ரஷ்யாவின் மொஸ்கோவின் எல்லையிலுள்ள இசை நிகழ்ச்சி அரங்கொன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 115பேர் கொல்லப்பட்டதாகவும் 145 பேர் காயமடைந்துள்ளதாகவும், ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.
வடமேற்கு புறநகர் கிராஸ்னோகோர்ஸ்கில் குறைந்தது நான்கு பேர் உடல் முழுவதும் மறைத்தவாறு உடை அணிந்துகொண்டு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
குரோகஸ் சிட்டி ஹால் வளாகத்தில் இசை நிகழ்ச்சி நடக்கவிருந்தது. அப்போது அரங்குக்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், அங்கிருந்தவர்கள் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் கட்டடத்தின் பெரும்பகுதி தீயில் எரிந்தது மட்டுமின்றி, மேற்கூரையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.
இதில் பலியானவர்களில் குழந்தைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் ரஷ்ய வெளியுறவு அமைச்சு இந்த ‘பயங்கரவாத தாக்குதலுக்கு’ கடுமையாக கண்டனம் செய்துள்ளது.
இணையத்தில் பரவிவரும் உறுதிப்படுத்தப்படாத அறிக்கையின்படி, இந்தத் தாக்குதலுக்கு பின்னால் ஐ.எஸ். தீவிரவாதக் குழு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, ரஷ்யாவின் மொஸ்கோ நகரிலுள்ள திரையரங்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை இலங்கை அரசாங்கம் கண்டித்துள்ளதுடன், இந்தத் தாக்குதலில் இலங்கையர் எவருக்கும் காயம் ஏற்படவில்லையென, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மொஸ்கோவிலிருந்து கிடைத்த தகவலின்படி இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலாக கருதப்படுகிறது என்று ஐ.நா. செயலாளர் தெரித்துள்ளார்.
இதேவேளை, இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில், இந்த சோகமான நேரத்தில் ரஷ்யாவுடன் தான் நிற்பதாக தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கும், ரஷ்ய அரசாங்கத்துக்கும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான், கியூபா, ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளும் இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளன.