பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இலங்கை குழாம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்தது. 16 பேர் கொண்ட அந்தக் குழாத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு விளையாட்டுத் துறை அமைச்சரின் ஒப்புதல்தான் பாக்கி. ஆனால் டெஸ்ட் குழாத்துக்கு வனிந்து ஹசரங்க 17 ஆவது வீரராக திடுதிடுப்பென்று அறிவிக்கப்பட்டதில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்தன. எங்கேயோ இடிப்பது போல் தெரிகிறதே! என்று தோன்றியதில் தப்பில்லை.
ஹசரங்க கடந்த ஆண்டிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். உண்மையில் அவருக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் ஆகாது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களில் எத்தனை தான் சிறந்த வீரராக இருந்தாலும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்தில்லை.
அவர் இதுவரை ஆடிய நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் நான்கே நான்கு விக்கெட்டுகளையே வீழ்த்தி இருந்தார். எனவே, டெஸ்ட் கிரிக்கெட்டில் தேர்வுக் குழுவினர் அவரை கடந்த காலங்களில் கண்டு கொண்டதாக இல்லை. கடைசியாக அவர் 2021 ஆம் ஆண்டில்தான் டெஸ்ட் கிரிக்கெட் ஒன்றில் ஆடி இருக்கிறார்.
மற்றது உலகின் பல நாடுகளிலும் டி20 லீக் கிரிக்கெட்டில் ஆடிவரும் வனிந்துவை பொறுத்தவரை டெஸ்ட் என்பது தேவையற்ற சுமை. மற்றது ஐ.பி.எல். தொடரும் ஆரம்பித்திருக்கும் சூழலில் ஏன் அவரை டெஸ்ட் போட்டிக்கு தேர்வாளர்கள் அழைக்க வேண்டும் என்ற கேள்வியும் பெரிதாக இருந்தது.
வனிந்து இந்திய பிரீமியர் லீக்கில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் இன்றியமையாத வீரர். அவர் பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் ஆடினால் ஐ.பி.எல். இல் மூன்று போட்டிகளை இழந்து விடுவார்.
அதாவது எந்தக் கோணத்தில் பார்த்தாலும் வனிந்துவின் திடீர் டெஸ்ட் வருகை பொருத்தமாக தெரியவில்லை. இலங்கை டெஸ்ட் அணியில் ஆஸ்தான சுழற்பந்து வீச்சாளராக பிரபாத் ஜயசூரிய இருக்கிறார். இவருக்கு உதவியாக ரமேஷ் மெண்டிஸ், நிஷான் பீரிஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் இருக்கிறார்கள். இவர்களுடன் வனிந்துவின் வருகை என்பது அத்தனை முக்கியமானதாக இல்லை.
ஆனால், அவர் டெஸ்ட் குழாத்தில் சேர்க்கப்பட்டு சில மணி நேரம்தான் கடந்திருந்தது. அதற்குள் ஐ.சி.சி. அவருக்கு போட்டித்தடை விதித்தது. அதாவது வனிந்துவின் டெஸ்ட் வருகை என்பது அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்ற உண்மையான எண்ணத்தை விடவும் ஐ.சி.சியின் தடையில் இருந்து தப்பிப்பதற்கே மிகப் பொருத்தமாக இருந்தது.
இலங்கை தோற்று தொடரை இழந்த பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வழக்கம் போல நடுவருடன் வனிந்து சண்டைக்கு போனது தடை ஒன்றை எதிர்கொள்வதற்கு போதுமானதாக இருந்தது. அதாவது வனிந்து பற்றி நடுவர் ஐ.சி.சி. போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட்டதை அடுத்து ஏற்கனவே தகுதி இழப்பு புள்ளிகளை சேர்த்திருந்த வனிந்துவுக்கு ஐ.சி.சி. தடை வருவது கிட்டத்தட்ட உறுதியாகி இருந்தது. அப்போதே தடையில் இருந்து தப்பிக்க குறுக்கு வழியை தேடி இருக்க வேண்டும்.
இப்போது யோசித்தால் தேர்வுக் குழுவினர் வனிந்துவை டெஸ்ட் குழாத்தில் சேர்த்ததற்கும், அதனை தொடர்ந்து அவருக்கு தடை விதிக்கப்பட்டதற்கும் சரியாகிப் போய்விடும்.
