தமக்கான வீடுகளை தாமே நிர்மாணித்துக் கொள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும். பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் மூதாதையர் இந்த நாட்டுக்கு வருகை தந்து இருநூற்றியொரு வருடம் கடந்துள்ள போதிலும் தோட்டத் தொழிலாளர்களில் கணிசமான எண்ணிக்ைகயானவர்கள் இன்னும் ஆங்கிலேயரினால் கட்டப்பட்ட லயன் அறைகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
1994.08.16 அன்று நடத்தப்பட்ட பாராளுமன்ற பொதுத் தேர்தல்களுக்கான தேர்தல் பிரசார மேடைகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் தோட்டக் தொழிலாளர்கள் குடியிருக்கும் வீடுகளும் வீடுகளைச் சுற்றியுள்ள காணிகளும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்க, மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரான பெரியசாமி சந்திரசேகரன் தோட்டத் தொழிலாளர் குடும்பம் ஒன்றுக்கு 7 பேச்சர்ஸ் காணி வழங்கப்பட்டு அந்த காணியில் தனித்தனி வீடுகள் அமைக்கப்பட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று கோரினார்.
1994.08.16 அன்று நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தலைமையிலான கூட்டணி வெற்றியீட்டி அரசாங்கம் அமைக்க மலையக மக்கள் முன்னணியின் தலைவரான பெரியசாமி சந்திரசேகரனின் ஒரு ஆசனம் உதவியதனால் அதற்கு பிரதியுபகாரமாக அவருக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தலைமையிலான அரசாங்கத்தில் தோட்ட வீடமைப்பு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட, அவர் நாடளாவிய ரீதியில் ஏறத்தாழ ஆறாயிரத்து ஐநூறு வீடுகளை நிர்மாணித்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கினார்.
அதே காலகட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் அவர்கள் குடியிருந்த வீடுகளை முன்புறமாகவும் பின்புறமாகவும் விஸ்தரித்துக் கொள்ள தோட்ட நிர்வாகங்கள் அனுமதி வழங்கியதனால், தோட்டத் தொழிலாளர்கள் தமது குடியிருப்புகளை அவ்வாறு விஸ்தரித்துக் கொண்டு வாழ்கிறார்கள்.
அதன் பின்பு அரசாங்கங்கள் மாறி மாறி அமைக்கப்பட்ட போதிலும் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்பு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் மலையக புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்ற பின்னர் கிராமங்களை உருவாக்கி அவற்றிற்கு சமூக சேவையாளர்களின் பெயர்களை சூட்டி வீடுகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கினார்.
அதன் பின்பு கோட்டாபய ராஜ பக் ஷ தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்தது. அந்த அரசாங்கத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கப்படவில்லை. கோட்டாபய ராஜபக் ஷவிற்கு பின்பு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்ற பின்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களாக பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் 176,000 தொழிலாளர் குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு தலா 10 பேச்சர்ஸ் காணி வழங்குவதற்காக 4000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.
பல அரசாங்கங்கள் ஆட்சிக்க வந்த போதும் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை.
இந்திய அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்காக 50,000 வீடுகளுக்கான நிதியை வழங்க அந்த 50,000 வீடுகளில் 4000 வீடுகளுக்கான நிதியை பெற அமரர் ஆறுமுகன் தொண்டமான் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி, அந்த நிதியின் மூலம் 4000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அண்மையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அவற்றில் ஒரு பகுதி வழங்கப்பட்டு 4000 வீடுகளை நிர்மாணிக்கும் பணி நிறைவு செய்யப்பட்டது.
இந்திய பிரதமர் ஒரு சில வருடங்களுக்கு முன்பு நோர்வூட் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்காக மேலும் பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிக்க நிதி வழங்குவதாக அறிவித்தார்.
இந்திய அரசாங்கம் பத்தாயிரம் வீடுகளுக்கான நிதியை ஒதுக்கி சில வருடங்கள் கழிந்துள்ள போதிலும் முதல் கட்டமாக பத்து மாவட்டங்களில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்காக 1300 வீடுகளை நிர்மாணிக்கும் பணி கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு அந்த பணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு நிறைவு செய்யப்பட்டு தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எஞ்சியுள்ள 8700 வீடுகள் எப்போது நிர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை.
எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 176,000 தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க தோட்டத் தொழிலாளர் குடும்பம் ஒன்றுக்கு 10 பேச்சர்ஸ் காணி வீதம் வழங்க ஒதுக்கப்பட்ட 4000 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி பெருந்தோட்டங்களில் காணிகளை ஒதுக்க வேண்டும். அவற்றை தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கி அவர்களுக்கான வீடுகளை அவர்களாகவே நிர்மாணித்துக்கொள்ள அவர்களுக்கு மூன்று வருடகால அவகாசத்தை அரசாங்கம் வழங்க வேண்டும். அந்தக் கால எல்லைக்குள் வீடுகளை நிர்மாணிக்காத தோட்டத் தொழிலாளர்களின் காணிகள் மீளப் பெறப்படும் என அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.
பல்லாயிரக்கணக்கான ரூபாவை செலவு செய்தே காணிகளை கொள்வனவு செய்ய முடியும். காணி இலவசமாக கிடைக்கும் போது தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்க தமது உழைப்பை நல்கியும் தமது சொந்த பணத்தைக் கொண்டும் மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு மேலதிக வருமானத்தை பெறுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டும் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள வேண்டும்.
“எலி வளையானாலும் தனிவளை வேண்டும்” என சிந்தித்து இனிவரும் காலங்களில் தோட்டத் தொழிலாளர்கள் புத்தி சாதுரியத்துடன் செயற்படவேண்டும். அரசாங்கம் வீடுகளை நிர்மாணித்துத் தரட்டும் எனக் காத்திருக்க எண்ணினால் இலவு காத்த கிளியின் நிலையே ஏற்படும்.
எனவே, கிடைக்கவுள்ள வாய்ப்பை நழுவவிடாது, தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொண்டால் ஒரு சில வருடங்களில் தோட்டத் தொழிலாளர்களின் வீடில்லாப் பிரச்சினைக்கு முற்று முழுதான தீர்வு காண வாய்ப்புக் கிட்டும்.
இதுகாலவரை தோட்டத் தொழிலாளர் குடும்பம் ஒன்றுக்கு 7 பேச்சர்ஸ் காணியே வழங்கப்பட்டது. தற்போதைய அரசாங்கம் 10 பேச்சர்ஸ் காணி வழங்கினால் யாருமே அந்தத் திட்டத்தை எதிர்க்க மாட்டார்கள். எனவே, தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது வாக்குறுதியை காலம் தாழ்த்தாது நிறைவேற்றி தோட்டத் தொழிலாளர்களின் லயன் அறை வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த நாட்டின் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும்.
முன்னைய காலத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடமைப்புக்காக, வீடமைப்பு அதிகார சபையின் மூலம் கடன் வழங்கப்பட்டு கூரைத் தகடுகளும் கழிப்பறை பொருட்களும் வழங்கப்பட்டது போன்று அந்த வசதிகளையும் தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பின் தோட்டத் தொழிலாளர்கள் தாமாகவே வீடுகளை அமைத்து சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ வழிகிட்டும்.
இவதன்