விஜய் ஆண்டனி, மிர்ணாலினி ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோமியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படம் ‘ரோமியோ’. இதில் மிருணாளினி ரவி நாயகியாக நடித்துள்ளார். விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கவும் செய்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – ‘என் மனைவியை இனி ஒருதலையாக காதலிக்கப் போகிறேன்’ என்னும் டயலாக்குடன் ட்ரெய்லர் தொடக்கத்திலேயே நம்மை இழுத்துக் கொள்கிறது.
விருப்பமில்லாமல் திருமணத்துக்கு சம்மதிக்கும் ஹீரோயின், மனைவியின் அன்பைப் பெற பலவழிகளில் போராடும் கணவன் என்ற கதைக்களத்துடன் தமிழில் ‘மௌன ராகம்’ தொடங்கி, ‘ராஜா ராணி’ எண்ணற்ற படங்கள் தமிழில் வந்துவிட்டன. இதுவும் அதே பாணி கதைதான் என்பதை ட்ரெய்லரின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
எனினும் ட்ரெய்லர் முழுக்க வரும் நகைச்சுவையான வசனங்கள், கலகலப்பான காட்சிகள் மூலம் இது ஒரு ஜாலியான படமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ட்ரெய்லரில் ஆங்காங்கே விடிவி கணேஷ் அடிக்கும் ஒன்லைனர்களும் ரசிக்க வைக்கின்றன. இப்படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.