இன்று உயிர்ப்புப் பெருவிழா. மாபெரும் வெற்றியின் விழா. நாம் எல்லோரும் இவ் விழாவை அகக் களிப்போடு கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். மூன்று நாட்களுக்கு முன்பு உயிரற்ற இயேசுவின் உடல் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறது. அதன் பின் மூன்று நாட்களுக்குப் பின்பு இயேசு உயிரோடு மீண்டு எழுந்து வருகிறார்.
உயிர்ப்பு என்பதை மீண்டு எழுதல் என்றும் நாம் பொருள் கொள்ளலாம். கல்லறையில் தனியாக அடக்கம் செய்யப்பட்ட இயேசு மீண்டு எழும்போது தனியாக அவர் எழவில்லை. மாறாக பல நூற்றாண்டுகளாக புதைக்கப்பட்டிருந்த மனித நேயம், இறைவனைப் பற்றிய தவறான புரிதல்கள், இறை சட்டங்கள் பற்றிய தவறான சிந்தனைகள் அனைத்தையும் உடைத்து, தன்னோடு மீண்டு எழ வைக்கிறார்.
புதியதொரு சமுதாயத்தை தன்னோடு இயேசு மீட்டுருவாக்கிக் கொண்டு வருகிறார். இயேசுவினுடைய உயிர்ப்பின் ஊடாக புதியதொரு சமுதாயமும் மேலே எழுந்து வருகிறது. இயேசு தன்னோடு உயிர்ப்பித்த, மீட்டுருவாக்கிய அந்த புதிய சமுதாயத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், யூதர்களுடைய வரலாற்றுப் பின்னணியையும் இயேசுவினுடைய சமகாலத்து நிகழ்வுகளையும் நாம் சற்று ஆய்வு செய்ய வேண்டும்.
இயேசுவினுடைய காலத்தில், அந்தச் சமுதாயத்தில் இரண்டு பெரும் பிரிவுகள் இருந்தன. கற்றுத் தெரிந்தவர்கள், பிறப்பால் தங்களை உயர்வாக கருதிக் கொண்டவர்கள், பணம் படைத்தவர்கள். இவர்கள் ஒரு குழுவாகவும், சாதாரண ஏழைகள் இன்னொரு குழுவாகவும் இருந்தார்கள். இந்த ஏழைகள் தங்களுக்காக இறைவனால் படைக்கப்பட்ட பொருட்கள் என்று உயர் குடிமக்கள் கருதினார்கள்.
எந்த ஒரு சூழலிலும் அவர்களை சக மனிதர்களாக, கடவுளால் படைக்கப்பட்டவர்களாக ஏற்றுக்கொள்ள, உயர்குடி மக்களால் முடியவில்லை. இயேசுவின் காலத்தில் ஏழைகள் மூன்று வகைகளாக இருந்தார்கள். முதல் வகையினர் ஆதரவற்ற கைம்பெண்கள், தொழுநோயாளர்கள், ஊனமுற்றோர், பிச்சையெடுப்போர். இவர்கள் பட்டினிக்கும், பாதுகாப்பின்மைக்கும் ஆளாகி பல்வேறு விதங்களிலே துன்புற்றுக் கொண்டிருந்தார்கள்.
இரண்டாவது வகையான ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள். தரம் குறைந்தவர்களாக கருதப்பட்டவர்கள். தாழ்வானது என கருதப்பட்ட தொழில்களை செய்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஏழைகளாக இருந்தார்கள். இவர்களது வறுமை மிக மோசமானதுதான் அதைவிட மோசமானது சக மனிதர்களால் இவர்களுக்கு ஏற்பட்ட நிராகரிப்பு. இவர்கள் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவே இருந்தார்கள்.
மூன்றாவது வகையான ஏழைகள், எளிய மனத்தோரைக் குறிக்கும். அதாவது ஆதரவற்ற நிலையில் இறைவன் தான் எனக்கு எல்லாமே என்று நம்பி இருந்தவர்கள். பற்றிக்கொள்வதற்கு செல்வமோ, கல்வியோ, பதவியோ இல்லாமல் இறைவன் தான் எனக்கு என்று இறைவனோடு இணைந்து வாழ்ந்தவர்கள். இறைவனுக்காக தங்களை அர்ப்பணித்து வாழ்ந்தவர்களும் இந்த மூன்றாவது வகையை சார்ந்தவர்கள் ஆவார்கள்.
ஏழைகள் மதிக்கப்படாத, ஏழைகள் மனிதர்களாக ஏற்றுக்கொள்ளப்படாத அந்த காலகட்டத்திலே இயேசு ‘ ’ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர்’ (லூக்கா 6:20) என்று போதித்தார். இது புதுவிதமான புரட்சி சொற்களாக அந்த காலத்திலே ஓங்கி ஒலித்தது. இயேசு ஏழ்மை நிலையை வாழ்த்தவில்லை. வரவேற்கவில்லை. இவ்வாறு அவர் கூறக்காரணம் ஏழைகளின் தாழ்வு நிலையை வறுமையை நீக்க கடவுள் அவர்களோடு இருக்கிறார். அவர்கள் சார்பாக இருக்கிறார். அவர்களுக்காக அவர் வாதாடுகிறார் என்பதே பொருளாகும்.
‘’செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகக் கடினம் அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது’’ (மாற்கு 10:24-25). இந்த வார்த்தைகள் இன்னும் இயேசுவினுடைய சித்தாந்தங்களுக்கு வலுச் சேர்ப்பதாக இருக்கிறது. செல்வர்கள் அந்த செல்வச் செழிப்பினால் செய்யக் கூடிய செயல்களை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுவதாகவும் இருக்கிறது.
அந்த காலத்திலே சமூகத்தை சீர்குலைத்த இன்னொரு முக்கியமான சிந்தனை பழிக்குப் பழிவாங்கும் எண்ணம். மோசேயினுடைய சட்டத்தை கோடிட்டுக் காட்டி பழிக்குப் பழிவாங்கும் எண்ணத்தை யூதர்கள் தூக்கிப்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இயேசு “ஏழு முறை அல்ல எழுபது முறை ஒருவரை மன்னிக்க வேண்டும்” (மத்தேயு 5:12) என்று தன்னுடைய புதிய போதனையின் மூலமாக பழிக்குப் பழிவாங்கும் சிந்தனைக்கு எதிராக கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்னும் கோட்பாட்டுக்கு எதிராக போதிக்கிறார்.
அது அந்த சமுதாயத்திலே அன்புறவு புதிதாக மலர்வதற்கு காரணமாக இருக்கிறது. அது போல பரிசேயர், சதுசேயர், எசேனியர் என்போர் பாமர மக்களைத் தீண்டத் தகாத பாவிகளாக பார்த்தார்கள். அவர்களோடு உறவாடுவதோ, உணவருந்துவதோ பாவம் மிக்க செயல் என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் இயேசு இவற்றுக்கு மாறாக சம பந்தி விருந்துகளிலே கலந்து கொண்டார். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருடைய விருந்திலும் கலந்து கொண்டு எல்லோரோடும் இணைந்து விருந்துண்டு மகிழ்ந்தார்.
இது ஏற்றத் தாழ்வுகளை உடைப்பதற்கு பயன்பட்டது. இதுபோல இயேசுவினுடைய போதனைகள் இயேசுவினுடைய புதுமைகள், இயேசுவினுடைய வாழ்க்கை முறைகள், இயேசுவினுடைய தனிப்பட்ட உரையாடல்கள் இவை அனைத்தும் அந்த சமுதாயத்தை மனிதர்களை இரண்டாகப் பிரித்த சதித்திட்டம் வாய்ந்த சித்தாந்தங்களுக்கு எதிராக இருந்தது. இயேசுவினுடைய மரணம் என்பது, அவருடைய மூன்று வருட பணி வாழ்வோடு மிகுந்த தொடர்புடையதாக இருந்தது.
எல்லோரும் இறைவனுடைய பிள்ளைகள். இறைவனுடைய பார்வையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது கிடையாது என்னும் சிந்தனையை மையப்படுத்தித்தான் அவர் போதித்தார். அதை நோக்கிதான் அவர் பணியாற்றினார். யூத சட்டங்களில் பெரும்பான்மையான சட்டங்கள் எல்லோரும் கடவுளுடைய பிள்ளைகள் என்னும் பார்வைக்கு எதிராக இருந்தது.
அந்த சட்டங்களை யூத பெரியவர்கள் பாமர மக்கள் மீது வலுக்கட்டாயமாக சுமத்தினார்கள். அதை இயேசு அறிவியல் பூர்வமாகவும், சான்று பூர்வமாகவும் நிரூபித்து எல்லோரும் இறைவனுடைய பிள்ளைகள் என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்துக்கொண்டே வந்தார்.
