மத்திய கிழக்கில் தனித்துவம் மிக்க நாடு தான் சவுதி அரேபியா. 21 இலட்சத்து 50 ஆயிரம் சதுர கிலோ மீற்றர்கள் பரப்பளவைக் கொண்டுள்ள இந்நாடு மத்திய கிழக்கில் மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடாகவும் ஆசியக் கண்டத்தில் ஐந்தாவது பெரிய நிலப்பரப்புக் கொண்ட நாடாகவும் விளங்குகிறது. வடக்கில் ஜோர்தான், ஈராக், குவைத் ஆகிய நாடுகளையும், கிழக்கில் பாரசீக வளைகுடாவையும், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸையும், தெற்கில் யெமனையும், மேற்கில் செங்கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ள இந்நாடு 35.95 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது.
சவுதி அரேபியா பாலைவன நாடான போதிலும் நீண்ட மனித வரலாற்றுக்கு உரிமை கொண்டிருக்கிறது. கிறிஸ்துவுக்கு முன்னரான பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைதூதர் இப்றாஹீம் (அலை) நபியின் ஊடாக சவுதியின் வரலாறு புதுவடிவம் பெறுகிறது. இப்றாஹீம் (அலை) நபிக்கு கிடைக்கப்பெற்ற இறை கட்டளைப் படி அன்னார், தம் மனைவியையும் மகனையும் மக்கா பள்ளத்தாக்கில் கொண்டு வந்து தங்கச் செய்துவிட்டுச் சென்றார். அச்சமயம் அவர், தன் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை செய்ததாக அல் குர்ஆன் குறிப்பிட்டிருக்கிறது,
‘எங்கள் இறைவனே.. நிச்சயமாக நான் என் சந்ததிகளை மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்து விட்டேன். அது விவசாய மற்றதொரு பள்ளத்தாக்கு. எங்கள் இறைவனே… அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்). மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நேசிக்கும் படி நீ செய்வாயாக…. (பற்பல) கனி வர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக… (அதற்கு) அவர்கள் உணவுக்கு நன்றி செலுத்துவார்கள். (14;37)
இவ்வாறான சூழலில் இறைவனின் ஏற்பாட்டில் அப் பாலைவனத்தில் கஃபாவுக்கு அருகில் ஸம்ஸம் நீரூற்று உருவானது. இதன் ஊடாக கஃபாவும் அதனை அண்மித்த பிரதேசங்களும் மனித நடமாட்டம் கொண்டவையாக உருவாகின.
இந்நிலையில் தன் மகனுடன் இணைந்து இறைவனை வணங்குவதற்கான முதலாவது மஸ்ஜித்தான கஃபாவை அமைத்த இப்றாஹீம் (அலை) நபி தன் இறைவனிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்தார் என்றும் அல் குர்ஆன் சுட்டிக்காட்டியுள்ளது.
‘இப்றாஹீம் (இறைவனிடம்) ‘என் இறைவனே… (மக்காவாகிய) இதை பாதுகாப்பு அளிக்கும் ஒரு பட்டணமாக ஆக்கி, இதில் வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறாரோ அவருக்கு உணவாகப் பலவகைக் கனிவர்க்கங்களையும் அளித்துவா’ எனக் கூறியதற்கு (இறைவன் ‘என்னை நம்பிக்கை கொள்பவருக்கு நான் உணவளிப்பது போன்று என்னை) நிராகரிப்ப(வனுக்கும் உணவளித்து அ)வனையும் சிறிது காலம் (அங்கு) சுகமனுபவிக்க விட்டு வைப்பேன். பின்னர் நரக வேதனையின் பக்கம் (செல்லும்படி) அவனை நிர்ப்பந்திப்பேன். அவன் செல்லும் (அந்த) இடம் (மிகக்) கெட்டது என்று கூறினான். (2:126)
இறைவனின் கட்டளைப்படி மனித சஞ்சாரமற்ற பிரதேசத்தில் தம் மனைவியையும் மகனையும் தங்கச் செய்த இப்றாஹீம் (அலை) நபி, இப்பிரார்த்தனைகளின் ஊடாக மாபெரும் மனித நாகரிகத்திற்கு அடித்தளமிட்டார்கள் என்பது தெளிவாகிறது. என்றாலும் காலப் போக்கில் அங்கு வாழ்ந்தவர்கள் குடும்பங்களாகவும் குழுக்களாகவும் கோத்திரங்களாவும் பிளவுபட்டு பிரிந்து வாழ்ந்தனர். அது கிறிஸ்துக்கு பின்னர் 600 ஆண்டுகள் வரையும் கூட நீடித்தது. அதாவது இறுதித்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்த காலப்பகுதியிலும் அங்கு குழு, கோத்திர முறையே மிகைத்திருந்தது.
