தேர்தலுக்கான கட்சிகளின் தயார்படுத்தல்கள், அரசியல் காய்நகர்த்தல்கள் என்றெல்லாம் அரசியல் களம் பரபரப்பாகியிருக்கும் தற்போதைய நிலையில், பொருளாதார ரீதியில் நாடு மெதுமெதுவாக சாதாரண நிலைக்குத் திரும்பி வருகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துவரும் பொருளாதார நடைமுறைகள் நாட்டை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு செல்வதாக அமைந்துள்ளன. இதற்கு சான்றாக சர்வதேச ரீதியில் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீட்சிபெற்று வருவதற்காக இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் நான்கு வருட நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளும் பாதையைத் தெரிவு செய்திருந்தது.
ஏற்கனவே இரண்டு கடன் தவணைகள் கிடைத்திருந்த நிலையில், இரண்டாவது மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் மேற்கொண்டிருந்தது. இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்த இலக்குகளை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் மதிப்பாய்வுகளை மேற்கொள்ள இலங்கை வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவானது, இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை வெகுவாகப் பாராட்டியிருந்தது.
சர்வதேச நாணய நிதியம் என்பது வெறுமனே பொருளாதார சீர்திருத்தங்களை மாத்திரம் வலியுறுத்தாமல், சர்வதேச ரீதியிலான இணைப்புக்கள் மற்றும் முன்னேற்றங்களுக்குமான நலனையும் சார்ந்திருக்கின்றது.
தடையற்ற சந்தைப் பொருளாதாரம் என்பது உலகளாவிய யதார்த்தத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்பதுடன், இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் பல எதிர்பார்ப்புக்கள் காணப்படுகின்றன. இலங்கை அமுல்படுத்தியிருக்கும் பொருளாதார மறுசீரமைப்புக்கான வேலைத்திட்டத்தின் பிரதிபலன்கள் பாராட்டத்தக்க வகையில் அமைந்திருப்பதாகவும், இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்ததை விடவும் வேகமாக குறைந்துள்ளதாகவும், அதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியதெனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூயர் தெரிவித்திருந்தார்.
நிறைவேற்றுக் குழுவின் மீளாய்வு முடிவடைந்த பின்னர், இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி கிடைக்கும். அதன்படி சர்வதேச நாணய நிதியம் இதுவரையில் இலங்கைக்கு வழங்கியிருக்கும் மொத்த தொகை 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். பண வீக்கத்தை விரைவாக மட்டுப்படுத்தல், வெளிநாட்டுக் கையிருப்பு வலுவடைதல், பொருளாதார வளர்ச்சியின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளிட்ட பாராட்டுக்குரிய பிரதிபலன்களுடன் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் நிலையான மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
குறிப்பிடத்தக்க நிதி சீர்திருத்தங்களைத் தொடர்ந்து இலங்கையின் பொதுநிதி முகாமைத்துவம் வலுவடைந்திருக்கிறது. சமூக செலவினங்களுக்கான குறிகாட்டிகளைத் தவிர ஏனைய அனைத்து செயல்திறன் நியதிகள் மற்றும் குறிகாட்டி இலக்குகள் 2023 டிசம்பர் இறுதிக்குள் எட்டப்பட்டிருப்பதன் மூலம் செயல்திறன் வலுவடைந்திருக்கிறது.
பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்காக நிலையானதும் அனைத்தும் உள்ளடங்கியதுமான பாதைக்கு கொண்டு செல்வதற்கு மறுசீரமைப்பு வேகத்தை தக்கவைத்துக் கொள்வது அவசியமாகும்.
பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. 2025 மற்றும் அதற்குப் பின்னரான வருமான வழிமுறைகளை மேம்படுத்தும் அதேநேரம், சொத்துவரியை அறிமுகப்படுத்துவதும் முன்னேற்றத்தை ஈட்டித்தரும்.
