனர்த்தங்களும் ஏற்பட்டன.
இந்த இயற்கை அனர்த்தத்தினால் கந்தப்பளை கொங்கோடியா தோட்டத்தில் பாரிய மண் சரிவுகள் ஏற்பட்டு வீதிப் போக்குவரத்தும் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டன. மக்கள் பலரும் இடம்பெயர்வு வாழ்க்கைக்கு முகம் கொடுத்திருந்தனர்.
இந்தக் காலப்பகுதியில் கொங்கோடியா மத்திய பிரிவில் நு/கொங்கோடியா தமிழ் வித்தியாலயம் அமைந்துள்ள பகுதியிலும் மண் சரிவுகள் ஏற்பட்டன. இது தொடர்பாக தோட்ட மக்கள் கொங்கோடியா தோட்ட நிர்வாகம், நுவரெலியா வலயக் கல்விக் காரியாலயம், நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் என்பனவற்றுக்கு அறிவித்தனர்.
நுவரெலியா மாவட்ட தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினர் கொங்கோடியா தமிழ் வித்தியாலயத்திற்கு வருகை தந்து, நிலைமைகளை ஆராய்ந்து இந்த வித்தியாலயம் அமைந்துள்ள பகுதி மண்சரிவு எச்சரிக்கைக்கு உட்பட்ட பகுதி என எச்சரிக்கை கடிதம் வழங்கினர்.
அதேநேரத்தில் இவ்விடத்தில் அமைந்துள்ள இந்த பழைமையான கட்டடத்தில் கல்வி நடவடிக்கையை முன்னெடுப்பது உசிதமல்ல எனவும் எச்சரிக்கை விடுத்துள்ள அவர்கள் எச்சரிக்கையை மீறி பாடசாலை கட்டடத்தில் கல்வி நடவடிக்கையை தொடரும் பட்சத்தில் ஆபத்துக்கள் ஏற்பட்டால் பாடசாலை நிர்வாகமே பொறுப்பு கூற வேண்டும் எனவும் எச்சரித்தனர்.
இந்த அச்சம் காரணமாக அந்தக் கட்டடத்தில் கல்வி நடவடிக்கைக்கு முற்றுபுள்ளி வைக்க நேரிட்டது. மாணவர்களின் கல்வி நடவடிக்கையை எங்கே முன்னெடுப்பது என்ற கேள்வி பாடசாலை நிர்வாகத்திடமும் பெற்றோரிடமும் ஏற்பட்டது.
அதேநேரத்தில் கொங்கோடியா தோட்ட நிர்வாகத்துக்கு உரித்தான உத்தியோகத்தர் விடுதிகள் எவரும் வசிக்காமல் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தன. அதில் ஒரு கட்டடத்தைப் பெற்று கல்வி நடவடிக்கையை முன்னெடுக்க முடிவு செய்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் கொங்கோடியா தோட்டத்தில் வீதிப் போக்குவரத்து வசதியுடன் கூடிய இடத்தில் 1932ஆம் ஆண்டு கட்டப்பட்ட தோட்ட வைத்தியசாலை கட்டடம் ஒன்றும் மிக நீண்ட காலமாக இயங்காமல் வெறுமனே மூடப்பட்டிருந்தது. இந்த வைத்தியசாலைக் கட்டடத்தைப் பெற்று அதில் பாடசாலை கல்வி நடவடிக்கையை முன்னெடுக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
அதற்காக மாணவர்களின் பெற்றோர் தங்களது முயற்சியால் பணம் சேர்த்து வைத்தியசாலை கட்டடத்தின் புனர் நிர்மாண பணி மற்றும் வர்ணம் பூசுதல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அதேநேரத்தில் நுவரெலியா வலய கல்விப் பணிமனையும் இவ் வைத்தியசாலை கட்டடத்தை பாடசாலையாக்கி அங்கு அபிவிருத்திப் பணிகளை செய்யவென நிதியும் ஒதுக்கி தந்து ஒத்துழைப்பையும் தருவதாகவும் தெரிவித்தது.