வீரர்கள் மற்றும் வீரர் உதவி பணியாளர்களுக்கான ஐ.சி.சி. நடத்தை விதியின் 28 ஆவது பிரிவை மீறியதாகவே வனிந்து மீது குற்றங்காணப்பட்டது. இது ‘சர்வதேச போட்டி ஒன்றின்போது நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன்’ தொடர்புபட்ட விதியாகும்.
ஏற்கனவே ஐந்து தகுதி இழப்பு புள்ளிகளுடனேயே பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் ஆடி இருந்தார். அதுவே 24 மாதங்களுக்குள் எட்டு தகுதி இழப்பு புள்ளிகளை பெறும் பட்சத்தில் அது இரண்டு டெஸ்ட், நான்கு ஒருநாள் அல்லது நான்கு டி20 போட்டிகளில் தடை விதிப்பதற்கு நிகராகும். இதில் முதலில் எது வருகிறதோ அதில் தடை அமுலுக்கு வரும்.
எதிர்பார்த்தது போல் வனிந்துவுக்கு போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதத்துடன் மூன்று தகுதி இழப்பு புள்ளிகளையும் ஐ.சி.சி. வழங்க அது மொத்தம் எட்டு தகுதி இழப்பு புள்ளிகளாக அமைந்தது.
பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை அடுத்து இலங்கை அணி நேரடியாக டி20 உலகக் கிண்ணத்தில்தான் ஆட வேண்டி இருக்கும். வனிந்துவின் தடை டி20 கிரிக்கெட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்தால் முதல் நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளையும் அவர் இழந்திருப்பார். இலங்கையின் டி20 அணித் தலைவராக அது பெரும் இழப்பாக இருந்திருக்கும். சமயோசிதமாக அது இரண்டு டெஸ்ட் போட்டிகளுடன் முடிந்தது.
வனிந்துவின் தடைக்கு காரணமான சம்பவம் பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் 37 ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் நிகழ்ந்தது. வனிந்து, ரிஷாட் ஹொஸைனுக்கு வீசிய கூக்லி பந்து சரியாக மிட்ல் லெக் பக்கமாக குட் லென்தில் விழுந்தது. ரிஷாட் தடுத்தாட முயன்றாலும் அது அவரது துடுப்பில் படாமல் காலில் பட்டது. பார்ப்பதற்கு விக்கெட்டை நேராக மறைத்திருப்பது போல் தெரிந்தது.
ஹசரங்க மற்றும் மற்ற வீரர்கள் நடுவரிடம் ஆட்டமிழப்பு கேட்டார்கள். நடுவர் தன்வீர் அஹமட் மறுத்துவிட்டார். இலங்கை அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ரிவியு கேட்டபோதும் ரிவியு காட்சிகளும் உறுதியான முடிவை தராதபோது நடுவரின் முடிவே இறுதியானதாக இருந்தது.
இதுவே வனிந்துவின் கோபத்துக்குக் காரணம். நடுவரிடம் கோபப்பட்ட அவர் நடுவரை கேலி செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் நடுவரிடம் தனது தொப்பியை ஆவேசமாக பறித்தெடுத்தார். நடுவரும் அதைப் போய் மத்தியஸ்தரிடம் முறையிட்டார்.
குசல் மெண்டிஸும் தப்பவில்லை. அவருக்கும் போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதத்துடன் மூன்று தகுதி இழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டன. நடுவருடன் கைலாகு கொடுக்கும்போது மோசமான நடந்து கொண்டதாகவே மெண்டிஸ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அவர் அப்படி என்ன மோசமாக நடந்து கொண்டார் என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.
என்றாலும் இரு வீரர்களும் தமது தடையை ஒப்புக் கொண்டதை அடுத்தே தண்டனை உறுதியாகி இருக்கிறது.