வருமான நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளை மேம்படுத்துவதும் வரி சேகரிப்பை மேம்படுத்துவதற்கு முக்கியமான காரணியாகும் என இலங்கைக்கு வருகை தந்த மீளாய்வுக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சர்வதே நாணய நிதியத்தின் மீளாய்வுக் குழுவினர் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னரே இந்த சாதகமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கின்றமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளின் இந்தக் கருத்துக்கள் அமைந்துள்ளன.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பும் படிப்படியாகக் குறைந்து வருவதையும் அவதானிக்க முடிவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் பிரதிபலனாகவே இவ்வாறு சாதகமான முன்னேற்றத்தை அடைய முடிந்துள்ளது.
இருந்தபோதும், தாம் ஆட்சிக்கு வந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை மாற்றியமைக்கப் போவதாக எதிரணியினர் கூறி வருகின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியினால் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றங்களை புரிந்து கொள்ளும் திராணியற்ற நிலையில், அவர்கள் இவ்வாறு கூறி வருகின்றனர்.
இந்த வருடம் தேர்தல் ஆண்டு என்பதால் அரசியல் அரங்கங்களிலும் இந்த சர்வதேச நாணய நிதிய விவகாரம் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. தேர்தலுக்கு முன்னர் வாக்காளர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் இத்தகைய கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வியத்தில் தேவையற்ற குழப்பத்தை இக்கருத்துகள் உருவாக்குகின்றன. இந்த விடயமானது கட்சி பேதங்கள் இன்றி பொதுவாக விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும். ஆதாரமற்ற அரசியல் பேச்சுக்கள் வாக்காளர்களை கவர்ந்திழுக்கலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு நாட்டின் எதிர்காலத்தைப் பொறுத்தவரையில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தலாம்.
அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலுக்கு அமைய நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான சட்டதிட்டங்களும் இயற்றப்பட்டு வருகின்றன. இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அண்மையில் கூறியிருந்தார்.
அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பது பற்றிய சரியான விபரங்கள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும், எதிர்காலத்தில் எந்தக் கட்சி நாட்டை ஆட்சி செய்தாலும், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நாடு முன்னெடுத்துச் செல்வதை உறுதி செய்ய விரும்புவதால், அத்தகைய சட்டவாக்க முயற்சியில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த கால அனுபவத்தை வைத்துப் பார்த்தால், கொள்கைத் தொடர்ச்சி அவசியம் என்பது புரிகின்றது.
பல தசாப்தங்களாக இலங்கையின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த காரணிகளில் கொள்கை நிலைத்தன்மையின்மை முக்கியமானதாகும். சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது பரிசீலனையில் உள்ள சீர்திருத்தங்கள் கூட கடந்த காலத்தில் தோல்வியுற்றவையாகவே காணப்படுகின்றன. அவை பலனை அடைந்திருந்தால், இன்றைய நெருக்கடிகள் உருவாகியிருக்காது.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், வெளியேறும் அரசாங்கம் செய்ததைச் செயல்படுத்துவதைத் தவிர்ப்பதிலேயே வரவிருக்கும் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வதைக் காண்பது இலங்கையில் சர்வசாதாரணமாக உள்ளது. இவை அனைத்தும் தர்க்கரீதியானவை அல்ல.
பகுத்தறிவுடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்பதற்கு அப்பால் பிரபல்யத் தன்மையை அடைவதற்காக முன்னெடுக்கப்படும் அரசியல் பாசாங்குத்தனம் என்றே அதனைக் கூறலாம்.
பாசாங்குத்தனத்தால் உந்தப்பட்ட இத்தகைய அரசியலை நாடு இனியும் செய்ய முடியாது. கட்சி அரசியலில் மாறுபாடுகள் இருந்தாலும் வெளிப்படைத்தன்மையுடன் கொள்கையானது தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கான நேரம் இப்போது கனிந்துள்ளது.
பி.ஹர்ஷன்