ஆனால் இவ் வைத்தியசாலை கட்டடத்தை பாடசாலைக்காக நிரந்தரமாகக் கொடுக்க முடியாதென தெரிவித்துள்ள தோட்ட நிர்வாகம், இது தொடர்பில் தோட்ட முகாமைத்துவக் கம்பனிக்கு தெரியப்படுத்துமாறு அறிவித்துள்ளது. இந்நிலையில் பெற்றோர் முன்னெடுத்ததோட்ட வைத்தியசாலை கட்டட புனர் நிர்மாண பணியும் முடக்கப்பட்டுள்ளது.இம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு தோட்ட நிர்வாகம் கரம் நீட்டத் தவறிய நிலையில் கொங்கோடியா கீழ்ப் பிரிவு தோட்டத்தில் காமன் கூத்து நடத்தும் இடத்துக்கு அருகில் அமைந்துள்ள முதியோர் சங்க கட்டடம் ஒன்றில் தற்காலிகமாக பாடசாலை கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் கல்வி நடவடிக்கைக்கு ஏற்ற வசதி இல்லாத இந்த கட்டடத்தில் ஒரு அதிபர் ஆறு ஆசிரியர்களுடன் இட நெருக்கடிக்கு மத்தியில் 60 மாணவர்களின் கல்வி நடவடிக்கையை முன்னெடுக்கும் அவல நிலையை அங்கு சென்று அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
அதேநேரத்தில் தற்காலிக கல்வி நடவடிக்கை தொடரப்பட்டு வரும் தோட்ட முதியோர் சங்க கட்டடம் அமைந்துள்ள பகுதி வலப்பனை பிரதேச கல்வி வலையத்திற்கு உட்பட்டது எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த கட்டடம் பல இடங்களில் வெடிப்படைந்து காணப்படுகின்றது. அத்துடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கான மலசல கூட வசதிகளும் இல்லை,குடிக்க சுத்தமான தண்ணீர் போன்ற அடிப்படை சுகாதார வசதிகளும் இல்லை என்பதும் பாடசாலை ஆவணங்களை பாதுகாக்க, வசதிகளும் இல்லாத நிலையில் சொல்லொணா துயரங்களுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் புதிய பாடசாலைக் கட்டடம் ஒன்றை அமைக்க கொங்கோடியா தோட்டத்தில் பாதுகாப்பான இடம் ஒன்றை அமைத்துத் தருமாறு பெற்றோர், நுவரெலியா கல்வி திணைக்களத்துக்கும் தோட்ட நிர்வாகத்துக்கும் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கிய கடிதத்துக்கும் தோட்ட நிர்வாகம் இதுவரை உரிய பதில் வழங்கவில்லை.
அதேநேரத்தில் நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல் நிலையில் புதிய பாடசாலைக் கட்டடம் ஒன்றை அமைப்பதும் சாத்தியமற்றது ஆகையால் தோட்டத்தில் மூடிக்கிடக்கும் தோட்ட வைத்தியசாலை கட்டடத்தின் ஒரு பகுதியையேனும் பாடசாலைக்ெகனத் தந்துவிட்டு மீதிப் பகுதியில் வைத்தியசாலையை நடத்திச் செல்லலாம் என பெற்றோர், பழைய மாணவர்கள், தோட்ட தலைவர்கள் என பலரும் கோரிக்ைக விடுக்கின்றனர். அத்துடன் மாணவர்களின் இந்த அவல நிலை தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வேலு யோகராஜ் கொண்டு சென்றதோடு மட்டுமல்லாது தோட்ட நிர்வாக அதிகாரியுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொங்கோடியா தோட்டத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடரும் 60 மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு நிம்மதியாக கல்வி கற்க பாதுகாப்பான கட்டடம் ஒன்றை அமைத்துக் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும். இந்த நிலையில் காலம் தாழ்த்தாது முன்வரப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆறுமுகம் ரமேஸ்