ஆனால் காக்கை உட்கார பனம் பழம் விழுந்ததாகச் சொல்கிறது இலங்கை கிரிக்கெட் சபை. தடைக்கான சம்பவம் நிகழ்வதற்கு முன்னரே ஹசரங்க தனது டெஸ்ட் ஓய்வு முடிவை மாற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதற்கு விருப்பத்தை வெளியிட்டதாக அது கூறியது. டெஸ்டில் ஆடும் விருப்பத்தை வெளியிட்ட மின்னஞ்சல் கடந்த மார்ச் 16 ஆம் திகதியே இலங்கை கிரிக்கெட் சபைக்கு கிடைத்ததாம்.
இலங்கை தேர்வுக் குழு உறுப்பினரான அஜந்த மெண்டிஸும், இந்த சம்பவத்திற்கு முன்னதாக ஹசரங்க டெஸ்ட் ஆடுவதற்கு விருப்பத்தை வெளியிட்டிருந்ததாக குறிப்பிட்டார்.
‘கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன்னரே மீண்டும் டெஸ்ட் போட்டியில் ஆட விரும்புவதாக அவர் எம்மிடத்தில் குறிப்பிட்டிருந்தார்’ என்று மெண்டிஸ் கிரிக்கின்போ இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார். ‘இது எப்படி பார்க்கப்படும் என்பது எமக்குத் தெரியும், ஆனால் கடைசி ஒருநாள் போட்டிக்கு முன்னதாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற இலங்கை அணியின் முகாமையாளர் மஹிந்த ஹலன்கொடவும் இதனைத்தான் சொன்னார்.
‘ஊடகங்களில் பகிரப்படும் செய்தி தவறானது. ஆரம்பத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்த ஹசரங்க சில வாரங்களுக்கு முன்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டார். பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாகவே தனது முடிவை மாற்றி கடிதம் ஒன்றை ஹசரங்க இலங்கை கிரிக்கெட்டுக்கு வழங்கி இருந்தார்.
முன்னதாகவே இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்களிடம் அந்தக் கடிதம் இருந்தது. மோதுமான அளவு ஆலோசனைக்குப் பின்னரே தேர்வாளர்கள் அவரை டெஸ்ட் குழாத்தில் இணைக்க தீர்மானித்தார்கள். அதற்கும் உலகக் கிண்ணத்திற்கும் சம்பந்தம் இல்லை’ என்கிறார் ஹலன்கொட.
ஆனால் இதில் எத்தனையோ குத்தல் குடைசல் இருக்கிறது. வனிந்து ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்ப முடிவு எடுப்பதாக இருந்தால் அது முக்கியமான செய்தி ஒன்று. ஆனால் அது பற்றி ஊடகங்களுக்கு முன்கூட்டியே எந்த தகவலும் வழங்கப்படவில்லை, கசியவிடப்படவும் இல்லை.
ஆனால் அண்மைக் காலத்தில் முதல்தர போட்டிகளில் கூட விளையாடாத ஹசரங்கவை அவரது தடை வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் அணியில் சேர்க்க தோன்றியிருக்கிறது உண்மையிலேயே சந்தேகத்தை ஏற்படுத்தும் எதேச்சையானது.
மற்றது ஐ.பி.எல். தொடர் ஆரம்பித்த நிலையிலேயே இலங்கை மற்றும் பங்களாதேஷ் டெஸ்ட் தொடரும் ஆரம்பித்தது. டெஸ்ட் ஆடாத ஹசரங்க ஐ.பி.எல். இல் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடுவதற்கு தயாராகி இருந்தார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவதாக இருந்தால் அதுபற்றி சன்ரைசஸ் அணிக்கு தெரிந்திருக்க வேண்டும்; ஆனால் சன்ரைசஸ் அணிக்கு அது பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என்று அந்த அணி வட்டாரத்தை மேற்கோள்காட்டி கிரிக்கின்போ செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் இலங்கை சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி பிரச்சினையில் இருந்து தப்புவது ஒன்றும் புதிதல்ல. 2012 டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கையின் அணித் தலைவராக செயற்பட்ட மஹேல ஜயவர்தன ஒரு போட்டியில் மாத்திரம் விலகி தலைமை பொறுப்பை குமார் சங்கக்காரவுக்கு கொடுத்தார். மந்தமாக ஓவர்களை வீசியதற்காக இலங்கை அணி கண்டிக்கப்பட்ட நிலையிலேயே தடை ஒன்றை தவிர்க்கும் வகையில் மஹேல இந்த முடிவை எடுத்தார். ஏற்கனவே இதற்காக தண்டிக்கப்பட்ட மஹேல மற்றொரு முறை தண்டிக்கப்பட்டால் போட்டித் தடை ஒன்றுக்கு முகம்கொடுத்திருப்பார்.
