எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட பெண்களின் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பவுள்ளதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பண்டாரவளை இந்துக் கலாசார நிலைய மண்டபத்தில் 17.03.2024 காலை 10 மணிக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மகளிர் தின நிகழ்வுகள் பேரணியுடன் ஆரம்பமாகின.
பண்டாரவளை புகையிரத நிலையத்திலிருந்து நகரின் ஊடாக பண்டாரவளை இந்துக் கலாசார மண்டபம் வரை இப்பேரணி சென்றது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து தெரிவு செய்யப்பட்ட பதுளை மாவட்ட பெண்கள் கௌரவிக்கப்பட்டனர். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் இந்நுகழ்வில் உரையாற்றுகையில்,
பதுளை மாவட்ட சுற்றுலாப் பிரதேசத்தில் தோட்டக் காணிகள் கையகப்படுத்தப்பட்டதன் காரணமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் காணிகளின் உரிமை வழங்கப்பட வேண்டும், தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் இன்னும் அதிகரிக்கப்படவில்லை.
இருப்பினும் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் நாளொன்றுக்கு 1700 ரூபா உயர்வே போதாது 2000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அன்றைய தினத்துக்கான பிரகடனமாக மூன்று விடயங்களையும் அவர் முன்வைத்தார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 2000 ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
காணி உரிமையை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். முதலாளிமார் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வடிவேல் சுரேஷ் மேலும் தெரிவித்தார்.