ஏற்றத் தாழ்வு நிறைந்த அன்றைய சமுதாயத்தில் எல்லோரும் இறை தந்தையின் பிள்ளைகளே என்று அவர் முழங்கிக் கொண்டிருந்தார். இயேசுவினுடைய இந்த முழக்கம் ஓங்கி ஒலித்ததா என்றால் நிச்சயமாக இல்லை. சற்று வலிமை குறைவாகவே ஒலித்துக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட சூழலிலே இயேசு சிலுவை மரணத்திற்கு உட்படுத்தப்பட்டு கல்லறையிலே அடக்கம் செய்யப்படுகிறார்.
இயேசு உயிர்த்தெழுந்த போது இயேசு மட்டும் மீண்டு எழவில்லை மாறாக இயேசுவினுடைய போதனைகள், அதாவது, எதற்காக இயேசு பணியாற்றினாரோ அந்த சித்தாந்தங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்கிறார்.
அதாவது, இயேசுவினுடைய காலத்திலே இயேசுவால் மிகப்பெரிய அளவிலே கொண்டுவர முடியாத மாற்றத்தை இயேசுவினுடைய உயிர்ப்பிற்குப் பின்பு சீடர்கள் மூலமாக கடை எல்லை வரை கொண்டு செல்கிறார். இயேசு விரும்பிய அந்த இறையாட்சி சமூகத்தை உலகின் கடை எல்லை வரை இயேசுவினுடைய சீடர்கள் கொண்டு செல்கிறார்கள். அதற்கு அடிப்படையாக இருந்தது இயேசுவினுடைய உயிர்ப்பு.
கால் நடையாக சில கிலோமீட்டர் தூரம் மட்டுமே இயேசுவினுடைய காலத்திலே அவர் இந்த இறையாட்சி சமுதாயம் பற்றிய சிந்தனைகளை எடுத்துரைத்தார். ஆனால் அந்த உயிர்ப்பிற்குப் பின்பு உலகம் முழுவதும் அந்த சிந்தனைகள் பரவத் தொடங்கின. ஆகவே இயேசுவினுடைய அந்த உயிர்ப்பு தான் இயேசுவினுடைய சிந்தனைகள் மீண்டும் உருவாக உலகமெல்லாம் பரவ காரணமாக இருந்தது.
கல்லறையில் இருந்து இயேசு தனி ஒருவராக வெளியே வரவில்லை. மாறாக பல நூற்றாண்டுகளாக அமுக்கப்பட்டிருந்த, மறைக்கப்பட்டிருந்த பல நல்ல வாழ்வியல் சிந்தனைகளை குறிப்பாக எல்லோரும் கடவுளுடைய பிள்ளைகள் என்னும் சிந்தனைகளை உயிர்த்தெழச் செய்தார்.
இன்றும் அந்த சிந்தனை உலகின் மூலை முடுக்கெல்லாம் பற்றி எரிந்துகொண்டே இருக்கிறது. இன்னும் இந்தக் காலகட்டத்தில் இந்த உலகத்தில் மனிதம் உயிரோடு இருக்கிறது என்றால், எல்லோரும் கடவுளுடைய பிள்ளைகள் என்ற சிந்தனை ஒரு சில உள்ளங்களிலாவது வாழ்கிறது என்றால் அதற்கு இயேசுவினுடைய உயிர்ப்பும், அதற்கு பின்பு சீடர்களாற்றிய பணியும் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது என்றால் மிகையாகாது.
இயேசு உயிர்த்தார் என்று கொண்டாடுவதை விட இயேசுவோடு உயிர்த்த பல சித்தாந்தங்களை நாம் கொண்டாட வேண்டும் அவற்றை ஒவ்வொரு நாளும் உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவச் செய்வதற்கு நாம் காரணமாக இருக்க வேண்டும். எல்லோரும் இறைவனின் பிள்ளைகள், எல்லா மக்களும் உரிமையில், மகிழ்ச்சியைப் பெறுவதில் வளத்தைப் பெறுவதிலே சம உரிமை பெற்றிருக்கிறார்கள் என்னும் செய்தியை நாம் வார்த்தையாலும் வாழ்விலும் பறைசாற்றுவோம். அதற்கான அருளை உயிர்த்த இயேசுவிடம் மன்றாடுவோம்.
அருட்பணி அருண் ரெக்ஸ்