ஆனால் அல்லாஹ்வின் கட்டளை மற்றும் வழிகாட்டல்கள் படி முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித வரலாற்று ஒட்டத்திலேயே திருப்பு முனையை ஏற்படுத்தினார். அவர் இஸ்லாத்தை போதித்து 23 வருட காலப்பகுதியில் முழுமைப்படுத்தினார். அதன் ஊடாக சவுதி அரேபியாவின் சமய, சமூக, பொருளாதார புத்தெழுச்சிக்கும் உலகின் மறுமலர்ச்சிக்கும் அடித்தளமிட்டார். இஸ்லாமிய ஒளிபாய்ச்சும் நாடானது சவுதி.
இப்றாஹீம் (அலை) நபியின் பிரார்த்தனைகளும் நபி (ஸல்) அவர்களின் முயற்சிகளும் சவுதியை செல்வச் செழிப்பு மிக்க வளமான நாடாகத் திகழச் செய்திருக்கிறது.
இவ்வாறு கட்டம் கட்டமாக முன்னேற்றப் பாதையில் பயணித்து வந்த சவுதி அரேபியா இன்று அபரிமித வளர்ச்சி கண்டதொரு நாடாக விளங்குகின்றது. குறிப்பாக நவீன சவுதியைக் கட்டியெழுப்புவதில் இரு புனித பள்ளிவாசல்களின் காவலரும் மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சஊத்தும் இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மானும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். இதன் நிமித்தம் கோடிக்கணக்கான ரியால்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக முதலிடப்படுகின்றன. அதன் ஊடாக சவுதி முழுவதும் அபிவிருத்தி புத்தெழுச்சி ஏற்பட்டிருக்கிறது.
அந்த வகையில் முஸ்லிம்கள் புனித யாத்திரை மேற்கொள்ளவென இஸ்லாம் அங்கீகரித்திருக்கும் மூன்று புனித தலங்களில் முதலாமிடத்தை மக்காவிலுள்ள கஃபாவும் இரண்டாமிடத்தை மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியும் பெற்றுள்ளன. அந்த இரண்டு புனித தலங்களிலும் உலககெங்கிலும் இருந்து யாத்திரை வரும் முஸ்லிம்கள் எவ்வித சிரமங்களும் இன்றி தம் ஹஜ், உம்ரா கடமைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் சகல வசதிகளும் கொண்டவையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அத்தோடு நில்லாது இந்த இரு புனித பள்ளிவாசல்களதும் விஸ்தரிப்பும் அபிவிருத்தியும் தொடர்ந்த வண்ணமுள்ளன.
இவ்வாறான சூழலில் இரு புனித பள்ளிவாசல்களின் காவலரும் மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸின் விருந்தாளிகள் திட்டத்தின் கீழ் புத்திஜீவிகள், கல்விமான்கள், துறைசார் நிபுணர்கள், மார்க்க அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பல்துறை சார்ந்த ஆயிரம் பேருக்கு உம்ராவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விமான பயண டிக்கட், தங்குமிடவசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சவுதி அரசினால் வழங்கப்படுகின்றன.
சவுதியின் இஸ்லாமிய விவகாரம், பிரசாரம் மற்றும் வழிகாட்டல் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் இத்திட்டம் குறித்து அமைச்சர் ஷெய்க் அப்துல் லத்தீப் அப்துல் அஸீஸ் அல் ஷெய்க் விஷேட கவனம் எடுத்துக்கொள்ளக்கூடியவராக உள்ளார்.
