மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ படத்தின் முதல் தோற்ற டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து 2013-ம் ஆண்டு வெளியான படம், ‘சூது கவ்வும்’. பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்திருந்தனர். திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இதன் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சி.வி.குமார் தயாரிக்கும் இதில், மிர்ச்சி சிவா, கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். ‘யங் மங் சங்’ படத்தை இயக்கிய அர்ஜுன் இயக்கியுள்ளார். கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? – “வெற்றிப் படமான ‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது” என ட்ரெய்லரின் தொடக்கத்திலேயே டிவியில் வாய்ஸ் ஓவர் ஒலிக்கிறது. “நீ லாடா இருந்தாலும்” என்ற பாடலின் வழியே காட்சிகள் நகர்கிறது. ஜாலியான கேங்க்ஸ்டர் படமாக இருக்கும் என்பதை காட்சிகள் உணர்த்துகிறது. மிர்ச்சி சிவாவின் செயல்பாடுகள் அதனை உறுதி செய்கின்றன.
இறுதியில், “பொண்ணுங்களோட கற்பனையில தான் நிம்மதியா வாழமுடியும்; கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” என்ற பஞ்ச் வசனத்துடன் டீசர் முடிகிறது. இந்த டீசர் படத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.