பங்களாதேஷுடனான கிரிக்கெட் என்பது இலங்கைக்கு நாளுக்கு நாள் மோசமான அனுபவத்தையே தருகிறது. இரு அணி வீரர்களும் மைதானத்தில் நையாண்டி செய்வது மற்றும் மோதிக் கொள்வதும் வழக்கமாகி இருப்பதோடு போதாக்குறைக்கு இந்த நடுவர்களின் பிரச்சினை வேறு.
பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் பினுர பெர்னாண்டோ வீசிய பந்து சௌம்யா சார்கரின் துடுப்பில் பட்டு சென்றபோது விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸ் பிடியெடுத்தார். கள நடுவரும் ஆட்டமிழப்பு கொடுக்க, சௌம்யா மூன்றாவது நடுவரிடம் மேன்முறையீடு செய்தார். மூன்றாவது நடுவரோ துடுப்பில் பந்து படுவது உலகுக்கு அப்பட்டமாக தெரிந்தபோதும் ஆட்டமிழப்பு இல்லை என்று கூறியது பங்களாதேஷ் நடுவர்கள் பற்றி இலங்கை வீரர்களின் அவநம்பிக்கைக்கு அடிப்படையாகும். இது பற்றி இலங்கை ஐ.சி.சிக்கு முறைப்பாடு கூட செய்தது.
இந்தத் தொடர் முழுவதும் இப்படியான சூழல் நீடிக்கும் நிலையிலேயே ஹசரங்கவின் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஹசரங்கவையும் முழுமையாக சுத்தப்படுத்திவிட முடியாது. அண்மையில் கூட நடுவருடன் கோபப்பட்டு போட்டித் தடைக்கு முகம்கொடுத்தார்.
கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் தீர்க்கமான கடைசி ஓவரில் இடுப்புக்கு மேலால் சென்ற புல்டோஸ் பந்துக்கு நடுவர் லைன்டன் ஹனிபல் நோபோல் பிடிக்காதது அந்தப் போட்டியில் இலங்கை தோற்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக மாறியது.
இதனால் வனிந்துவின் கோபம் நியாயமானது என்றாலும் அதனை வெளிப்படுத்தியது எல்லை மீறியதாக இருந்தது. போட்டிக்குப் பின்னர் நடுவருடன் மோதலில் ஈடுபட்ட ஹசரங்க, செய்தியாளர் சந்திப்பில், நடுவரை வேறு வேலையை பார்க்கும்படி குறிப்பிட்டார்.
இது பற்றி நடுவர் ஐ.சி.சியிடம் முறையிட்டதை அடுத்து, ஹசரங்கவின் போட்டிக் கட்டணத்தில் 50 வீதம் அபராதமும் இரண்டு போட்டிகளில் தடையும் விதிக்கப்பட்டது. இதனால் அவரால் பங்களாதேஷுக்கு எதிரான முதல் இரு டி20 போட்டிகளிலும் ஆட முடியாமல்போனது. இந்தப் பிரச்சினை முடிவதற்குள்ளேயே அவர் மீண்டும் பிரச்சினையில் சிக்கி இருக்கிறார். இது ஆரோக்கியமானதாக இல்லை.
மைதானத்தில் நடுவரின் முடிவை மதிப்பது கிரிக்கெட்டின் அடிப்படைகளில் ஒன்று. அது கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். சரியோ, தப்போ அதுதான் கடைசியானது. அதனை வனிந்து இன்னும் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. அதுவும் டி20 அணித் தலைவராக அவரது நடத்தை முழு அணிக்குமே முக்கியமானது.
எப்போதுமே இப்படி தடைகளில் இருந்து தப்பிப்பதற்கு குறுக்கு வழிகளில் செயற்படுவது, கண்ணாம்மூச்சி ஆட்டம் ஆடுவதை செய்ய முடியாது.
எஸ்.பிர்தெளஸ்