அந்த வகையில் இத்திட்டத்தின் கீழ் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, நேபாளம், கிர்கிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அசர்பைஜான் உள்ளிட்ட 16 நாடுகளில் இருந்து 250 பேர் அண்மையில் உம்ராவுக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 10 பேர் இலங்கையராவர். அவர்களில் ஒருவராக உம்ராவை நிறைவேற்றவும் மக்கா, மதீனா, உஹது உள்ளிட்ட இஸ்லாமிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பும் எனக்கு கிடைக்கப்பெற்றது.
அதற்கேற்ப, நாம் முதலில் மதீனா சென்றடைந்தோம். அங்கு எமக்கு மகத்தான வரவேற்பும் உபசரிப்பும் அளிக்கப்பட்டது. மஸ்ஜிதுன் நபவியின் இமாம்களில் ஒருவரான ஷெய்க் அஹ்மத் பின் அலி அல் ஹுதைபியை சந்திக்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது.
மதீனாவிலுள்ள கிரவ்ன் பிளாஸா ஹோட்டலில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது மஸ்ஜிதுன் நபவி இமாம், ‘உலக முஸ்லிம்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது அவசியம். சக முஸ்லிம் சகோதர, சகோதரிக்கு உதவுவதும், ஆதரிப்பதும் ஒரு முஸ்லிமின் கடமையாகும். அது இஸ்லாமிய வரையறைகளையும் வழிகாட்டல்களையும் பேணியதாக இருக்க வேண்டும். குறிப்பாக ஒரு முஸ்லிம் சக முஸ்லிமுக்காக துஆ செய்வதன் மூலம் தமது கடமையை நிறைவேற்ற முடியும்’ என்று குறிப்பிட்டதோடு அல்லாஹ் அளித்துள்ள அருள்களுக்காக அவனுக்கு நன்றி செலுத்துவன் அவசியத்தையும் எடுத்துக்கூறினார். அவருடனான சந்திப்பு மிகவும் சிறப்பாகவும் பெறுமதி மிக்கதாகவும் அமைந்திருந்தது.
மேலும் மதீனாவில் நாம் தங்கியிருந்த காலப்பகுதியில் மஸ்ஜிதுன் நபவியில் வேளா வேளைக்கு தொழுகையில் ஈடுபடக்கூடிய வாய்ப்பை பெற்றுக்கொண்டோம். அத்தோடு நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தை (ரவ்ளா) சியாரத் (தரிசிக்கும்) வாய்ப்பும் கிடைக்கப்பெற்றது.
அதேநேரம் மஸ்ஜிதுன் நபவியின் நூலகத்தை பார்வையிடக்கூடிய சந்தர்ப்பமும் கிடைத்தது. அங்கு ஆதம் (அலை) அவர்களின் வரலாறு இலங்கையுடனும் சிவனொளிபாத மலையுடனும் தொடர்படுவதை ஆதாரபூர்வமாகக் கொண்டு எழுதப்பட்ட அரபு மொழி நூலொன்றையும் எம்மால் பார்வையிடக்கூடியதாக இருந்தது.
அதேவேளை நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்ற சமயம் அமைத்த முதலாவது பள்ளிவாசலான குபா பள்ளிவாசல் மதீனாவில் இருந்து சுமார் மூன்றரை கிலோ மீற்றர்கள் தூரத்தில் உள்ளது. நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்த காலப்பகுதியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் இப்பள்ளிவாசலுக்கு சென்று இறைவழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்கள். இப்பள்ளிவாசலை பார்வையிடவும் தொழுகையில் ஈடுபடவும் எமக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அத்தோடு உஹது மலைப் பிரதேசம், மதீனாவில் அமைந்துள்ள மன்னர் பஹ்த் அல் குர்ஆன் அச்சகம், மஸ்ஜிதுன் கிப்லதைன் பள்ளிவாசல், உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான மதீனா ஜாமிஆ இஸ்லாமிய்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கியத்துவம் மிக்க இடங்களையும் பார்வையிடும் வாய்ப்பையும் நாம் பெற்றுக்கொண்டோம்.
