இஸ்லாம் போதிக்கும் உயர் நற்பண்புகளில் சகிப்புத்தன்மையும் ஒன்றாகும். ஒவ்வொரு மனிதனிடமும் காணப்பட வேண்டிய மிருதுவாக நடத்தல், இணங்கிச் செல்லுதல், விட்டுக்கொடுத்தல், பொறுமையை மேற்கொள்ளல், பெருந்தன்மையைக் கடைப்பிடித்தல் போன்ற அத்தனை நல்லம்சங்களும் சகிப்புத்தன்மையோடு மிக நெருங்கிய தொடர்பினை கொண்டிருக்கின்றன.
சகிப்புத்தன்மையினை அல்லாஹு தஆலா தன்னுடைய பண்பு என்பதாக அல்-குர்ஆனில் குறிப்பிட்டிருக்கிறான்.’அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.’ (ஸூறா அல்-பகரா : 235) அதேநேரம் நபி (ஸல்) அவர்கள், ‘அடித்து வீழ்த்துபவன் வீரனல்ல. கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே வீரனாவான்’ என்று கூறினார்கள். (ஆதாரம்; ஸஹீஹ் முஸ்லிம்)அந்த வகையில் ரமழான் நோன்பு அளிக்கின்ற பயிற்சியும் பக்குவமும் சகிப்புத்தன்மைக்கு பெரிதும் பங்களிக்கக்கூடியனவாகும்.
குறிப்பாக அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் நோன்பு காலத்தில் உணவையும் பானத்தையும் தவிர்த்து ஆசைகளையும் கட்டுப்படுத்திக்கொள்ள முடிகிறது. என்ன தான் பசி, தாக உணர்வு ஏற்பட்டாலும் இச்சை உணர்வுகள் மேலிட்டாலும் நோன்பு அவற்றைக் கட்டுப்படுத்தி சகித்துக் கொள்ளக்கூடிய பயிற்சியை அளிக்கக்கூடியதாக உள்ளது. எனவே நோன்பு அளிக்கின்ற சகிப்புத்தன்மைக்கான பயிற்சியை வாழ்நாள் முழுவதும் எடுத்து நடக்க ஒவ்வொருவரும் உறுதி கொள்ள வேண்டும். அது தனிப்பட்ட வாழ்வுக்கும் சமூக வாழ்வுக்கும் பெரிதும் பயனளிக்கக்கூடியதாகும்.
முப்தி எ.எச்.எம் மின்ஹாஜ் (காஷிபி, மழாஹிரி) நிந்தவூர்