உலகத்திலேயே மிகச்சிறிய நாடு “The Principality of Sealand (aka) Sealand”. இங்கிலாந்து நாட்டின் Suffolk கடற்கரையிலிருந்து 7 நாட்டிகல் மைல் தூரத்தில் அமைந்திருக்கிறது இந்த நாடு. இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் அசைவுகளைக் கண்காணிக்க இங்கிலாந்து இந்த நாட்டை (அதாவது அங்கிருக்கும் சிறு கோட்டையை) கடலுக்கு நடுவில் உருவாக்கியது. 300 பேர்களைத் தாங்கக்கூடிய இக்கோட்டையை ஒரு பெரிய படகில் முதலில் உருவாக்கி, பின் அதை தண்ணீருக்குள் இடம்மாற்றினர்.
போர் நடந்துகொண்டிருந்தபோது, 100க்கும் அதிகமான வீரர்கள் இதில் தங்கி ஜெர்மனியை கண்காணித்தனர். 1956ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து இந்தக் கோட்டையை பராமரிக்காமல் விட்டுவிட்டது. அதன் பின் 11 வருடங்கள் கழித்து இங்கிலாந்து இராணுவத்தில் வேலை செய்திருந்த Roy Bates என்பவர், தன் மகனுடன் இந்தக் கோட்டைக்கு வந்து தங்கினார். அவர் வந்தது என்னவோ ஒரு ரேடியோ ஸ்டேஷன் தொடங்க என்றாலும், ஆள்நடமாட்டமில்லாத அந்த இடத்தைத் தனதாக்கிக்கொள்ள முடிவு செய்தார். இங்கிலாந்து நாட்டின் சட்டத்திலிருந்த ஓட்டையைப் பயன்படுத்தி அதை வெற்றிகரமாக நிறைவேற்றினார் Bates-இன் வழக்கறிஞர்.
Sealand என்று பெயர் மாற்றப்பட்ட அந்த இடத்தை மீண்டும் தங்களுடையதாக்கிக்கொள்ள பிரிட்டிஷ் அரசு ஒரு கட்டத்தில் முடிவு செய்தது. ஆனால் அப்படி ஏதாவது செய்யப்போய் Bates-இன் குடும்பம் இறந்துவிட்டால் மக்களிடையே தங்கள் பெயர் கெட்டுவிடும் என்று அந்த யோசனையை செயல்படுத்தாமல் விட்டுவிட்டது.
அதற்குப் பின் தங்களுக்கென்று தனியாக அரசாங்கம், தேசியக்கொடி முதலியவற்றை தன் மனைவியின் விருப்பப்படி பேட்ஸ் வடிவமைத்தார். அவருடைய குடும்ப வாரிசுகள் Sealand-இன் இளவரசர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.