ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 75ஆவது பிறந்த தினம் இன்றாகும். அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது.
இலங்கை சுதந்திரம் பெற்று 75 வருடங்களைக் கடந்து விட்டது. இந்தக் காலப்பகுதியில் இந்நாடு பல தலைவர்களைப் பெற்றுள்ளது. அவர்களில் மக்கள் மீதும் நாட்டின் மீதும் தனித்துவம் மிக்க பற்று கொண்ட தலைவராக விளங்குபவர் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அதாவது 2022ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் முகம் கொடுத்தது போன்ற பொருளாதார நெருக்கடியை இந்நாடு முன்னொரு போதும் எதிர்கொள்ளவில்லை. அதுவே பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.
அப்பொருளாதார நெருக்கடியின் சவாலை எதிர்கொள்ளவோ மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கவோ முடியாத நிலையில் அன்றைய ஆட்சியாளர்கள் பதவிகளை விட்டு விலகிச் சென்ற போதிலும் நாட்டின் தலைமையை ஏற்க எவரும் முன்வராத இக்கட்டான சூழ்நிலை உருவானது.
அவ்வாறான சூழலில் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து நாட்டின் தலைமையைத் துணிந்து ஏற்றவர் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி அதளபாதாளத்தில் வீழ்ந்திருந்த நாட்டின் தலைமையை ஏற்ற அவர், அந்த நெருக்கடியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளித்தார். அதற்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை தொடங்கினார். அந்த வேலைத்திட்டங்கள் எதுவும் மக்களை பொருளாதார ரீதியில் மேலும் பாதிக்கும் வகையில் அமையாதபடி திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்தார்.
அதன் பயனாக நாடு முகம் கொடுத்திருந்த மிக மோசமான பொருளாதார நெருக்கடி, கட்டம் கட்டமாக நீங்கலானது. அந்நெருக்கடியினால் மக்கள் எதிர்கொண்ட தாக்கங்களும் பாதிப்புக்களும் குறைவடையவும் தொடங்கின. குறிப்பாக எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்காக நாட்கணக்கில் வரிசைகளில் காத்திருப்பதும் நாளாந்தம் முன்னெடுக்கப்பட்ட மின்வெட்டும் குறுகிய காலப்பகுதிக்குள் முடிவுக்கு வந்தன. அதன் ஊடாக ஜனாதிபதி மீதும் அவர் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புக்களும் உருவாகின.
பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி அதளபாதாளத்தில் விழுந்திருந்த நாட்டை குறுகிய காலத்தில் நம்பிக்கை அளிக்கும் வகையில் மீட்டெடுப்பதற்கு அவர் பெற்றுக்கொண்டுள்ள பரந்த அறிவும் அனுபவமும் அவருக்கு பக்கதுணையாக அமைந்தன.
நாட்டின் மீதும் மக்கள் மீதும் உண்மையான அன்பும் பற்றும் கொண்ட மக்கள் தலைவரான இவர், 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார். கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியைக் கற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் உயர்கல்வியைப் பெற்று பட்டதாரியானார். அத்தோடு இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டப் பரீட்சை எழுதி 1972 இல் சட்டத்தரணியானார்.
அதேவேளை, 1970 களில் அரசியலில் பிரவேசித்த இவர், 1970இன் நடுப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் களனித் தொகுதி அமைப்பாளரானார். அதனைத் தொடர்ந்த சொற்ப காலத்தில் பியகம தொகுதி அமைப்பாளரான இவர், 1977 தேர்தலில் பியகம தொகுதியில் ஐ.தே.க வில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானார். அன்று தொடக்கம் கடந்த 47 வருடங்களாக இவர் பாராளுமன்ற அரசியலில் பிரகாசித்து வருகின்றார்.
இந்தக் காலப்பகுதியில் பிரதியமைச்சர், அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், பிரதமர் எனப் பல பதவிகளை வகித்துள்ளார். அத்தோடு இப்பதவிகள் ஊடாக நாட்டுக்கும் மக்களுக்கும் அளப்பரிய சேவைகள் ஆற்றியுள்ளார். குறிப்பாக நாட்டின் பிரதமர் பதவியை பல தடவைகள் வகித்துள்ள பெருமையும் இவருக்குள்ளது.
அரசியலில் பரந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டுள்ள இவர், நாடு 2022 இல் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி தீர்க்கமான கட்டத்தை அடைந்திருந்த சமயம் தான் நாட்டின் தலைமையை ஏற்றார். அவர் பெற்றுள்ள அறிவும் அனுபவமும் இப்பதவியை அவரை துணிந்து ஏற்க வழிவகை செய்தது.
நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து திணறிக் கொண்டிருந்தது. அதனால் மக்கள் முகம் கொடுத்த நெருக்கடிகளும் அசௌகரியங்களும் நாளுக்கு நாள் அதிகரித்தன. மக்கள் செய்வதறியாது கையறு நிலைக்கு உள்ளாகியிருந்தனர். அதன் விளைவாக இப்பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சியையும் நிவாரணத்தையும் மக்கள் எதிர்பார்த்தார்கள். அதற்காக ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் முன்னெடுத்தார்கள். ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. அதனால் பொருளாதார நெருக்கடியோடு சேர்த்து அரசியல் கொதி நிலையும் உச்சத்தைத் தொட்டது.
இருந்தும் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க முடியாத இக்கட்டான நிலைக்கு அன்றைய ஆட்சியாளர்கள் உள்ளாகினர். அதனால் அன்றைய பிரதமரும் அவர் தலைமையிலான அரசாங்கமும் பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்த சொற்ப காலத்தில் அன்றைய ஜனாதிபதியும் கூட பதவி விலகினார்.
நாடே வங்குரோத்து நிலைக்கு உள்ளாகி தீவிர பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டிருந்த அந்த சூழலில் நாட்டையும் மக்களையும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கவோ அவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கவோ கூடிய வகையில் நாட்டின் தலைமையை ஏற்க எவரும் முன்வராத இக்கட்டான நிலை உருவானது.
அவ்வாறான சூழலில் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி நாட்டின் தலைமையை ஏற்ற ஜனாதிபதி பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார். அதற்கு தேவையான தலைமையையும் வழிகாட்டல்களையும் அவர் வழங்கினார். கட்சி அரசியல் நலன்களுக்கு அப்பால் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் பிரதிபலனாக நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அசௌகரியங்களும் பாதிப்புக்களும் கட்டம் கட்டமாக நீங்கத் தொடங்கின. குறிப்பாக எரிபொருள் மற்றும் எரிவாயுக்காக காத்திருக்கும் நிலை குறுகிய காலப்பகுதிக்குள் முடிவுக்கு வந்ததோடு போக்குவரத்து சேவையும் இயல்பு நிலைக்கு திரும்பியது. மின்வெட்டும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் விளைவாக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை ஏற்பட்டதோடு எதிர்பார்ப்புக்களையும் உருவாக்கின.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் பயனாக பணவீக்கம் ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. பங்களாதேசத்திடமிருந்து பெற்றிருந்த கடன் திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. உல்லாசப் பயணிகளின் வருகை பெரிதும் அதிகரித்துள்ளது. 2022 இல் 7 இலட்சமாகக் காணப்பட்ட உல்லாசப் பயணிகள் வருகை 2023இல் இரு மடங்காக உயர்ந்தது. பொருளாதார நெருக்கடியினால் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருட்கள் இறக்குமதிக்கு திரும்பவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு தேவையான அரிசியை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இலங்கை அரிசிக்கு வெளிநாடுகளில் கேள்வியும் ஏற்பட்டுள்ளது.
இவை இவ்வாறிருக்க, பொருளாதார நெருக்கடிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் முகம் கொடுத்த மக்களுக்கு நிவாரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான பசளை மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படுகின்றது. மக்கள் நன்மை பெறும் வகையில் மின் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதன் பிரதிபலனாக இவ்வாறு பல நிவாரணங்கள் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
என்றாலும் பொருளாதார நெருக்கடியினால் இக்கட்டான நிலைக்கு உள்ளாகி இருந்த நாட்டை ஜனாதிபதி அன்று பொறுப்பேற்றிராவிட்டால் இந்நாடு ஒரு ஆபிரிக்க நாடாகவே மாறியிருக்கும். அதனை எவராலும் தடுத்திருக்க முடியாது. நாட்டில் பட்டினியும் பசியும் பொருளாதார நெருக்கடியும் கோலோச்சும். வன்முறையும் வழிப்பறிக் கொள்ளையும் தலைவரித்தாடும்.
அவ்வாறான பேராபத்தில் இருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாத்த தலைவர் ஜனாதிபதியே ஆவார். அத்தோடு பொருளாதார நெருக்கடியினால் அதளபாதாளத்தில் விழுந்திருந்த நாட்டை நம்பிக்கை அளிக்கும் வகையில் கட்டியெழுப்பிய பெருமையும் பொருளாதாரத்தை மறுமலர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்லும் கௌரவமும் ஜனாதிபதியையே சாரும் என்றால் அது மிகையாகாது.
மர்லின் மரிக்கார்