ரமழானில் மேற்கொள்ளப்படும் நல்லமல்களில் மிகச் சிறந்தது நோன்பு துறக்கச் (இப்தார்) செய்வதாகும். இந்த நற்காரியத்தை நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டி ஊக்குவித்துள்ளார்கள்.
இது தொடர்பில் சுனனுத் திர்மிதியில் பதிவாகியுள்ள நபிமொழியொன்றில் ‘யார் ஒருவரை நோன்பு துறக்க வைக்கின்றாரோ, நோன்பு நோற்றவருக்கு கிடைக்கப்பெறும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையில் எதுவும் குறையாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘யாராவது நோன்பு துறக்க உதவினால் அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து, நரக விடுதலையும் கொடுத்து, நோன்பாளி அன்றைய தினத்தில் செய்த அனைத்து நன்மைகளின் பங்குதாரியாக அன்றைய தினம் நோன்பு துறக்க வைத்தவருக்கும் கொடுக்கிறான் எனவும் கூறினார்கள். அச்சமயம் ஸஹாபாக்கள், ‘எங்களில் அவ்வாறு வசதி படைத்தவர்கள் இல்லை’ எனக் குறிப்பிட்ட போது, ‘ ஒரு பேரீச்சம் பழம் அல்லது பால் ஒரு மிடறு அல்லது தண்ணீர் மூலம் நோன்பு துறக்க வைத்தவருக்கும் அந்தக் கூலி கிடைக்கப்பெறும் எனவும் அன்னார் குறிப்பிட்டார்கள்.(ஆதாரம்; பைஹகி)
என்றாலும் ரமழான் காலத்தில் நோன்பு துறக்க செய்வது அதிகளவிலான நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய காரியம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதனை பல நபிமொழிகள் எடுத்தியம்பியுள்ளன.
எனவே, ரமழானில் முடியுமான அளவு நோன்பு துறக்க ஏற்பாடுகள் செய்து, உதவிகள் புரிந்து அல்லாஹ்விடம் நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்.