இவை இவ்வாறிருக்க, மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையும் போதனைகளையும் நவீன யுகத்திற்கு ஏற்ப இலகுவாகவும் தெளிவாகவும் மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் சர்வதேச கண்காட்சி மற்றும் அருங்காட்சியகத்தைப் (The international fair and museum of the prophet’s biography) பார்வையிடவும் எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
இதேவேளை, மதீனாவிலிருந்து முதலாம் நோன்பன்று உம்ராவுக்காக மக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாம் துல்குலைபா மஸ்ஜித்தில் தொழுததோடு உம்ராவுக்கான நிய்யத்தும் வைத்துக் கொண்டோம். மதீனாவில் இருந்து உம்ராவுக்கு செல்பவர்கள் இம்மஸ்ஜித்தில் நிய்யத் வைத்துக் கொள்வது அவசியமாகும்.
நாம் மக்காவை சென்றடையும் போது நோன்பு துறக்கும் நேரமானது. அதனால் நோன்பை துறந்த பின்னர் கடமையான தொழுகைகளை நிறைவேற்றிவிட்டு கஃபாவில் உம்ராவை நிறைவேற்றினோம். அதனைத் தொடர்ந்து மக்காவில் தங்கியிருந்த காலப்பகுதியில் வேளாவேளைக்கு கஃபாவில் தொழுகைகளில் ஈடுபடவும், நோன்பு துறக்கும் நிகழ்வுகளில் துஆ பிரார்த்தனைகளில் பங்குபற்றவும் எமக்கு வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.
அத்தோடு நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் வஹி அருளப்பட்ட (இறைத்தூது) ஹிரா குகை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள revelation exhibition என்ற கண்காட்சி கூடத்தைப் பார்வையிடவும் ஏற்பாட்டாளர்கள் எமக்கு வாய்ப்பளித்தார்கள். நபிகளாரின் வருகைக்கு முற்பட்ட கால அரபிகளின் வாழ்க்கை, அல் குர்ஆனின் முதல் ஐந்து வசனங்கள் ஹிரா குகையில் அருளப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்களை மிகவும் சரளமாகத் தெளிவுபடுத்தும் வகையில் அக்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சிக் கூடங்கள் அனைத்து யாத்திரிகர்களதும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெறக்கூடியதாக அமைந்தது.
கஃபாவிலும், மஸ்ஜிதுன் நபவியிலும் மஸ்ஜிதுல் கிப்லத்தைன், துல்குலைபா மஸ்ஜித் ஆகியவற்றில் தொழுகைகளில் ஈடுபட்ட போதும் கஃபாவில் நோன்பு துறந்த சந்தர்ப்பங்களிலும் தராவீஹ் தொழுகைகளின் போதும் உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்தவர்களையும் சந்திக்கவும் அவர்களுடன் அளவளாவவும் எமக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் ஆசியர்கள், ஆபிரிக்கர்கள், ஐரோப்பியர்கள் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உலகின் எல்லா நாட்டவர்களும் இருந்தனர்.
அனைவரும் எவ்வித பேதங்களும் ஏற்றதாழ்வுகளும் இன்றி ஒற்றுமையாக சகோதரத்துவ வாஞ்சையுடன் இறைவழிபாடுகளில் ஈடுபட்டனர். உலக முஸ்லிம்களின் ஐக்கியத்தை வெளிப்படுத்தும் பூமியாக விளங்குகிறது சவுதி.
என்றாலும் இரு புனித பள்ளிவாசல்களின் காவலரும் மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸின் விருந்தாளிகள் திட்டத்தின் கீழ் உம்ராவை மேற்கொள்ள அளிக்கப்பட்ட வாய்ப்புக்கான காலம் நிறைவுற்றதும் கஃபா, மக்கா, மதீனா உள்ளிட்ட சவுதி அரேபியாவை விட்டு பிரிய முடியாத கவலை நிறைந்த முகத்துடன் நான் உட்பட ஒவ்வொருவரும் தத்தம் நாடுகளுக்கு திரும்பத் தயாராகினோம்.
இச்சமயம் இவ்வாய்ப்பை எமக்களித்த இறைவனுக்கு முதலிலும் அதனைத் தொடர்ந்து சவுதி மன்னருக்கும் அந்நாட்டு இளவரசர் உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கும் குறிப்பாக இலங்கைக்கான சவுதி தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானிக்கும் தூதரக உத்தியோகத்தர்களுக்கும் சவுதி மக்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் நாம் தெரிவித்துக் கொண்டோம்.
மர்லின் மரிக்கார்